காலகட்டம்- திரைப்படவிமர்சனம்.


பவனும் கோவிந்தும் இணைபிரியாத நண்பர்கள். மீனவரான பவன் கடலுக்குச் சென்றுவிட்டுக் கரைக்கு வந்ததும் கையில் குழந்தையோடு காத்திருக்கும் மனைவியிடம் தலைவர் எங்கே என்று நண்பனைத் தேடும் அளவுக்கு நெருங்கியநட்பு. நண்பன் கோவிந்த் திரைப்படங்களில் நடனமாட வேண்டும் என்று திரிந்துகொண்டிருக்கும் நடனக்காரர். பவனாவது ஓரிருஇடங்களில் படகில் கடலுக்குப்போய்வருகிறார். ஆனால் கோவிந்த் நடனமாடுவதாக எங்கும் காணோம்.
இவ்வளவு நெருங்கியநட்பு என்றாலே அதில் சிக்கல் வருவதுதான் கதையாக இருக்கும். இந்தக்’காலகட்டத்’திலும் அது மாறவில்லை. பவனின் அழகான மனைவிமீது ஆசைப்படுகிற நான்கடவுள்ராஜேந்திரன் அதற்கு அவர் ஒப்புக்கொள்ளாததால் அவர் மீது அபாண்டப்பழி சுமத்துகிறார். அதனால் நட்புக்குள் விரிசல் மட்டுமின்றி பவனின் குடும்பம் சிதறிவிடுகிறது.
மனைவி வேடத்தில் நடித்திருக்கும் உமா, அழகாகவே இருக்கிறார். நன்றாக நடிக்கவும் செய்திருக்கிறார். கடற்கரைமக்கள் மொழியை மிகஇயல்பாகப் பேசுகிறார். கணவரின் நண்பர் என்பதால் கோவிந்தை அவர் வீட்டுக்கு சாப்பிடவாங்க என்று இயல்பாக அழைப்பதுகூடத் தப்பாகத் தெரிகிற மாதிரி எடுத்திருக்கிறார் இயக்குநர் கே.பாஸ்கர்.
பவன், கோவிந்த் நட்பு சிலஇடங்களில் இயல்பாகவும் பல இடங்களில் செயற்கையாகவும் இருக்கிறது. நண்பன் மீது சந்தேகம் வந்ததும், இனிமேல் இங்க வராதீங்க என்று தொடங்கி அவர் ஏன் என்று விடாமல் கேட்கும்போது போடா என்று பவன் வெடிக்கிறஇடம் நன்றாக இருக்கிறது. சலிப்பூட்டும் வகையில் தவறான கண்ணோட்டங்களை உண்டாக்கியிருக்கிறார்கள்.
கோவிந்துக்கு ஒன்றுக்கு இரண்டுநாயகிகள் இருக்கிறார்கள். ஆனாலும் இரண்டிலும் எவ்வித அழுத்தமுமில்லை. நட்பைப் பற்றிய கதை என்று முடிவுசெய்துவிட்டதால் இவர்களை ஊறுகாய் போலப்பயன்படுத்தியிருக்கிறார்கள்.
பவனின் எதிர்வீட்டிலேயே கடைவைத்துக்கொண்டு வட்டிக்கும் விட்டுக்கொண்டிருக்கும் நான்கடவுள்ராஜேந்திரனின் கதாபாத்திரம் சபலபுத்திகொண்ட ஆண்களுக்கு எடுத்துக்காட்டு. அவருடைய மொட்டைதலையில் வைக்கப்பட்டிருக்கும் செயற்கைமுடிக்கு முக்கியத்துவம் கொடுத்து அவ்வளவு நீளமான காட்சி சிரிக்கவைக்கவில்லை.
பவன் சிறைக்குப் போனபிறகு நடக்கும் காட்சிகள் எல்லாம் எதார்த்தத்துக்கு முற்றிலும் புறம்பாக இருக்கிறது. யாரோ ஒரு புதியஆள் வந்து அடித்ததும் ஊர்மக்கள் முன்னால் நானகடவுள்ராஜேந்திரன் உண்மைகளைச் சொல்கிறார். மனைவிமேல் எந்தக்குற்றமும் இல்லை என்று பவன் உணர்வதற்காக அமைக்கப்பட்டிருக்கும் அந்தக்காட்சிகள் தாம் படத்துக்குப் பலமாக அமையவேண்டியவை. அவற்றை ஏனோதானோவென்று சொல்லிவிட்டது போலத் தோன்றுகிறது.
ஏ.ஆர்.மகேந்திரன் இசையில் கானாபாலா குரலில் வருகிற உன்னாலேமயிலே இருப்பது ஜெயிலே என்கிற பாடல் கேட்கிறமாதிரி இருக்கிறது.
கதை திரைக்கதை வசனம் பாடல்கள் எழுதி இயக்கியிருக்கிற கே.பாஸ்கர், சந்தேகம் என்பது மிகமிகக் கொடுமையான நோய் அது வந்தால் பலரைப் பலிவாங்கிவிடும் என்கிற கருத்தைச் சொல்வதற்காகவே இந்தப்படத்தை எடுத்திருப்பதாகத் தெரிகிறது. அதற்காக அவர் அமைத்திருக்கும் திரைக்கதை வலிமையாக இல்லை.

Leave a Response