
தமிழினத்தின் அறியப்படாத மற்றுமொரு துயர்சார்ந்த வரலாற்று நிகழ்வின் ஆவணப்படத்தினை ’நிமிர்’ அமைப்பு வெளியிட ஏற்பாடு செய்திருக்கிறது.
இந்நிகழ்விற்கான ஒத்துழைப்பினை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் , புலம்பெயர் ஆய்வு மையம் வழங்கி இருக்கிறது.
தமிழ்ச் சமூகத்தின் வரலாறு, பண்பாடு, தொல்லியல், மொழியாய்வு, சூழலியல், கலை, இலக்கியம், படைப்புலகம் என விரிவான தளங்களில் தொடர் பங்களிப்பினை ’நிமிர்’ அமைப்பு செய்து வருகிறது.
இயக்குநர் குறிஞ்சிவேந்தன், தனது ஆய்வுப்பணியின் நிமித்தம் துவங்கிய பயணத்தினை ஒரு ஆவணப்படமாக நமக்குக் கொடுத்திருக்கிறார், கிட்டத்தட்ட 10 ஆண்டுகால உழைப்பினை இதன் ஆய்விற்காக அர்ப்பணித்திருக்கிறார்.
தமிழுலகம் அதிகம் அறிந்திடாதத் துயரம் தான், சயாம்(தாய்லாந்து)- பர்மா மரணரயில் பாதை. சிங்கப்பூர்-மலாயாவை இரண்டாம் உலகப்போர் நேரத்தில் கைப்பற்றிய ஜப்பானிய ராணுவம், அங்கிருந்து இந்தியாவுக்குள் நுழைவதற்காக மிக நீண்ட ரயில்பாதை ஒன்றை அமைத்தது. அதை அமைக்கும் பணியில் 30,000 பிரிட்டிஷ்-ஆஸ்திரேலியப் போர்க்கைதிகளோடு, ஒன்றரை லட்சம் (மலாயாவின் ரப்பர்த்தோட்டத் தொழிலாளர்கள்) தமிழர்களையும், 50,000 பர்மியர்கள், சீனர்கள், இந்தோனேசியர்கள் மற்றும் மலாய் இனத்தவர்களையும் கொண்டு சென்றது.
ஒரே நாளில் சயாம் மற்றும் பர்மா ஆகிய இருமுனைகளில் தொடங்கப்பட்ட இந்த இரயில்பாதை என்னும் துயரக்கதையின் பக்கங்கள் கனமானவை. ஏறத்தாழ 72 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த இக்கொடியச்சம்பவத்தில் 1,00,000 தமிழர்கள் உள்ளிட்ட 1,50,000 ஆசியத்தொழிலாளர்கள் தம் இன்னுயிரைத் தியாகம் செய்துள்ளனர். கண்ணீரைப் பெருக வைக்கும் இச்சம்பவம் குறித்து 1 1/4 மணி நேர ஆவணப்படமாக எடுத்து முடிக்கப்பட்டுள்ளது.
மரணரயில்பாதையில் பணியாற்றி உயிருடன் மீண்டு, இன்று தங்களது வாழ்நாளின் இறுதிக்கணங்களை எண்ணிக் கொண்டிருக்கும் முதியவர்கள் பலர் அந்த நினைவலைகளை இப்படத்தில் பகிர்ந்துள்ளனர். மனித உரிமைகள் பற்றிக் கவலைப்படும் எவரின் உள்ளத்திலும் ஆழமான காயங்களை உருவாக்கும் பல சம்பவங்களை அவர்கள் பகிர்ந்துள்ளனர். மேலும் பல்வேறு வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களைச் சேர்ந்த வரலாற்றுப் பேராசிரியர்கள், ஆய்வாளர்களும் பங்கேற்க உரிய ஆவணங்கள்/ஆதாரங்களோடு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
பர்மா, தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர், இந்தியா ஆகிய 5 நாடுகளில் படப்பதிவு செய்யப்பட்டுள்ள ஆவணப்படம். இப்படத்திற்கான ஆதாரங்கள்/தகவல்கள் ஆகியவை கனடா, ஆஸ்திரேலியா, மலேசியா,சிங்கப்பூர், இலங்கை, இங்கிலாந்து ஆகிய நாடுகளின் ஆவணக் காப்பகங்கள் மற்றும் நூலகங்களில் இருந்து பெறப்பட்டுள்ளன.
இப்படத்தை மக்கள் பார்வைக்குக் கொண்டு செல்லும் நோக்கில் சென்னையில் திரையிடவிருக்கிறார்கள். நிமிர் அமைப்பு அனைவரும் குடும்பத்துடன், குழந்தைகளுடன் அவசியம் வாருங்கள் என்று அழைப்பு விடுத்துள்ளது.
நாள்: 27-8-2016, மாலை 5 மணி
இடம்: ஆர்.கே.வி ஸ்டுடியோ, வடபழனி, சென்னை
(வடபழனி பேருந்து நிலையம் எதிரில் )


