தமிழீழமும் சிறிலங்காவும் தமக்கிடையே ஒற்றுமையையும் நல்லுறவையும் கட்டியெழுப்புவார்கள் – உருத்திரகுமாரன் நம்பிக்கை

சிங்கள அரசின் அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான  தேர்தல் பரப்புரைகளின் போது புலம்பெயர் தமிழ் மக்கள் தொடர்பாக பரந்தளவில் கலந்துரையாடப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான புலம்பெயர் தமிழ் மக்கள் இலங்கையைக் கூறுபோடும் நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன் புலிகள் அமைப்பை மீளவும் செயற்படுத்தும் முயற்சிகளை மேற்கொள்வதாகவும் சிங்களஅரசாங்கத்தால் குற்றம் சுமத்தப்படுகிறது.

இந்நிலையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் வழங்கிய நேர்காணலின் [நேர்காணல் வழிமூலம்: Easwaran Rutnam The Sunday Leader – மொழியாக்கம் : நித்தியபாரதி]

கேள்வி: சிறிலங்காவைக் கூறுபோடுவதற்கான முயற்சிகளையும் தமிழீழத்தை உருவாக்குவதற்கான முயற்சிகளையும் புலம்பெயர் தமிழ்ச் சமூகம் மேற்கொள்வதாக சிறிலங்கா அரசாங்கம் கூறுகிறது. இது நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் குறிக்கோளாக உள்ளதா?

பதில்: 2010ல் 12 நாடுகளைச் சேர்ந்த தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளால் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான அரசியல் யாப்பு வரையப்பட்டது. “புலம்பெயர் தமிழ் மக்களால் ஜனநாயக ரீதியாகத் தெரிவு செய்யப்பட்ட நாடு கடந்த தமிழீழ அரசாங்கமானது தமிழீழம் என்கின்ற சுதந்திரமான, இறையாண்மையுள்ள நாட்டை உருவாக்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளும்” என எமது யாப்பின் வரைபு 1.1.1ல் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் மீது திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை நிகழ்ச்சி நிரல் மற்றும் மனித உரிமை மீறல்கள் போன்றவற்றின் விளைவாக 1976ல் சுதந்திரமான இறைமையுள்ள தமிழீழத்தை உருவாக்குவதற்கான பிரகடனத்தை தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி மேற்கொண்டது. 1977ல் இடம்பெற்ற தேர்தலை தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியானது தமிழர்களுக்கான சுதந்திர நாடொன்றைப் பிரகடனப்படுத்துவதற்கான கருத்துவாக்கெடுப்பாகப் பயன்படுத்தியது. சிறிலங்காவின் வடக்கு-கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் தமக்கான சுதந்திர தமிழீழத்தை உருவாக்குவதற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

இதற்கு முன்னர், மறைந்த தமிழ்த் தலைவர் திரு.எஸ்.ஜே.வி.செல்வநாயகம் 1974ல் இடம்பெற்ற இடைத் தேர்தலை சுதந்திர தமிழீழத்தை நிறுவுவதற்கான கருத்துவாக்கெடுப்பாகப் பயன்படுத்தியதுடன், இதில் பெரு வெற்றியைப் பெற்றார்.

அதிலிருந்து, தமிழ் மக்கள் தொடர்ச்சியாக சுதந்திர தமிழீழத்திற்கான அறைகூவலை விடுத்த வண்ணமேயுள்ளனர். தமிழ் மக்கள் தமது இலட்சியத்தை இன்னமும் அடைய முடியவில்லை. தமிழ் மக்கள் தமது அரசியல் அவாக்களை சுதந்திரமாகவும், முழுமையாகவும் வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பும் வழங்கப்படவில்லை.

இவ்வாறான சூழலில், 30 ஆண்டு கால ஆயுதப் போரானது குறிப்பாக 2009ல் முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தமானது தமிழ் மக்களுக்கான சுதந்திர தமிழீழத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கான அழுத்தத்தை வழங்கியது. சிறிலங்கா இராணுவத்தால் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட சித்திரவதைகள் மற்றும் முள்ளிவாய்க்கால் படுகொலைகள் போன்றன தமிழ் மக்களுக்கு சுதந்திர தமிழீழம் வழங்கப்பட வேண்டும் என்பதற்கு மேலும் பலம் சேர்த்துள்ளது. சுதந்திர தமிழீழமும் சிறிலங்காவும் தமக்கிடையே ஒற்றுமையையும் நல்லுறவையும் கட்டியெழுப்புவார்கள் என நாம் உறுதியாக நம்புகிறோம்.

கேள்வி: மைத்திரிபால சிறிசேன சிறிலங்காத் தேர்தலில் வெற்றி பெற்றால், நாடு கடந்த தமிழீழ அரசாங்கமானது மைத்திரபாலவுடன் மீளிணக்கப்பாட்டிற்கான பேச்சுக்களை நடாத்த முன்வருமா?

பதில்: சிறிலங்காவில் தற்போது மேற்கொள்ளப்படும் அதிபர் தேர்தலுக்கான பரப்புரையானது இனவாதத்தைத் தூண்டுவதாகக் காணப்படுகிறது. முன்னைய தேர்தல்களை விடத் தற்போதைய அதிபர் தேர்தலுக்கான பரப்பரையானது, சிறிலங்காவின் அரசியல் செயற்பாடுகளில் தமிழர்களின் வினைத்திறனான பங்களிப்புக்கள் முற்றிலும் நிரந்தரமாக மறுக்கப்பட்டுள்ளன என்பதை அனைத்துலக சமூகத்திற்கு மிகத் தெளிவாக வெளிப்படுத்தி நிற்கிறது.

நாங்கள் எமது சிங்கள சகோதர ஆட்சியாளருடன் நட்புறவைப் பேண விரும்புகிறோம். எதுஎவ்வாறிருப்பினும், சிறிலங்கா அரசானது இனவாதச் செயற்பாடுகளில் ஈடுபடுவதால், தற்போதுள்ள சிறிலங்கா அரசுடன் மீளிணக்கப்பாட்டை மேற்கொள்ள முடியும் என நாங்கள் நம்பவில்லை. இரு தேசங்கள் உருவாக்கப்படும் போது பரஸ்பர மதிப்பு மற்றும் கௌரவத்துடன் வாழமுடியும் என்கின்ற நம்பிக்கையை உருவாக்குகிறது. நாட்டில் ஜனநாயகம் நிலைபெறுவது மிகச் சிறந்த வழிமுறை என நாம் உறுதியாக நம்புகிறோம்.

சிறிலங்காவின் வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் மற்றும் சிறிலங்காவுக்கு வெளியே வாழும் புலம்பெயர் தமிழ் மக்கள் மத்தியிலும் தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கான தீர்வாக சுதந்திர மற்றும் இறையாண்மையுள்ள தமிழீழத்தை உருவாக்கிக் கொள்வது உட்பட தமது எதிர்கால அரசியல் உரிமையை உறுதிப்படுத்திக் கொள்வதற்கான கருத்துக்கணிப்பை மேற்கொள்ள வேண்டும் என அனைத்துலக சமூகத்திடம் டிசம்பர் 07,2014ல் இடம்பெற்ற நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் நாடாளுமன்ற அமர்வின் போது கோரிக்கை விடுக்கப்பட்டது.

தமிழர்கள் வாழ்வதற்கு உகந்த சூழலை உருவாக்குவதற்கான கருத்துக் கணிப்பொன்றைத் தமிழ் மக்கள் மத்தியில் நடாத்துவதற்கு அனைத்துலக சமூகம் தனது ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனக் கோரி நாங்கள் தற்போது பரப்புரை மேற்கொள்கிறோம். இந்தவகையில், தமிழ் மக்களுக்கு உகந்த சூழலை உருவாக்குமாறு அனைத்துலக சமூகம் எம்மிடம் கேட்டால், அனைத்துலக சமூகத்தின் அனுசரணையுடன், தற்போது இடம்பெறவுள்ள சிறிலங்காவின் அதிபர் தேர்தலில் திரு.மைத்திரிபால சிறிசேனவோ அல்லது அதிபர் மகிந்த ராஜபக்சவோ எவர் வெற்றி பெற்றாலும் அவர்களுடன் பேச்சுக்கள் நடாத்த ஆவலாக உள்ளோம்.

கேள்வி: ஜனநாயக வழிமுறையின் ஊடாக தனது இலக்குகளை அடைந்து கொள்வதை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் முதன்மைப்படுத்துவதாக அண்மையில் நீங்கள் ஆற்றிய உரையொன்றில் குறிப்பிட்டிருந்தீர்கள். உங்களது போராட்டத்தை அனைத்துலக சமூகம் ஏற்றுக்கொள்ளத் தயாராக உள்ளதா?

பதில்: எமது உரிமைக் கோரிக்கையை எந்தவொரு நாடும் பகுத்தறிவு ரீதியாக மறுக்க முடியாது. நீதி, தார்மீகம் மற்றும் சட்டத்தின் பாற்பட்டு எந்தவொரு நாடும் தனித்துவமாகச் செயற்பட முடியாது. நாடுகளின் நடவடிக்கைகளில் தேசிய நலன்கள் செல்வாக்குச் செலுத்துகின்றன. சிறிலங்கா தனியொரு நாடாக இருப்பது தமது நலன்களை அடைந்து கொள்வதற்குச் சுலபமானது என அனைத்துலக சக்திகளும் பிராந்திய சக்திகளும் நம்புகின்றன. ஆனால் சிறிலங்காவின் அண்மைய நடவடிக்கைகள் அனைத்துலக மற்றும் பிராந்திய சக்திகளின் மாயையை விரைவில் கலைக்கும் என நாம் நம்புகிறோம். இது இடம்பெறும் போது, அனைத்துலக நாடுகள் எமது நிலைப்பாட்டைப் புரிந்து கொள்ளும். அனைத்துலக சமூகமானது எமது நிலைப்பாட்டைப் புரிந்து கொள்வது தற்போது அதிகரித்து வருகிறது என நான் இங்கு உறுதிபடத் தெரிவிப்பேன்.

கேள்வி: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு மாகாண சபைத் தேர்தலில் வெற்றி பெற்று ஒரு ஆண்டு கடந்த நிலையில், இவர்கள் தமிழ் மக்களுக்கு மிகக் குறைந்த பணிகளையே ஆற்றியுள்ளதாகத் தெரிகிறது. இது தொடர்பில் யார் மீது குற்றம் சுமத்த முடியும்?

பதில்: சிறிலங்கா அரசியல் யாப்பின் 13வது திருத்தச் சட்டமானது ஒருபோதும் தமிழ்த் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வைத் தராது என 1989ல் மறைந்த திரு.அமிர்தலிங்கம் கூறியிருந்தார். இதேபோன்று மாகாண சபைகளும் காணி மற்றும் காவற்துறை அதிகாரங்களைக் கொண்டிருக்காது என சிறிலங்காவின் உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது. ஆனால் இவர்கள் தமது சொந்தச் செயலகங்களை நிறுவுவதற்கான அதிகாரங்களையும் கொண்டிருக்கவில்லை. தற்போது நடைமுறையிலுள்ள சிறிலங்கா அரச கட்டமைப்பிற்குள் கருத்துள்ள அதிகாரப் பரவலாக்கம் ஒருபோதும் இடம்பெறாது என்பது தெளிவாகச் சுட்டிக்காட்டப்படுகிறது.

கேள்வி: தமிழ் மக்களின் பிரச்சினைகளை உலகிற்கு எடுத்துக் கூறுவதற்காக நாடு கடந்த தமிழீழ அரசாங்கமானது உலகத் தமிழர் பேரவை போன்ற தமிழர் அமைப்புக்களுடன் இணைந்து பணியாற்றுமா?

பதில்: அனைத்து தமிழ் அமைப்புக்களுடனும் இணைந்து நாம் பணியாற்றுகிறோம். குறிப்பாக, சிறிலங்கா மீதான அனைத்துலக சமூகத்தின் விசாரணையைப் பலப்படுத்துவதற்கான நாம் பணியாற்றுகிறோம். நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மட்டுமன்றி, ஈழத்தமிழர்களுக்கான அனைத்துலகப் பேரவை, பிரித்தானிய தமிழர் பேரவை போன்றனவும் தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வாக தமிழீழத் தனியரசு வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றன. உலகத் தமிழர் பேரவை உட்பட அனைத்து நிறுவனங்களும் தமிழ் மக்களின் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்காகவும் பாதுகாப்பதற்காகவும் தம்மை அர்ப்பணித்துள்ளன. அரசாங்கத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான உரிமை மற்றும் அரசியல் அமைப்பொன்றைத் தேர்ந்தெடுப்பதற்கான உரிமை போன்றன ஒவ்வொரு மனிதனும் கொண்டுள்ள அடிப்படை மனித உரிமைகளாகும்.

தமிழ் மக்களுக்காகச் செயற்படும் அனைத்துத் தமிழ் அமைப்புக்களும் இதனை அடிப்படையாகக் கொண்டே செயற்படுகின்றன. தமிழ்த் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வாக கருத்து வாக்கெடுப்பொன்று நடாத்தப்பட வேண்டும் என்பதே அனைத்துத் தமிழ் அமைப்புக்களின் ஒருமித்த கோரிக்கையாகும்.

நன்றி புதினப்பலகை.

Leave a Response