“கலைஞர் வழியில் தான் எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் ஆனார்” ; வாய்தவறி ஒப்புக்கொண்ட செங்கோட்டையன்..!


பொதுவாக எந்த சேனலிலும் விவாத மேடைகளில் பங்குபெறும் ஆளுங்கட்சி தரப்பினரை கவனித்து பார்த்தால் தெரியும் அவர்கள் தங்களது தரப்புகளை நியாயப்படுத்த எந்த அளவுக்கு முட்டாள்தனமான கருத்துக்களை கூறி குழப்பி அடிக்கிறார்கள் என்று.. அதிமுகவை சேர்ந்த நாஞ்சில் சம்பத், சி.கே.சரஸ்வதி ஆகியோர் புத்திசாலித்தனமாக பேசுவதாக நினைத்துக்கொண்டு தங்கள் கட்சியின் மானத்தை படுகுழியில் தள்ளிய நிகழ்வுகள் பல உண்டு..

தற்போது எடப்பாடி பழனிச்சாமி முதல்வராகியுள்ள நிலையில், நேற்று முன் தினம் ஒரு சேனல் ஒன்றின் நேரலையில் கலந்துகொண்ட அமைச்சர் செங்கோட்டையன், தனக்கு முதல்வர் பதவி தரப்படமால் எடப்பாடி பழனிச்சாமிக்கு அந்த வாய்ப்பு தரப்பட்டதை பற்றி கூறும்போது அதில் கலைஞர் கருணாநிதியை ஒப்பிட்டு தனது கட்சியில் நடக்கும் உள்ளடி விவகாரங்களை தானே ஒப்புக்கொண்டுள்ளார்..

அவரிடம் தொகுப்பாளர் கேட்ட கேள்வி, “எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்து அரசியலில் இருக்கும் உங்களை விட்டுவிட்டு, அதன்பின் பத்து வருடங்கள் கழித்து கட்சி பொறுப்புகளுக்கு வந்த எடப்பாடி பழனிச்சாமிக்கு முதல்வர் பதவி தரப்பட்டுள்ளது ஏன்” என்றார்…

என்னதான் ஆளுங்கட்சிக்கு ஜால்ரா அடித்தே பேசிக்கொண்டிருந்தாலும் செங்கோட்டையனுக்கும் தனது மனதில் உள்ள புழுக்கத்தை பேசுவதற்கு ஒரு வாய்ப்பாக அமைந்தது அந்த கேள்வி.. அதற்கு பதிலளித்த செங்கோட்டையன், “இதே அறிஞர் அண்ணா முதல்வராக இருந்து மறைந்தபோது அடுத்ததாக நெடுஞ்செழியன், அவருக்குப்பின்னால் மதியழகன் உட்பட ஐந்து பேர் சீனியர்கள் இருந்தார்கள். ஆனால் கலைஞர் எப்படி முதல்வராக முடிந்தது..? அதே மாதிரித்தான் இதுவும்” என்று கூறினார்..

நெடுஞ்செழியன், மதியழகன் உள்ளிட்டவர்களை சாதுர்யமாக அரசியல் செய்து பின்னோக்கி தள்ளிவிட்டுத்தான் கலைஞர் முதல்வர் பதவியை பிடித்தார் என இன்றுவரை சொல்லப்பட்டு வருகிறது.. அப்படியானால் எடப்பாடி பழனிச்சாமியும் அந்தவகையில் தான் முதல்வர் ஆகியிருக்கிறார் என செங்கோட்டையன் சொல்லாமல் சொல்கிறார் என்றுதானே அர்த்தம்..

இல்லை என்றால் செங்கோட்டையன், எடப்பாடி போன்றவர்களை நம்பாமல் அவர்களுக்கு பின் அரசியல் பொறுப்புகளில் களம் புகுந்த பன்னீர் செல்வத்திடம் முதல்வர் பொறுப்புகளை ஜெயலலிதா இருமுறை ஒப்படைத்தது போல, இப்போது ஜெயிலில் இருக்கும் சின்னம்மாவும் செங்கோட்டையனை நம்பாமல் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்கி விட்டாரோ என்கிற விரக்தி செங்கோட்டையன் பதிலில் நன்றாகவே தெரிகிறது.

ஆக, தன்னையறியாமலேயே கட்சியில் நடக்கும் குளறுபடிகளை ஒப்புக்கொண்டு விட்டார் செங்கோட்டையன்.

Leave a Response