
நேற்று ஐபிஎல் லுக்கு எதிராகப் போராட்டம் நடத்தியதால் கைது செய்யப்பட்டு இர்வு இரண்டு மணிக்கு மேல் விடுவிக்கப்பட்ட இயக்குநர் பாரதிராஜா, சீமான் உள்ளிட்டோர் இன்று பகல் 1 மணிக்கு செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பாதுகாப்பு குழு அமைப்பின் சார்பில் பாரதிராஜா, சீமான், தமீமுன் அன்சாரி, கருணாஸ், அமீர் உள்ளிட்டோர் செய்தியாளர்களை சந்தித்தபோது பாரதிராஜா பேசியதாவது…
எல்லோருமே தங்கள் பணியை சரியாகச் செய்தார்கள் அடி வாங்கினார்கள் தாக்கப்பட்டார்கள், எனக்கு வருத்தமாக இருந்தது. இன்று கூட பாருங்கள், ஆக்ஷன் இருந்தால் ரியாக்ஷன். எல்லோரும் சொல்கிறார்கள் வன்முறை நிகழ்ந்து விட்டது என்று கூறுகிறார்கள். அது வன்முறை அல்ல எதிர்வினை.
மிகவும் அறவழியில் நாங்கள் சென்றோம். வினை இல்லாமல் எதிர்வினை வராது. எதிர்வினையை மட்டும் ஏன் பார்க்கிறீர்கள்.
வினை என்னவென்று ஊடகங்கள் கூற வேண்டும். பூதாகரமாக எதிர்வினையை கூறக்கூடாது. வினையை என்னவென்று சொல்லுங்கள் அப்போதுதான் அவர்களுக்கு புரியும். நீங்களும் எங்களில் ஒரு பகுதி. மிகத்தலையாய பகுதி ஊடகங்கள் கையில் உள்ளது.
பிரதமர் வரும்போது கறுப்புக்கொடி காட்டுவது நிச்சயம். எங்கள் எதிர்ப்பை, உணர்வை, வலியைக் காட்ட நிச்சயம் கறுப்புக்கொடி காட்டுவோம். காவிரி மேலாண்மை வாரியம் அமைத்துக்கொடுத்திருந்தால் நாங்கள் சிவப்புக்கம்பள வரவேற்பு கொடுத்திருப்போம். இவ்வளவு கொடுமைக்கு மத்தியில் மத்தியிலும் நீங்கள் எங்கள் மண்ணில் காலடி எடுத்து வைக்கிறீர்கள் எங்கள் உணர்வை காட்டும் வகையில் கறுப்புக்கொடி காட்டுவோம் என்றார்.
ரஜினிகாந்த் காவலர்கள் தாக்கப்பட்டதை கண்டித்துள்ளார், பத்திரிகையாளர் தாக்கப்பட்டதை, போராட்டக்காரர்கள் தாக்கப்பட்டதை கண்டிக்கவில்லையே? என்று கேட்டதற்குப் பதிலளித்த பாரதிராஜா,
நீங்களே சொல்லிவிட்டீர்களே, அவ்வளவு பேர் தாக்கப்பட்டபோது அவர் கண்டிக்கவில்லை, கைது செய்யப்பட்ட பாரதிராஜா பற்றி பேசவில்லை. முன்பு காவிரி பிரச்சினையில் தமிழ்நாடு வாகன எண் கொண்ட வாகன ஓட்டுனர்களை டோல்கேட்டில் வைத்து தாக்கினார்களே என்ன செய்தார்.
கேபிஎன்னுக்கு சொந்தமான 200 பேருந்துகள் எரிக்கப்பட்டபோது என்ன சொன்னார், அதெல்லாம் வன்முறையாக தெரியவில்லையா. நான்கு நாட்களுக்கு முன் தினம் கூட ஒரு வாகன ஓட்டுனரை தாக்கி குத்துகிறார்களே அது அவர் கண்ணுக்கு தெரியவில்லையா. குரல் கொடுக்கவில்லையே. அது வன்முறையாக தெரியவில்லையா.
இதுவரை பெட்டிக்குள் பூ தான் இருந்தது என்று நினைத்தோம், இப்பத்தான் தெரிகிறது பூவுக்குள் பூநாகம் இருப்பது தெரிகிறது. ஒன்றுமில்லை. ஐபிஎல் மைதானத்திற்குள் கொடியுடன் போராடினார்களே அதைப் பாராட்டி இருக்க வேண்டாமா? ரஜினி இப்போது வாய் திறக்கும் போது லிப் மூமெண்ட் மட்டும் தான் அவருடையது, டப்பிங் யாரோ பேசி இருக்கிறார்கள்.
இவ்வாறு பாரதிராஜா பேசினார்.


