மும்பையின் ஆக்ரோசமான பந்து வீச்சு, கொல்கத்தா படுதோல்வி

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற 41–வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின.

இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

இதன்படி முதலில் பேட்டிங்கை துவங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியில் சூர்யகுமார் யாதவ் (36 ஓட்டங்கள்), எவின் லெவிஸ் (18 ஓட்டங்கள்) ரோகித் சர்மா (36 ஓட்டங்கள்) என கணிசமான பங்களிப்போடு பெவிலியன் திரும்பினர்.

கொல்கத்தா அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்த இஷான் கிஷான் 21 பந்துகளில் 5 பவுண்டரிகள் 6 சிக்சர்கள் உட்பட 62 ஓட்டங்கள் சேர்த்து ரசிகர்களுக்கு விருந்து படைத்தார். இவருக்கு பிறகு வந்த வீரர்களான ஹர்திக் பாண்ட்யா (19 ஓட்டங்கள்), பென் கட்டிங் (24 ஓட்டங்கள்) என சீரான இடைவெளியில் ஆட்டமிழந்தனர். மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 210 ஓட்டங்கள் சேர்த்துள்ளது. கொல்கத்தா அணி தரப்பில் அதிகபட்சமாக பியூஸ் சாவ்லா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

இதையடுத்து, 211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியினர் களமிறங்கினர். தொடக்கம் முதலே மும்பை அணியினரின் ஆக்ரோஷமான பந்து வீச்சு மற்றும் திறமையான பீல்டிங்கால் ஓட்டங்களைக் குவிக்கத் திணறிய கொல்கத்தா அணியினர், விக்கெட்டுகளையும் பறி கொடுத்தனர்.

சுனில் நரேன் (4 ஓட்டங்கள்), கிறிஸ் லின் (21 ஓட்டங்கள்), ராபின் உத்தப்பா (14 ஓட்டங்கள்), ஆந்த்ரே ரசூல் (2 ஓட்டங்கள்) என களமிறங்கிய அனைத்து வீரர்களும் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பியதால் மைதானத்திலிருந்த கொல்கத்தா ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.

இந்நிலையில் அணித்தலைவர் தினேஷ் கார்த்திக்கும் வெறும் 5 ஓட்டங்களில் வெளியேற கொல்கத்தா அணியின் தோல்வி உறுதியானது.

மும்பை அணியின் திறமையான பந்து வீச்சால் 18.1-வது ஓவர்களில் கொல்கத்தா அணி 108 ஓட்டங்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் 102 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி அசத்தல் வெற்றி பெற்றது.

மும்பை அணியில் அதிகபட்சமாக கர்னல் பாண்டியா, ஹர்திக் பாண்டியா ஆகியோர் 2 விக்கெட்டுகளையும், பும்ரா, மிக்கெல்நாகன், மயங்க் மார்கெண்டே, பென் கட்டிங் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

Leave a Response