வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உதவி – இங்கல்ல ஈழத்தில்

காவிரியில் கர்நாடகம் உரிய அளவு தண்ணீர் விடாதது மட்டுமின்றி பருவமழையும் ஏமாற்றியதால் காவிரி டெல்டா விவசாயிகள் நாள்தோறும் தற்கொலை செய்துவருகின்றனர். தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்து இதற்கான இழப்பை ஈடுகட்ட வேண்டும் என்கிற விவசாயிகளின் கோரிக்கையை மத்திய மாநில அரசுகள் காது கொடுத்துக் கேட்கக் கூடத் தயாராக இல்லை.
இதே நிலை ஈழத்திலும் விவசாயிகளுக்கு இருக்கிறது. அங்குள்ள தமிழ் மாகாண அரசு இருக்கும் மிகச்சிறிய அதிகாரத்தைப் பயன்படுத்தி உழவர்களுக்கு உதவி செய்துவருகிறது.

அது பற்றிய விவரம்….

முத்தையன்கட்டுக்குளத்தை நம்பி விவசாயத்தை மேற்கொள்ளும் 1000 பேருக்கு வறட்சி நிவாரணமாக வடமாகாண விவசாய அமைச்சு சனிக்கிழமை (31.12.2016) உலர் உணவுப் பொதிகளை வழங்கியது.

ஒட்டுசுட்டான் மகாவித்தியாலயத்தில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கலந்து கொண்டு உணவுப் பொதிகளை வழங்கினார்.

முத்தையன்கட்டுக் குளத்தின்கீழ் பயிரிடப்படும் நிலப்பரப்பின் அளவை 6000 ஏக்கர் அளவாக அதிகரிக்கச் செய்யும் நோக்கோடு மேற்கொள்ளப்பட்டுவந்த முத்தையன்கட்டுக் குளத்தின் புனரமைப்புப் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளது. இப்புனரமைப்புப் பணிகளுக்காகக் குளத்தில் இருந்த நீரை முன்கூட்டியே திறந்து விடவேண்டிய அவசியம் ஏற்பட்டதால் 2016 ஆம் ஆண்டில் காலபோகச் செய்கைக்கான நீர் விவசாயிகளுக்கு வழங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், கால போகச் செய்கையில் விவசாயிகளால் பெருமளவுக்கு ஈடுபடமுடியவில்லை.

மழைநீரைச் சேகரிப்பதற்குத் தயாராகக் குளத்தின் புனரமைப்புப் பணிகள் விரைந்து முடிக்கப்பட்டபோதும்,பருவ மழை பொய்த்ததன் காரணமாக குளத்தில் போதியளவு நீரைச் சேமிக்க முடியவில்லை. இதனால் பெரும் போகத்திலும் முத்தையன்கட்டுக்குள விவசாயிகளால் முழுமையாக ஈடுபடமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இவற்றைக் கருத்திற் கொண்டு வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உலர் உணவு நிவாரணம் வழங்குமாறு முல்லை மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மாகாணசபை உறுப்பினர்கள் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனிடம் மாகாணசபையில் அவரது நிதிநிலை உரை இடம் பெற்றபோது கோரிக்கை விடுத்திருந்தனர்.

இக்கோரிக்கைக்கு அமைவாகவே, வடக்கு விவசாய அமைச்சின் பத்து இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் பாதிக்கப்பட்ட 1000 விவசாயிகளுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டுள்ளன.

விவசாயிகள் கோரிக்கை வைத்தால் அதற்கு உடனே செவி சாய்க்கும் அரசு இங்கும் இருந்தால் நன்றாக இருக்கும்.

Leave a Response