சாகிறார் தமிழர் கொலையுண்டு, தமிழர் உயிருக்கு விலையுண்டு-உரக்கச் சொல்கிறது பச்சைத் தமிழகம்.

மே 18, 2015, திங்களன்று காலை 11:00 மணி முதல் 11:02 மணி வரை தமிழகம் முழுவதும் “சாகிறார் தமிழர் கொலையுண்டு, தமிழர் உயிருக்கு விலையுண்டு!” என்ற முழக்கத்தோடு மவுன அஞ்சலி செலுத்தும் நிகழ்வை நடத்த “பச்சைத் தமிழகம்” இயக்கம் முடிவு செய்திருக்கிறது. தமிழர்களின் வளம், வாழ்க்கை, வருங்காலத்தைக் காக்க அண்மையில் தொடங்கப்பட்டிருக்கும் பசுமைக் கூட்டியக்கமான “பச்சைத் தமிழகம்” இயக்கத்தினர் ஏப்ரல் 18, 2015 அன்று சென்னையில் நடத்திய கலந்தாலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

சந்திரபாபு நாயுடுவின் ஆந்திர அரசும், அதன் காவல்துறையும், வனத்துறையும், மரக்கொள்ளையர்களும் அனைவருமாகச் சேர்ந்து சதித்திட்டமிட்டு, 20 தமிழ் தொழிலாளர்களை சித்திரவதைக்குள்ளாக்கி படுகொலை செய்திருக்கின்றனர். பிறரால் தமிழர்கள் கொல்லப்படுவது இது முதன்முறையல்ல. இலங்கைக் கடற்படையால் தமிழ் மீனவர்கள் ஏறத்தாழ 600 பேர் இதுவரை கொல்லப்பட்டிருக்கின்றனர்; பல்லாயிரக்கணக்கானோர் முடமாக்கப்பட்டிருக்கின்றனர். ஈழத்தில் ஒன்றரை லட்சம் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட மாபெரும் ரணம் இன்னும் நம் மனங்களில் பச்சைப்புண்ணாக இருக்கிறது.

தென்தமிழகத்தில் கடந்த ஆறு மாதங்களில் ஏறத்தாழ 60 பேர் சாதீய வன்மத்துடன் நம்மவர்களாலேயே படுகொலை செய்யப்பட்டுள்ளனர். தமிழகமெங்கும் பெண்கள் கவுரவக் கொலைக்கு ஆளாகின்றனர். ஒருபுறம் தமிழர்கள் இப்படித் தொடர்ந்து வன்கொலை செய்யப்படும்போது, மறுபுறம் குடியினால் ஏற்படும் சாலை விபத்துக்களாலும், தற்கொலைகளாலும், கொலை-கொள்ளை போன்ற குற்றங்களாலும் இன்னும் அதிகமான எண்ணிக்கையில் உயிரிழக்கின்றனர்.

இம்மாதிரி மரணங்கள் உலகெங்கும் நடந்தாலும், தமிழகத்தில் மட்டும்தான் அரசும், அமைச்சர்களும், அதிகாரவர்க்கமும் மேற்குறிப்பிட்ட அநியாயச் சாவுகளை மறுக்கவும், மறைக்கவும், மழுப்பவும் முயற்சிக்கின்றனர். அண்மையில் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏழு குழந்தைகள் மர்மமான முறையில் மரணமடைந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம்.

தமிழக அரசியல் தலைவர்கள் சிலர் தாங்கள் பதவியிழக்கும்போது, அல்லது அரசியல் பின்னடைவுகளை சந்திக்கும்போது, அதிகமான எண்ணிக்கையில் அப்பாவித் தமிழர்கள் சாவதை வீரப்பதக்கங்கள் போல அறிவித்துக் கொண்டாடி மகிழ்கின்றனர்.

மத்திய அரசும் தன் பங்குக்கு கூடங்குளம், கல்பாக்கம் அணுஉலைப் பூங்காக்கள், மீத்தேன், நியூட்ரினோ, கெயில் என ஏராளமான அழிவுத் திட்டங்களை தமிழர் மீது திணித்து வருங்காலச் சாவுக்கு வழிவகுத்துக் கொண்டிருக்கிறது.

ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, தமிழர் உயிர் ஒரு பொருட்டாக மதிக்கப்படாத ஓர் அவலத்தை கண்கூடாகக் காண்கிறோம். தமிழரும், ஏனையோரும் நம் உயிருக்கு விலையுண்டு என்பதை உணர்ந்திட, தமிழர் உயிருக்கு உரிய மரியாதை அளித்திட,

எதிர்வரும் மே 18, 2015, திங்களன்று, காலை 11:00 மணி முதல் 11:02 மணி வரை தமிழகத்தின் எந்தப் பகுதியில் இருந்தாலும், என்ன வேலை செய்துகொண்டிருந்தாலும், தமிழர் அனைவரும் இரண்டு நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்திட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தியவாறே, உயிரோடிப்பவருக்கு உரிய மரியாதை அளிக்கவும் உறுதி ஏற்போம்.

எதிர்வரும் மே மாதம் முதல் வாரத்தில் “பச்சைத் தமிழகம்” இயக்கத்தினர் தமிழகத்தில் உள்ள பல்வேறு ஊடகப் பொறுப்பாளர்கள், கட்சிகள், இயக்கங்களின் தலைவர்கள், பிற குடிமைச் சமூகத் தலைவர்கள் அனைவரையும் நேரில் சந்தித்தோ, அல்லது கடிதம் மூலமாகவோ தொடர்புகொண்டு இந்த மவுன அஞ்சலி நிகழ்வுக்கு ஆதரவு திரட்டுவது என்றும் திட்டமிட்டிருக்கின்றனர். தமிழ்ச் சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பு நல்க வேண்டுமென கோரியிருக்கின்றனர்.

 

2 Comments

  1. இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை ,
    ஒடாத மானும்,போராடஇனமும் வென்றதாக வரலாறு இல்லை.
    …..மேதகு.வே.பிரபா
    உயர்த்தி பிடிப்போம் கொள்கையை,தமிழினம் உயர!

Leave a Response