
மீண்டும் அலைபாயுதே போல் இளமைத்துள்ளலுடன் ஒரு படத்தைக் கொடுத்துத் தன்னைத் தக்கவைத்துக்கொண்டிருக்கிறார் மணிரத்னம்.
திருமணபந்தம் பற்றி அண்மைக்காலத்தில் குறிப்பாக மென்பொருள்துறையினரின் காதல் திருமணம் உடனடி திருமணமுறிவு ஆகியன திருமணபந்தத்தின் மீது ஏற்படுத்தியிருக்கும் பயஉணர்வு அதன்விளைவாக அங்கொன்றும் இங்கொன்றுமாக திருமணபந்தமின்றி அதன் சுகங்களை மட்டும் அனுபவிக்க நினைக்கும் திருமணம் செய்யாமல் சேர்ந்துவாழும் வாழ்க்கைக்கான ஆதரவுக் குரல்கள் ஆகியனவற்றை மட்டுமே கவனத்தில் கொண்டு இந்தப்படத்தின் திரைக்கதையை எழுதியிருக்கிறார் மணிரத்னம். கூடவே குடும்பம் என்கிற அமைப்பு உடைந்துவிடக்கூடாது என்கிற பதட்டமும் அவருக்குள் இருந்துகொண்டேயிருக்கிறது,
இந்தப்படத்தில் காணொளிவிளையாட்டுளை உருவாக்கும் நிபுணராகப் பணியாற்றும் நாயகன் துல்கர், கட்டிடத்துறையில் பணியாற்றும் நாயகி நித்யா ஆகியோரை வைத்துக்கொண்டு இந்தக்கதையை வெற்றிகரமாகச் சொல்லியிருக்கிறார் மணிரத்னம். காதல் காதல் காதல் என்று படம் தொடங்கியதிலிருந்து இளமைத்துள்ளல் பொங்குகிறது. இப்படித்தான் பொண்ணுங்க பின்னாடி சுத்துவியா? பொறந்ததில இருந்து என்கிற வசனம் இன்னும் பல ஆண்டுகளுக்குப் பயன்பாட்டில் இருக்கும்.
துல்கரும் நித்யாவும் மணிரத்னம் நினைத்ததைக் காட்டிலும் நல்லநடிப்பை வெளிப்படுத்தி அந்தப்பாத்திரங்களுக்குப் பலம் சேர்த்திருக்கிறார்கள். அவர்கள் பேசும் கொச்சைத்தமிழ்தான் கொஞ்சம் உறுத்துகிறது. இருவரும் மேல்தட்டுவர்க்கத்தைத் சேர்ந்தவர்கள் என்பதும் கதைக்களம் மும்பை என்பதும் கொச்சைத்தமிழுக்கு நியாயம் சொல்லக்கூடியவை. தமிழ் கேட்கவேண்டும் போலிருந்தது, தமிழ்ப்பையன்கிட்ட உடனே ஒத்துக்கலாமா? போன்ற வசனங்களை தன்னை ஒரு மூன்றாவது மனிதராகக் கருதிக்கொண்டு எழுதியிருக்கிறார் மணிரத்னம்.
துல்கர் நித்யா காதலைப் பார்க்கிற இன்றைய இளைஞர்கள் இதுபோல் நாமும் காதலிக்கவேண்டும் என்று வெறிகொள்வார்கள். முந்தையஇளைஞர்கள் இதுபோல் நாம் காதலிக்கவில்லையே என்று ஏங்குவார்கள்.
திருமணம் வேண்டாம் ஆனால் அதில் கிடைக்கும் சுகங்கள் மட்டும் வேண்டும் என்று நினைக்கிற துல்கரும் நித்யாவும் ஒரேவீட்டில் தங்குவதை, திருமணபந்தத்தின் மூலம் ஒருவருக்கொருவர் நல்லபுரிதலுடன் விட்டுக்கொடுத்தல்களுடன் அன்பைக்கொட்டி வாழ்ந்துகொண்டிருக்கும் பிரகாஷ்ராஜ் லீலாசாம்சன் தம்பதியினர் ஏற்றுக்கொள்வது பொருத்தமாகத் தெரியவில்லை.
பிரகாஷ்ராஜ் நல்லநடிகர், அவருக்கு இணையாக முதல்படத்தில் நடித்திருக்கும் லீலாசாம்சன் மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார். வழிதெரியாமல் கோயிலில் உட்கார்ந்திருக்கும் காட்சி உட்பட பல காட்சிகளில் வியக்கவைத்துவிட்டார்.
அதிபுத்திசாலிகளாகக் காட்டப்படும் நாயகன் நாயகி ஆகிய இருவருமே திருமணம் வேண்டாம் என்பதற்குச் சொல்லும் காரணங்கள், காரணங்கள் கணக்கிலேயே இல்லை. பில்கேட்ஸ் மாதிரி ஆவதற்கும் பாரிஸ் போய்ப்படிப்பதற்கும் திருமணம் தடையாகிவிடும் என்று சமையலறைகளே இல்லாமல் குடியிருப்புகள். உருவாகிக்கொண்டிருக்கும் 2015 இல் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.
ஏ.ஆர்.ரகுமான் படத்துக்குப் பெரும்பலம். முதல்பாதிப்படத்தில் மாயவித்தை நடத்தியிருக்கிறார். துல்கரும் நித்யாவும் சந்திக்கும் இடங்களில் ஒலிக்கும் பின்னணிஇசை மயக்குகிறது. அகமதாபாத் நகரில் இருக்கும் இஸ்லாமியகட்டிடக்கலைக்குச் சான்றாக விளங்கும் மாளிகையைக் காட்டும்போது ரகுமானின் இசையும் பின்னணியில் ஒலிக்கும் பாடலும் மனதை வருடுவதோடு அந்தப்பழங்காலக்கட்டிடத்துக்குப் பெருமையும் சேர்த்திருக்கிறது. திரைக்கதையில் தன்னுடைய இளமையை மணிரத்னம் வெளிப்படுத்தினால் அதற்குப் பலபடிகள் மேலேபோய் தன்னுடைய துள்ளலைக் காட்டியிருக்கிறார் ஏ.ஆர்.ரகுமான்.
பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவில் மும்பை புதிதாகத் தெரிகிறது. தன்னைக்காட்டிக்கொள்ள மெனக்கெடாமல் திரைக்கதைக்குப் பலமாக இருக்கிறார் பி.சி.
துல்கரும் நித்யாவும் தொடர்வண்டியைத் தவறவிட்டுவிட்டு இரவுதங்குகிறார்கள் என்பது முதல்பாதியில் பலவீனமான இடம். மகப்பேறு மருத்துவமனைக்கு துல்கரைக் கூட்டிக்கொண்டுவருகிற காட்சி ரசனையான ரகளையான காட்சி. இரண்டாம்பாதியில் வசனங்கள் அதிகமாக இருக்கின்றன. உறவுகள் பலப்படும்போது எனக்கே எனக்கு என்கிற உணர்வும் வந்தே தீரும் என்பதை அழகாகச் சொல்லியிருக்கிறார் மணிரத்னம்.
திருமணத்துக்கு முந்தைய உடலுறவு தப்பு என்கிற கோட்டுக்குப் பக்கத்தில் திருமணம் செய்துகொள்ளாமல் சேர்ந்துஇருக்கலாம் என்கிற பெரியகோட்டைப் போட்டுவிட்டார் மணிரத்னம். இதனால் அவர்கள் இருவரும் திருமணத்துக்கு முந்தியே உடலுறுவில் ஈடுபட்டுவிட்டார்கள் என்பது கவனத்துக்கே வராமல் இருவரும் திருமணம் செய்துகொண்டால் போதும் என்கிற எண்ணத்துக்கு மக்களைக் கொண்டுவந்துவிட்டார்.
(துல்கரின் அண்ணன் நித்யாவைப் பெண் கேட்பதும் நித்யாவின் அம்மா துல்கர் வீட்டுக்குப் போவதும் இதற்கு வலுச்சேர்க்கத்தான்). திருமணத்துக்கு முன்பு உடலுறவு தப்பு என்பதையே மறக்கவைத்திருப்பது மணிரத்னத்தின் புத்திசாலித்தனம்.
