இந்தித் திணிப்பை ஏற்றுக்கொள்ளவே முடியாது – கன்னட வளர்ச்சி ஆணையர் போர்க்குரல்

கன்னட வளர்ச்சி ஆணைய தலைவர் எஸ்.ஜி.சித்தராமையா பெங்களூருவில் ஏப்ரல் 25 அன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளிக்கையில் கூறியதாவது:–

நமது நாட்டில் அரசியல் சாசனத்தால் அடையாளம் காணப்பட்டுள்ள அனைத்து மொழிகளும் தேசிய மொழிகளே. எந்த ஒரு மொழியையும் மற்ற மொழி பேசும் மக்கள் மீது திணிப்பது என்பது அரசியல் சாசனத்திற்கு விரோதமானது. கூட்டாட்சி தத்துவத்தைப் பின்பற்றும் நமது நாட்டில் மொழி, ஆன்மிகப்படி சமத்துவத்தை ஏற்படுத்துவது இன்றைய அவசரத் தேவை ஆகும். அதனால் இந்தி மொழியைத் திணிப்பதை நாங்கள் ஏற்க மாட்டோம்.

கர்நாடகத்தில் ஆட்சி நிர்வாகத்தில் கன்னட மொழியைப் புறக்கணிக்கும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்துத் துறைகளிலும் கன்னடத்தை முதன்மையாகப் பயன்படுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. நான் பல்வேறு துறைகளின் அலுவலகங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தேன். அப்போது 60 சதவீதம் அளவுக்கு கன்னடத்தை முன்னுரிமை அடிப்படையில் பயன்படுத்தாமல் இருப்பது தெரியவந்தது.

கன்னடத்தைப் பயன்படுத்த வேண்டும் என்பது தொடர்பாக இதுவரை 314 உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இந்த உத்தரவுகளை மீறும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கன்னடத்தைப் பயன்படுத்தாத ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியை மத்திய அரசின் சேவைக்கு அனுப்பி வைத்துள்ளோம். பொதுத்துறை நிறுவனங்களில் கன்னடத்தைப் புறக்கணிப்பது தெரியவந்துள்ளது. அந்தத் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு சித்தராமையாவுக்குப் பரிந்துரை செய்துள்ளோம்.

வங்கி நடவடிக்கைகளில் கன்னட மொழிப் பயன்பாடு குறைவாக உள்ளது. அங்கு இந்தி மொழியின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது. தமிழ்நாட்டைப் போல் இருமொழிக் கொள்கையை அமல்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. மும்மொழிக் கொள்கையை கர்நாடக அரசு ஒப்புக்கொண்டிருக்கக்கூடாது. கர்நாடகத்தில் இருமொழிக் கொள்கைக்காகப் போராட வேண்டிய நேரம் வந்துள்ளது.

இவ்வாறு எஸ்.ஜி.சித்தராமையா கூறினார்.

Leave a Response