
கர்நாடகாவின் சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹனூர் தாலுகாவின் காவிரி வனவிலங்கு சரணாலயம் ஷாக்யா அருகே உள்ள மரியமங்களா அடர்ந்த வனப்பகுதியில் ஆகஸ்ட் 15 அதிகாலை வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது,வேட்டையாட வந்ததாக சந்தேகிக்கப்பட்ட தமிழர்கள் 4 பேர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் மரியமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த அந்தோணிசாமி (50), ஜான் ரோஸ் பீட்டர் (42), லாசர் குமார் (33) ஆகிய 3 பேர் உயிரிழந்தனர்.படுகாயம் அடைந்த மகிமை தாஸ் (48) மைசூருவில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இறந்தவர்களின் உடல்கள் உடற்கூறு பரிசோதனைக்காக மைசூரு கேஆர் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
இதையறிந்த இறந்தவர்களின் உறவினர்கள் மற்றும் கிராமமக்கள் ஆயிரக்கணக்கில் கூடி ஹனூரில் போராட்டம் நடத்தினர்.வனத்துறை அலுவலகத்தைச் சூறையாடிய அவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டம் நேற்றுவரை தொடர்ந்து நடந்தது.
இதற்கிடையில்,போராட்டம் நடந்த இடத்திற்கு நள்ளிரவில் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.மஞ்சுநாத் வந்து பேச்சுவார்த்தை நடத்தியும் எந்தப் பயனும் இல்லை.சனிக்கிழமை பகல் 12 மணிமுதல் ஞாயிறு அதிகாலை 2 மணிவரை சாலை மறியல் நடந்தது.நேற்றும் போராட்டம் தொடர்ந்தது.அப்போது,இலேசான தடியடி நடத்தி ஐந்து பேரை கைதுசெய்து பின்னர் விடுவித்தனர்.ஆனாலும்,பல்வேறு அமைப்பினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தநிலையில்,சட்டமன்ற உறுப்பினர் எம்ஆர் மஞ்சுநாத் இறந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் கிராமத்தின் தலைவர்கள், பாதிரியார்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு மொத்தம் ரூ.15 இலட்சம் வழங்குவதாக உறுதி அளித்தார்.இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை,குழந்தைகளுக்கு கல்வி மற்றும் உரிய நிவாரணம் பெற்றுத்தர முழுமையான முயற்சி மேற்கொள்கிறேன் என உறுதி அளித்தார் இதையடுத்து போராட்டம் திரும்பப் பெறப்பட்டது.
இந்நிலையில்,குடகு மாவட்டத்தில் உள்ள பகண்டேஸ்வரர் கோயிலுக்குச் சென்ற முதல்வர் டி.கே.சிவகுமார் கூறுகையில்,
அவர்கள் வேட்டைக்காரர்கள் என எங்களின் கவனத்திற்கு வந்துள்ளது.அனைத்தையும் குறித்து அனைவருக்கும் தெரிவிக்க முடியாது.வனத்துறையினரும் எனக்கு தகவல் தெரிவித்தனர்.அவர்களிடமிருந்து துப்பாக்கி மற்றும் இரண்டு இறைச்சி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.ஒருவர் தப்பியோடிவிட்டார்,மேலும் தகவல் கிடைக்க வேண்டி உள்ளது.வனத்துறையினர் தங்களின் பாதுகாப்புக்காகச் சுட்டதாகக் கூறுகின்றனர்.இது குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளேன்.இறந்தவர்களுக்கு நிவாரணம் வழங்கும் பணியைச் செய்வோம்.எந்த மாதிரி நிவாரணம் வழங்குது குறித்து முடிவு செய்து கூறுகிறோம் என்றார்.
எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.அசோக் கூறுகையில், சாம்ராஜ்நகர் ஹனுரில் நடந்த என்கவுன்டர் அசலா? அல்லது போலியா?, மூன்று பேர் கொலை செய்யப்பட்டதற்கு உண்மையான காரணம் என்ன? என்பது வெளியே வரவேண்டும். எனவே, நீதிபதி தலைமையிலான விசாரணைக்கு அரசு உத்தரவிடவேண்டும் அல்லது சிபிஐ விசாரணை நடத்தவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இறந்து போன அந்தோணிசாமியின் மனைவி ஹனூர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அதில் எனது கணவர் உள்ளிட்டோர் மாடு மேய்க்கத்தான் அங்கு சென்றனர். அவர்களை விசாரணை செய்யாமலே சுட்டுக்கொன்றுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.
இதைத் தொடர்ந்து,வனத்துறையினர் 7 பேர் மீதும் நேற்று கொலை வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


