
சீனாவில் நடந்த இரண்டு புத்தகக்கண்காட்சிகளில் தமிழகத்திலிருந்து ஆழி பதிப்பகம் கலந்துகொண்டது. அவ்வனுபவம் குறித்து ஆழிசெந்தில்நாதன் எழுதியுள்ள குறிப்பில்….
பத்து நாள்கள் சீனாவிலிருந்துவிட்டு இருநாள்களுக்கு முன்பு ஊர் திரும்பினேன்.
சீனாவில் ஜினான் நகரத்திலும் பெய்ஜிங் நகரத்திலும் நடந்த இரு பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சிகளில் ஆழி சார்பாக கலந்துகொண்டு திரும்பியிருக்கிறேன். ஒரு மண்டலம் ஒரு பாதை சிறப்பு புத்தகக் கண்காட்சியில் ஆழி சார்பாக தமிழ்நூல்களை காட்சிப்படுத்த ஒரு வாய்ப்பு அளித்தார்கள்.
ஆழி மட்டுமின்றி பல பதிப்பகங்கள் வெளியிட்ட முக்கியத் தமிழ்நூல்களின் ஆங்கில மொழிபெயர்ப்புகளைக் கண்காட்சிக்கு வைத்திருந்தோம். சொல்லப்போனால் தமிழ்ப் பதிப்புலகின் பிரதிநிதியாகவே அங்கே கலந்துகொண்டேன். பெய்ஜிங் புத்தகக் கண்காட்சியிலும் பல ஆசிய நாடுகளின் பதிப்பாளர்களோடு கலந்துரையாடி வந்திருக்கிறேன்.
“தமிழை உலகுக்கு, உலகைத் தமிழுக்கு” என்கிற ஆழியின் புதிய இலட்சியத்துக்கு பெரும் உற்சாகம் அளித்த பயணமாக இது இருந்தது. இதுமட்டுமின்றி எனது மொழிபெயர்ப்புத் துறைசார்ந்த தொழிலுக்காகவும் சில நாட்கள்.
கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் சில புதிய நூல்களுக்கான உரிமைகளை வாங்கிவந்திருக்கிறோம். அத்துடன் சங்கத் தமிழ் இலக்கியங்களை சீனம் உள்ளிட்ட பல மொழிகளில் கொண்டுவருவதற்கான ஏற்பாடுகளையும் செய்துவிட்டு வந்திருக்கிறோம். இந்த நூல்கள் வரும் ஜனவரி முதல் வெளிவரத் தொடங்கும்.
அரங்கில் நாங்கள் வைத்திருந்த தமிழ் சீன கல்வெட்டின் புகைப்படம் ஒன்றைப் பார்த்து ஆர்வமாக அது என்ன என்று கேட்கவந்தவர்களுக்கு எல்லாம் தமிழக சீன உறவைப் பற்றி வகுப்பு எடுத்துக்கொண்டிருந்தேன்.
சீனாவின் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவரான ஜாங் வய்யைச் சந்தித்தது. கன்ஃபூஷியஸின் சொந்த ஊரான ச்சி ஃபூவுக்குச் சென்றுவந்த அனுபவம் குறித்தெல்லாம் விரிவாக எழுதவேண்டும். அற்புதம், அற்புதம்.
இவ்வாறு அவர் எழுதியிருக்கிறார்.
ஆழிசெந்தில்நாதனின் பணி சிறக்க வாழ்த்துகள்.


