உச்சநீதிமன்றத் தீர்ப்பு, ஜெயலலிதாவுக்குப் பெரும் பின்னடைவு– சட்டநிபுணர்கள் கருத்து.


ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டில் பவானிசிங் அரசுவழக்குரைஞராகப் பணியாற்றுவதற்குத் தடைகோரிய திமுக பொதுச்செயலர் க.அன்பழகனின் மனு மீது இன்று (ஏப்ரல் 15) சொல்லப்பட்ட தீர்ப்பில், இருவேறு கருத்துகள் வந்துவிட்டன.
நீதிபதி மதன்லோகூர், தன்னுடைய தீர்ப்பில், பவானிசிங் அரசுத்தரப்பின் முறையான நியமனம் இன்றி அவர் வாதாடியிருக்கிறார் அது சரியல்ல எனவே இது தவறு என்று சொல்லியிருக்கிறார். இன்னொரு நீதிபதியான பானுமதி, கீழ்நீதிமன்றத்தில் வாதாடிய ஒருவர் மேல்முறையீட்டு வழக்கிலும் வாதாடலாம் எனவே பவானிசிங் வாதாடியது செல்லும் என்று சொல்லியிருக்கிறார்.
இரண்டு நீதிபதிகளுக்கிடையே முற்றிலும் மாறுபட்ட கருத்து வந்துவிட்டதால் இவ்வழக்கு மூன்றுபேர் கொண்ட அரசியல்சாசன அமர்வுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது. இதைª£யட்டி உச்சநீதிமன்றத் தலைமைநீதிபதி மூன்றுபேர் கொண்ட அமர்வை அறிவிப்பார் என்று சொல்லப்படுகிறது.
இதனால் கர்நாடகஉயர்நீதிமன்றத்தில் நிலுவையில் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பும் தள்ளிப்போகும் என்று சொல்கிறார்கள். உச்சநீதிமன்றம், அந்த வழக்கின் தீர்ப்பு குறித்து எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லையென்றாலும் நடைமுறைப்படி உச்சநீதிமன்றத்தில் இறுதித்தீர்ப்பு வந்தபின்புதான் இந்தத்தீர்ப்பு வரும் என்றும் சொல்லப்படுகிறது.
கோடைவிடுமுறை அதற்குப் பிறகு புதியஅமர்வில் நடக்கும் வாதப்பிரதிவாதங்கள் முடிவடைய சுமார் மூன்றிலிருந்து ஆறுமாதங்கள் வரை ஆகும் என்றும் சொல்கிறார்கள். இதனால் கர்நாடகஉயர்நீதிமன்றத்தின் தீர்ப்பும் ஆறுமாதங்கள் வரை தள்ளிப்போகலாம் என்று சட்டநிபுணர்கள் சொல்கிறார்கள்.
இது அரசியல் ரீதியாக ஜெயலலிதாவுக்குப் பெரும்பின்னடைவையே ஏற்படுத்தும் என்றும் சொல்கிறார்கள்.

Leave a Response