
திரைப்பட நடிகர்கள் பொதுவாக வருமானவரியைச் சரியாகக் கட்டமாட்டார்கள் என்பது பொதுவான கருத்து. கமல் மட்டும் நான் வருமானவரியைச் சரியாகக் கட்டுபவன் என்று சொல்வார். அதற்கடுத்து வருமானவரி பற்றி வெளிப்படையாகப் பேசியிருக்கிறார் சிவகார்த்திகேயன். தமிழ் இந்து நாளேட்டுக்கு தன் மனைவி ஆர்த்தி பற்றி அவர் அளித்திருக்கும் பேட்டியில் இச்செய்தி வெளியாகியிருக்கிறது.
அப்பேட்டியில்,
எனது வருமானவரி தொடர்பான வேலைகளை ஆர்த்திதான் கவனித்துக்கொள்கிறார். கடந்த ஆண்டு நான் அனைத்து வரியையும் சரியாகக் கட்டியுள்ளேன் என்று வருமான வரித் துறையில் ‘தங்கச் சான்றிதழ்’ கொடுத்தார்கள். நான் மட்டுமே பார்த்திருந்தால்கூட, சரியாகப் பார்த்துக் கட்டியிருப்பேனா என்று தெரியவில்லை. இவ்வளவு நேர்த்தியாகச் செய்திருக்கிறாரே என்று ரொம்ப சந்தோஷப்பட்டேன். அவர் எனக்குக் கொடுத்த பரிசாக நினைத்து, அதை வீட்டில் ஃபிரேம் செய்து மாட்டியிருக்கிறேன். நாம் வரியைச் சரியாகக் கட்ட வேண்டும் என்று எளிதாகச் சொல்லிவிடலாம். ஆனால், வீட்டில் குழந்தை வளர்ப்புக்கு இடையே அனைத்தையும் சரிபார்த்து, சரியாக வரியைச் செலுத்தி ‘தங்கச் சான்றிதழ்’ பெற்றுக் கொடுப்பது சாதாரண விஷயமல்ல.
இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.


