
பறவைக்கும் எறும்புக்கும் கூட வீடு உண்டு, அது வாடகை தந்ததுண்டா? ஆறறிவு மனிதன் அலைவது ஏன்? என்கிற பாடல் வரிகளையே கதைக்கருவாகக் கொண்டு உருவாகியிருக்கும் திரைப்படம் கடிகார மனிதர்கள்.
இயக்குநர் சசிகுமாரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய வைகறைபாலன், இந்தப்பாடலை எழுதியதோடு கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருக்கிறார்.
கிஷோர், கருணாகரன் ஆகியோர் கதாநாயகர்களாகவும் ஷெரின் கதாநாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். இவர்களோடு படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் தயாரிப்பாளர்களில் ஒருவரான பிரதீப்ஜோஸ் நடித்திருக்கிறார்.
கிராமங்களிலிருந்து சென்னை போன்ற பெருநகரங்களுக்கு வாழ்வு தேடி வருகிற நடுத்தட்டு மற்றும் அடித்தட்டு மக்கள் வீடு பிடிக்கப் படும்பாடுதான் படத்தின் மையக்கதை. அவர்கள் உள்நாட்டு அகதிகள் போல் என்கிறார் படத்தின் இயக்குநர்.
மிகவும் அழுத்தமான இந்தக்கதையை வைத்துக்கொண்டு அனைத்துத் தரப்பு மக்களும் ரசிக்கிற மாதிரி படத்தை உருவாக்கியிருக்கிறார்களாம்.
தங்கள் உழைப்பின் பெரும்பகுதியை வீட்டு வாடகைக்காகவே இழந்துகொண்டிருக்கும் அனைவருக்கும் ஆறுதலாக இந்தப்படம் இருக்கும் என்கிறார்கள்.
மிகவும் தேர்ந்தெடுத்து நடித்துக்கொண்டிருக்கும் கிஷோர் இந்தப்படத்தின் கதை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதாலேயே இதில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார்.
சென்னை பாண்டிச்சேரி ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடந்திருக்கிறது.
செப்டம்பரில் படம்வெளியாகும் என்கிறார்கள். படத்தின் தலைப்பே மக்களைக் கவரும்வண்ணம் இருக்கிறது. படமும் அப்படியே இருக்கும் என்று நம்பலாம்.
