மோடி அரசும் விஜய் அரசும் கூட்டுச்சதி – பெ.சண்முகம் ஆவேசம்

மாணவர்கள் போராட்டம் தொடர்பாக உயர்கல்வித்துறை அமைச்சர் அளித்த விளக்கத்தை ஏற்கமுடியாது என்றும், திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் குறித்த விவரங்களைச் சேகரிக்க உத்தரவிட்ட விவகாரம் சட்டவிரோதமானது என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

இந்த விவகாரங்களைக் கண்டித்தும், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளரைப் பதவிநீக்கம் செய்ய வலியுறுத்தியும் சென்னை மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நேற்று கண்டன ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

சென்னையில் சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு செயலாளர் பெ.சண்முகம் பங்கேற்றார்.

ஆர்ப்பாட்டத்தின்போது பெ.சண்முகம் பேசியதாவது….

மாணவர்கள் போராட்டம் தொடர்பாக நடந்த சம்பவத்தை மூடி மறைக்கக்கூடிய வகையில்தான் உயர்கல்வித்துறை அமைச்சருடைய பதில் இருக்கிறது.

ஏதோ சில வார்த்தைகள், சில அமைப்புகள் சம்பந்தமாக தவறுதலாக அதில் குறிப்பிடப்பட்டுவிட்டது என்ற முறையில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் அமைச்சர் பேசியிருக்கிறார். உண்மையிலேயே தவறுதலாகத்தான் குறிப்பிடப்பட்டது என்று சொன்னால்,அந்த தவறுக்கு யார் காரணமோ அந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.ஆனால் அப்படிப்பட்ட எந்த உறுதிமொழியையும் தமிழ்நாடு சட்டப்பேரவையில் உயர்கல்வித்துறை அமைச்சர் அளிக்கவில்லை.

இரண்டாவதாக, திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை வட்டாட்சியர்,அந்த வட்டத்துக்கு உட்பட்ட இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி,இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினுடைய உறுப்பினர்கள் சம்பந்தமான விவரங்களை எல்லாம் 24 மணி நேரத்திற்குள் சேகரித்து அனுப்பவேண்டும் என்று மிக அவசரமான உத்தரவை பிறப்பித்திருக்கிறார்.

இது சம்பந்தமாக சட்டப்பேரவையில் விவாதம் நடந்தபோது,வருவாய்த்துறை அமைச்சர், அவரை ஒரு கணக்கெடுப்பு எடுப்பதற்காக அனுப்பியதாகச் சொல்கிறார்.ஒருவேளை கம்யூனிஸ்ட்கள் சம்பந்தமான கணக்கெடுப்பு எடுப்பதற்காகத்தான் தமிழ்நாடு அரசின் சார்பில் அவர் சென்னையிலிருந்து குஜிலியம்பாறைக்கு அனுப்பப்பட்டாரா என்ற கேள்வியை எழுப்புகிறேன்.

ஆனால் மாவட்ட ஆட்சித் தலைவர் என்ன சொல்கிறார்? அவர் பயிற்சிக்காக வந்தார்; பயிற்சி முடிந்ததால் மீண்டும் சென்னைக்கு அனுப்புகிறோம் என்று சொல்கிறார்.அமைச்சர் சொல்வது உண்மையா, மாவட்ட ஆட்சித்தலைவர் சொல்வது உண்மையா என்பதை முதலில் தமிழ்நாடு அரசு தெளிவுபடுத்தவேண்டும்.

அரசாங்கமே சொல்லிச் செய்திருந்தாலும் அல்லது தன்னிச்சையாக வட்டாட்சியர் அத்தகைய கணக்கெடுப்பை நடத்த முடிவு எடுத்திருந்தாலும், அது சட்டவிரோதமானதும் கடும் கண்டனத்திற்குரியதும் ஆகும்.இதற்குக் காரணமான வட்டாட்சியர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.திண்டுக்கல் குஜிலியம்பாறையிலிருந்து சென்னைக்கு அனுப்புவது,சென்னையிலிருந்து குஜிலியம்பாறைக்கு அனுப்புவது எல்லாம் நடவடிக்கை பட்டியலிலேயே வராது. இந்த மாதிரியான நடவடிக்கைகளை நாங்கள் நடவடிக்கையாக ஏற்றுக்கொள்வதில்லை.

இடமாற்றம் செய்யப்பட்டதே மிகப்பெரிய நடவடிக்கை என்பது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்துவதற்கு அரசாங்க தரப்பில் முயற்சிப்பது கொஞ்சமும் ஏற்புடையதல்ல.இந்தமாதிரியான சட்டவிரோத செயலில் ஈடுபட்ட குற்றத்திற்காக வட்டாட்சியர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.அவர் தனது கீழ்நிலை அதிகாரிகளான கிராம நிர்வாக அலுவலர்,தலையாரி ஆகியோருக்கு மட்டுமே இந்த உத்தரவை அனுப்பவில்லை.பழனி கோட்டாட்சியருக்கும் அனுப்புகிறார்;மாவட்ட ஆட்சியருக்கும் அனுப்புகிறார்.

அப்படியானால் இது சட்டவிரோதம் என்று தெரிந்து,வட்டாட்சியருக்கு மேலே இருக்கக்கூடிய கோட்டாட்சியரோ, மாவட்ட ஆட்சியரோ உடனடியாக நடவடிக்கை எடுத்திருந்தால் அது வேறு.ஆனால் இந்த பிரச்னை வெளியே வந்து,எங்களைப் போன்றவர்கள் முதலமைச்சருடைய கவனத்திற்கு கொண்டு சென்ற பிறகுதான் இந்த இடமாற்றமே நடைபெறுகிறது.அப்படியானால் இது ஒரு தவறு என்றே மாவட்ட ஆட்சியருக்குத் தெரியவில்லை, கோட்டாட்சியருக்குத் தெரியவில்லை என்றால் என்ன நிர்வாகம் நடக்கிறது?

இந்த அதிகாரிகள் எல்லாம் தமிழ்நாடு அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் செயல்படுகிறார்களா அல்லது அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் தமிழ்நாடு அரசாங்கம் இருக்கிறதா என்ற கேள்வியைத்தான் இந்த இரண்டு சம்பவங்களும் தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் எழுப்பியிருக்கின்றன.தமிழ்நாடு முழுவதும் இதை விவாதப் பொருளாக ஆக்கியிருக்கின்றன.ஆகவே,இதை சரிசெய்யக்கூடிய வகையில்,தவறு நிகழ்ந்துவிட்டது;இதை நாங்கள் சரிசெய்கிறோம் என்ற முறையில் அரசின் அணுகுமுறை இருக்க வேண்டுமே தவிர, மூடி மறைக்கக்கூடிய வகையில் இருப்பதை ஒருபோதும் ஏற்கமுடியாது.

இந்திய பிரதமர் நான்கு நாட்களுக்கு முன்பு ‘அர்பன் நக்சல்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார்.அறிவுஜீவி நக்சல்கள் எல்லாம் கணக்கெடுக்கப்படுவார்கள் என்ற முறையில் பேசப்படுகிறது.அடுத்த இரண்டு நாட்களில் தமிழ்நாட்டின் தலைமைச்செயலாளர் இப்படி ஒரு உத்தரவைப் போடுகிறார்.அதற்கு இரண்டு நாட்களில் குஜிலியம்பாறை வட்டாட்சியர் கணக்கெடுப்பை நடத்துகிறார்.

இவை அனைத்தையும் இணைத்துப் பார்த்தால்,ஒன்றிய அரசும் மாநில அரசும் திட்டமிட்டு இத்தகைய சதி நடவடிக்கையில் ஈடுபடுகிறார்களா என்ற சந்தேகத்தையும் விவாதத்தையும் தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கிறது.இடதுசாரி மாணவர்களின் போராட்டங்களை ஒடுக்கும் வகையில் தமிழ்நாடு அரசின் தலைமைச்செயலாளர் உத்தரவின் அடிப்படையில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியிருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.

அவர் தலைமைச்செயலாளராக நீடிப்பதற்குத் தகுதி இல்லாதவர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய பொறுப்பு தமிழ்நாடு அரசுக்கும்,முதலமைச்சருக்கும் உண்டு.அதிகாரிகளை வைத்துக்கொண்டு ஆட்சி நடத்தப் போகிறீர்களா அல்லது கம்யூனிஸ்ட்களை வைத்துக்கொண்டு ஆட்சியை தொடரப் போகிறீர்களா?

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Response