மேற்கு நாடுகளில் வாழும் ஈழத் தமிழர்களை இலங்கைக்கு வரவைக்கும் சதித்திட்டம்- பழ.நெடுமாறன் எச்சரிக்கை

இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ள ஈழத்தமிழர் அகதிகளை அவர்களது தாயகத்திற்கு திருப்பி அனுப்புவது குறித்து இருநாட்டு உயர் அதிகாரிகள் டெல்லியில் இன்று சந்தித்து பேச இருக்கிறார்கள். திடீரென நடக்கும் இந்தக் கூட்டத்தின் பின்னணி பற்றி தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கை.

இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ள ஈழத்தமிழர் அகதிகளை அவர்களது தாயகத்திற்கு திருப்பி அனுப்புவது குறித்து இருநாட்டு உயர் அதிகாரிகள் டெல்லியில் இன்று சந்தித்து பேச இருக்கிறார்கள்.இலங்கை அரசு உறுதியான நம்பத்தகுந்த நடவடிக்கைகளை எடுத்த பிறகே இங்குள்ள அகதிகளை அவர்கள் தாயகத்திற்கு திருப்பி அனுப்புவதற்கான நடைமுறை குறித்து மத்திய அரசு ஆலோசிக்க வேண்டும் என்று கூறி அக்கூட்டத்தை தள்ளி வைக்குமாறு பிரதமர் நரேந்திரமோடிக்கு தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கடிதம் எழுதியிருப்பதை வரவேற்று பாராட்டுகிறேன்.
இலங்கையில் உள்நாட்டிலேயே 5 லட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கோ, வீடுகளுக்கோ திரும்ப முடியாமல் தவிக்கும் நிலையில் தமிழ்நாட்டில் உள்ள அகதிகளை திரும்ப அனுப்புவது அவர்களை கொலைக் களத்திற்கு அனுப்புவது போலாகும்.
இந்தியாவில் உள்ள அகதிகளை திரும்ப அழைப்பதில் இலங்கை அரசு காட்டும் அவசரத்திற்கு பின்னணி உள்ளது. இந்தியாவை பின்பற்றி மேற்கு நாடுகளில் தஞ்சம் புகுந்திருக்கும் அகதிகளை அந்தந்த நாட்டு அரசுகள் திரும்ப அனுப்பத் தொடங்கிவிடும். அதற்காகவே இலங்கை அரசு இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது.
மேற்கு நாடுகளில் வாழும் ஈழத் தமிழர்கள் அந்தந்த நாட்டு அரசுகளுக்கு உண்மை நிலைகளை தெரிவித்ததின் பேரில்தான் அந்நாடுகள் இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களையும் இனப்படுகொலைகளையும் கண்டித்து ஐ.நா. மனித உரிமை குழுக் கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வந்து ஐ.நா. விசாரணைக்குழு ஒன்று அமைக்க வழி வகுத்தனர்.
எனவேதான் வெளிநாடுகளில் வாழும் ஈழத்தமிழர்களை திரும்ப அழைப்பதற்கு இலங்கை அரசு அவசரப்படுகிறது.தமிழக அரசின் பிரதிநிதிகள் கலந்து கொள்ளாத கூட்டத்தினால் எந்த பயனும் இல்லை. எனவே அக்கூட்டத்தை இந்திய அரசு தள்ளி வைக்க வேண்டும் என வற்புறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response