இந்திய நாட்டின் தலைநகரம் டெல்லி ஏற்கனவே சுற்றுச்சூழல் மாசுபாட்டால் கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்தது. இதைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்த போதிலும் அதற்கு உரிய பலன் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் தீபாவளி பண்டிகைக்காக டெல்லியில் அதிக அளவில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. இதனால் காற்றில் அதிக மாசு கலந்தது. இத்துடன், டெல்லியை ஒட்டி உள்ள அரியானா, பஞ்சாப் மாநிலங்களில் அறுவடை முடிந்து பயிர்களின் கழிவுகளை எரிக்கும் பணி நடந்து வருகிறது. இதனால் காற்றில் புகை மண்டலம் டெல்லி முழுவதும் சூழ்ந்துள்ளது.
இதன் காரணமாக டெல்லி நகரம் முழுவதும் எங்கு பார்த்தாலும் காற்று மாசுபட்டு புகை மூட்டமாகக் காட்சி அளிக்கிறது. காற்றில் சராசரியாக இருக்க வேண்டிய மாசு அளவை விட 15 மடங்கு அதிக அளவில் மாசு கலந்துள்ளது.
இதனால் மக்கள் சுவாசிக்க கூடிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதிலும், குழந்தைகள், முதியோர்கள் மூச்சு விட சிரமம் அடைந்து பல்வேறு நோய்களுக்கு ஆளாகி இருக்கிறார்கள். ஏற்கனவே ஆஸ்துமா நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும் துயரத்தை சந்தித்து வருகிறார்கள்.
வழக்கமாக இதுபோல் மாசு ஏற்பட்டு புகை மூட்டம் எழுந்தால் ஒன்றிரண்டு நாட்களில் அது அடங்கிவிடும். ஆனால், ஒரு வாரத்துக்கும் மேலாக இப்போது டெல்லி நகரில் புகை மூட்டம் நிலவுகிறது. மக்களால் வெளியே நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் இதற்கு என்ன தீர்வு காண்பது என்பது குறித்து டெல்லி மாநில அரசும், மத்திய அரசும் தீவிரமாக ஆலோசித்து வருகின்றன. அதற்கு உரிய பலன் கிடைக்குமா? என்பது தெரியவில்லை.
டெல்லி காற்று மாசுவுக்கு தீர்வு காண 25 விதமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் “அவசரகால நடவடிக்கை” என்று அறிவிக்கப்பட்டு இன்று காலை முதல் அமலுக்கு வந்தன.
காற்று மாசுவை சீர்படுத்த எடுக்கப்பட்டுள்ள அவசரகால நடவடிக்கைகள் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. என்றாலும் காற்று மாசுவை உடனடியாக அகற்ற வேண்டும் என்பதால் அவசரகால நடவடிக்கைகளில் தீவிரம் காட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், டெல்லியில் மட்டுமல்லாமல் இந்தியாவின் 94 நகரங்களில் காற்று மாசுபாடு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காற்று மாசுபாடு அடைந்த நகரங்களின் பட்டியலை உலக சுகாதார நிறுவனம் சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டுள்ளது. அதில் காற்று மாசுபாட்டில் மோசமாக உள்ள நகரங்களில் முதல் 20 இடங்களில் இந்தியாவின் 10 நகரங்கள் இடம் பெற்றுள்ளன.
கடந்த 2011-ம் ஆண்டு முதல் 5 ஆண்டுகளில் நாட்டின் 94 நகரங்களில் சுவாசிக்கும் காற்று தரமானதாக இல்லை என தெரியவந்துள்ளது.
தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையிலும் காற்றின்மாசு அதிகரித்துகொண்டே வருகிறது. குறிப்பாக, நேற்றுமாலை 6 மணி நிலவரப்படி சென்னை ஆலந்தூர், கிண்டி, அண்ணா சாலை, மணலி ஆகிய பகுதிகளில் காணப்படும் காற்றுமாசின் அதிகபட்ச அளவானது 2.5 (2.5 மைக்ரான் அளவிலான திடப்பொருள் கலவை கொண்டது) அலகாக உள்ளது.
இந்த அளவானது, சிறு குழந்தைகள் மற்றும் ஆஸ்துமா, நுரையீரல் அழற்சி நோய், சுவாசப்பை கோளாறுகள் சார்ந்த நோய்களால் பாதிக்கப்படுள்ள முதியவர்களின் ஆரோக்கியத்துக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் அமைந்துள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
தீபாவளி பண்டிகையின்போது கொளுத்தப்பட்ட பட்டாசுகளால் சென்னையில் ஏற்பட்ட காற்று மாசு டெல்லியைவிட குறைவுதான் என்றாலும் வாகனப்புகை மற்றும் சாலையோரம் குவிந்து கிடக்கும் மண்தூசி போன்றவை சென்னையில் புகை மற்றும் தூசி மண்டலம் உருவாக காரணிகளாக உள்ளன.
தற்போது, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்துவரும் பனியால் இந்த தூசியின் மாசுபாடு அவ்வளவு எளிதாக காற்றில் கலந்து வெளியேற முடியாத வகையில் பனிப்போர்வைக்குள் சிக்கிக் கொள்வதால் காலை வேளைகளில் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளும், நடைபயிற்சிக்கு செல்லும் முதியவர்களும் மூச்சுத்திணறலால் பெரிதும் சிரமப்பட நேர்கிறது.