
பிக் பாஸ்
ஓவியா என்ற துறுதுறு பெண்ணின் காதல் தோல்வி அது நிகழ்ச்சியின் திரைக்கதையில் இல்லை, அது இயல்பானது உணர்வுபூர்வமானது உண்மையானது என வாதிடும் அளவுக்கு அவரது காதலுக்கு வக்காலத்து வாங்க பலரின் இதயங்களும் களவாடப்பட்டன. இதுதான் அந்த திரைக்கதையின் வெற்றி.
அதுமட்டுமல்ல அந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒரு பகுதியான ‘வாரம் ஒருவர் வெளியேற்றப்படுதல்’ என்ற வகையில் ஓவியா வெளியேற்றப்படுவது ஒரு அப்பாவியான இளம்பெண்ணுக்கு இழைக்கப்பட்ட அநீதியாக நிகழ்ச்சியைக் காணும் ரசிகர்கள் கருதினார்கள். ஓவியா மனநல டாக்டரை நாடுவதுதான் நல்லது. இல்லையெனில் என்னாகுமோ என்றெல்லாம் நிகழ்ச்சிக்கு வெளியிலுள்ள பலரும் யோசனை தெரிவித்தார்கள்.
வாழ்க்கையை இவ்வளவு துணிச்சலாக எதிர்கொண்ட பெண்ணுக்கா இந்த நிலை என்று பலரும் உணர்ச்சிவசப்பட்ட நிலைக்குத் தள்ளப்பட்டனர், ஒரு பெண் தன் காதலைச் சொல்வதற்குக் கூட உரிமையில்லையா என்ன கொடுமை எந்த மாதிரி ஒரு சமூகத்தில் நாம் வாழ்கிறோம் என ஒருநாள் கூட நிகழ்ச்சியைப் பார்க்காதவர்களையும் கூட உணர்ச்சிவசப்படச் செய்த வகையில் தள்ளச் செய்தது. அந்தவகையில் இதெல்லாம் நிகழ்ச்சியின் வெற்றி அல்லாமல் வேறென்ன?
இவர்களை விட நாம் அன்பு செலுத்தமுடியும், அன்பை இனங்காண முடியும். இவர்களை விட நாம் சிலரை வெறுத்து ஒதுக்க முடியும். நாம் சிலரிடம் வெறுத்து ஒதுக்கப்படவும் நேரும். அப்போதெல்லாம் தனியே வாய்விட்டு சிரிக்க, மனம்விட்டு அழ, தோள்கொடுக்க, தோள்கிடைக்க இயலாமல் தவித்த தருணங்களை விட இது உயிரோட்டமானதா? என்பதை நிகழ்ச்சியை பார்க்கும் ஏராளமானோரில் ஒருசிலர் யோசித்தாலும் அதுதன் பிக்பாஸின் உண்மையான வெற்றியாக இருக்கமுடியும்.


