
காவிரிநீர்ச் சிக்கல் மற்றும் மேகதாது அணை கட்ட கர்நாடகா முயற்சி எடுத்துவருவதைக் கண்டித்து திமுக சார்பில் நேற்று முன்தினம் தஞ்சையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.அதில்,திமுக இளைஞர் அணிச் செயலாளரும்,தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார்.அந்தப் பேச்சு குறித்து, தவெக தஞ்சை மத்திய மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் பைரவி,தஞ்சை கிழக்கு காவல்நிலையத்தில் உதயநிதி ஸ்டாலின் மீது புகார் அளித்தார்.அதன்படி தஞ்சை கிழக்கு காவல் நிலைய காவல்துறையினர்,எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
நேற்று அதிகாலை தஞ்சை காவல்துறையினர் சென்னை நீலாங்கரை கபாலீஸ்வரர் நகர் சன்ரைஸ் அவென்யூ சந்திப்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வீட்டிற்கு சென்றனர்.தஞ்சை காவல்துறையினருடன், தென்சென்னை இணை ஆணையர் விஜயகுமார்,அடையாறு துணை ஆணையர் கார்த்திகேயன் ஆகியோர் வீட்டுக்குள் சென்றனர்.
அப்போது வீட்டில் உதயநிதி ஸ்டாலின் மனைவி கிருத்திகா உதயநிதி இருந்தார்.அவரிடம் தஞ்சை காவல்துறையினர் பேசினர்.அதற்குள் திமுக நிர்வாகிகள் மத்தியில் தஞ்சை காவல்துறையினர் உதயநிதி ஸ்டாலின் வீட்டிற்கு வந்த தகவல் தீயாகப் பரவியது.
உடனே உதயநிதி ஸ்டாலின் வீட்டின் அருகே நூற்றுக்கும் மேற்பட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் குவிந்தனர். திமுக அமைப்புச் செயலாளர் கே.என்.நேரு,முன்னாள் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன்,சேகர்பாபு மற்றும் வழக்குரைஞர்கள் என்.ஆர்.இளங்கோ,பரந்தாமன்,சரவணன் ஆகியோர் உதயநிதி வீட்டிற்கு விரைந்து வந்தனர்.அவர்களை 100 மீட்டர் தொலைவில் உள்ள சன்ரைஸ் அவென்யூ அருகே தடுப்புகள் அமைத்து தடுத்தனர்.
அப்போது காவல்துறையினருக்கும் முன்னாள் அமைச்சர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் கே.என்.நேரு மற்றும் மா.சுப்பிரமணியனை உள்ளே செல்ல அனுமதி அளித்தனர்.அதேநேரத்தில், உதயநிதி ஸ்டாலின் மனைவி கிருத்திகாவிடம், காலை 8.30 மணிக்கே வந்துவிட்டோம்.ஆனாலும் உதயநிதியை வெளியே அனுப்பவில்லை என கூறி உள்ளே நுழைய முயன்றனர்.அதற்கு கிருத்திகா,அவர் குளித்துக் கொண்டிருக்கிறார். கொஞ்சம் பொறுமையா இருங்கள் என்றார்.பின்னர் மா.சுப்பிரமணியனும்,‘அவர் காலைக் கடனை முடிக்கவேண்டாமா? தஞ்சாவூருக்கு அழைத்துச் செல்வதாகச் சொல்கிறீர்கள்.இங்கிருந்து 7 மணி நேரம் ஆகும்.அதுவரை அவர் காலைக்கடனைக் கழிக்காமல் அழைத்துச் செல்வது மனிதஉரிமை மீறல் என ஆவேசமாக தெரிவித்தார்.
அந்நேரம்,அங்கு சென்ற திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனை உள்ளே அனுமதிக்கவில்லை.அப்போது அங்கு கூடியிருந்த திமுக தொண்டர்கள் காவல்துறையினருக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர் மேலும், சாலையின் குறுக்கை போடப்பட்டிருந்த தடுப்புகளைத் தாண்டி உள்ளே செல்ல முயன்றனர்.இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது.பின்னர் துரைமுருகன் உள்ளே செல்ல அனுமதி அளித்தனர்.
உதயநிதி ஸ்டாலினை கைது செய்ய வந்த தகவலைத் தொடர்ந்து நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டிற்கு ஆயிரக்கணக்கான திமுக தொண்டர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். இதனால் அப்பகுதியே போர்க்களம் போல் காட்சி அளித்தது.
எப்படியும் திமுக தொண்டர்கள் அதிகளவில் வருவார்கள் என்று சென்னை தெற்கு மண்டல இணை ஆணையர் விஜயகுமார் மற்றும் அடையாறு துணை ஆணையர் கார்த்திகேயன் ஆகியோர் உத்தரவுப்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீலாங்கரை பகுதியில் சன்ரைஸ் அவென்யூ பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டன. சன்ரைஸ் அவென்யூ முதல் உதயநிதி ஸ்டாலின் வீடுவரை கயிறு மற்றும் தடுப்புகள் அமைத்து யாரும் உள்ளே செல்லாதபடி தடை விதித்தனர்.மேலும், சன்ரைஸ் அவென்யூ பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் வேலைக்குச் செல்லமுடியாமல் தவித்தனர்.
இதற்கிடையே சென்னை தெற்கு மண்டல கூடுதல் ஆணையர் நரேந்திரன் நாயர்,இணைஆணையர் விஜயகுமார், அடையாறு துணைஆணையர் கார்த்திகேயன் ஆகியோர் உதயநிதி ஸ்டாலின் வீட்டில் அவரது மனைவி கிருத்திகா மற்றும் சபரீசன்,முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன்,கே.என்.நேரு,எ.வ.வேலு,எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மா.சுப்பிரமணியன்,சேகர்பாபு மற்றும் வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோவன் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
காவல்துறையின் நடவடிக்கைக்கு முன்னாள் திமுக அமைச்சர்கள் கடும் எதிர்ப்பைப் தெரிவித்தனர். சட்டப்பூர்வமான விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கத் தயாராக இருக்கும்போது,அரசியல் உள்நோக்கத்தோடு அவசர அவசரமாக கைது செய்ய முனைவது நியாயமற்றது என்று அவர்கள் அதிகாரிகளிடம் காரசாரமாக வாதிட்டனர்.இதனால் நீலாங்கரை இல்லத்திற்கு வெளியே நீண்டநேரமாக பதற்றமான சூழல் நீடித்தது.
அதேநேரம் உதயநிதி ஸ்டாலின் வீட்டின் அருகே திமுக தொண்டர்களை உள்ளேவிடாமல் தடுப்பதற்காக சென்னை சென்னை காவல்ஆணையர் அமல்ராஜ் நேரடியாக அதிரடிப்படையுடன் அங்கு வந்தார்.சென்னை காவல்துறை வரலாற்றில் ஒரு கட்சியின் முக்கிய தலைவரை கைது செய்ய ஆணையரே இதுவரை வந்தது இல்லை.இதுதான் முதல்முறை.அங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். உதயநிதி ஸ்டாலின் வீட்டருகே யாரையும் அனுமதிக்கவில்லை.நீலாங்கரை முதன்மைச்சாலையில் அனைவரும் தடுத்து நிறுத்தப்பட்டனர். அருகில் உள்ள தெருக்கள் வழியாகவும் யாரும் உள்ளே நுழையாத வகையில் தடுப்புகளை ஏற்படுத்தி உள்ளே செல்லவிடாமல் தடுத்தனர்.
இதையடுத்து திமுக தொண்டர்கள் அனைவரும் நீலாங்கரை முதன்மைச் சாலையில் அமர்ந்து காவல்துறைக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் நீலாங்கரை பகுதி முழுவதும் பதற்றமான நிலை ஏற்பட்டது. அப்போது,முன்னாள் சமஉ பிரபாகர ராஜா தலைமையில் மற்றொரு பகுதியில் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.ஒருகட்டத்தில் போராட்டத்தில் திமுகவினருடன் பொதுமக்களும் கலந்துகொண்டதால் நிலைமை மோசமானது.
அதைத்தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட திமுகவினரை குண்டுக்கட்டாகக் கைது செய்து பேருந்துகளில் ஏற்றினர்.திமுகவினரை கைது செய்யும் போது கடுமையான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.அப்போது தடுப்புகளை உடைத்துக் கொண்டு திமுகவினர் உதயநிதி ஸ்டாலின் வீட்டை நோக்கிச் செல்ல முயன்றனர்.அவர்களை கயிறு மற்றும் இரும்பு தடுப்புகள் அமைத்து தடுத்தனர்.
அப்போதும் திமுகவினர் முன்னேறிச் செல்ல முயன்றனர்.இதில் பலர் கீழே விழுந்து காயமடைந்தனர்.உடனே அனைவரையும் கைது செய்து வேன் மற்றும் பேருந்துகளில் அழைத்துச் சென்றனர்.நிலைமை மோசமானதை தொடர்ந்து சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் சம்பவ இடத்திற்கு வந்து, திமுக மூத்த நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இருந்தாலும் திமுக நிர்வாகிகள் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.
இதற்கிடையே,தஞ்சை காவல்துறையினர் மற்றும் சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ்,கூடுதல் ஆணையர் நரேந்திரன் நாயர் ஆகியோர் உதயநிதி ஸ்டாலினிடம் கைது செய்வதற்கான வாரன்டை காட்டினர்.அப்போது வழக்கறிஞர்கள் வரும்வரை காத்திருக்கும்படி உதயநிதி தரப்பு கேட்டுக்கொண்ட நிலையில்,கைது நடவடிக்கையைத் தடுக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்தது.அதை ஏற்று வழக்கை அவசரமாக விசாரிக்க ஒப்புக்கொண்ட நீதிபதிகள்,மதியம் 12 மணிவரை உதயநிதி ஸ்டாலினை கைது செய்யக்கூடாது என்று உத்தரவிட்டனர்.பிற்பகலில் இந்த வழக்கு விசாரணைக்கு வரும் எனவும் தெரிவித்தனர்.
எனவே,மூத்தவக்கீல் என்.ஆர்.இளங்கோ,நீதிமன்றம் அவரை கைது செய்ய தடை உத்தரவு வழங்கியிருப்பதாக தெரிவித்தார்.ஆனால் இணைஆணையர் விஜயகுமார்,மேலதிகாரிகளிடம் கேட்டுவிட்டு வருவதாகத் தெரிவித்தார். இதுகுறித்து அமல்ராஜிடம் பேசினார்.அமல்ராஜ் உத்தரவைத் தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவு கையில் இல்லை. உங்களை கைது செய்யும்படி மேலிடம் உத்தரவிட்டுள்ளது. அதனால் எங்களுடன் வாருங்கள், ஒத்துழைப்பு கொடுங்கள் என்று தெரிவித்தனர். நீதிமன்ற உத்தரவு குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது என்றும் தெரிவித்தனர்.
நீங்கள் அரசு வக்கீலிடம் கேளுங்கள். அவர் இல்லை என்று மறுத்தால், உங்களுடன் வருகிறோம் என்று உதயநிதி தெரிவித்தார்.ஆனால் அவரை வாகனத்தில் ஏற்றிச்செல்வதிலேயே குறியாக இருந்தனர்.இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.அதேநேரத்தில்,உதயநிதி ஸ்டாலின் தன்னிடம் வழங்கிய வழக்குப்பதிவு விவர நகலை முழுமையாகப் படித்தார்.
தஞ்சை கிழக்கு காவல்நிலைய ஆய்வாளர் சோமசுந்தரம்,உதயநிதி ஸ்டாலின் மீது பிஎஸ்என் மதம், இனம், மொழி அல்லது சாதி அடிப்படையில் வெவ்வேறு குழுக்களிடையே பகைமையைத் தூண்டுவது (196),கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் ஒருவரை வேண்டுமென்றே ஆத்திரமூட்டுவது (192),பொதுஅமைதிக்குக் குந்தகம் விளைவித்தல் (352),பெண்களின் மானம் மற்றும் மரியாதைக்கு அவமரியாதை விளைவித்தல் (79),பொது இடங்களில் ஆபாசமான வார்த்தைகளை பேசுவது (296(பி)),குற்றவியல் சதி (61) மற்றும் குற்றவியல் மிரட்டல் (351(2)) மற்றும் தமிழ்நாடு பெண்கள் துன்புறுத்தல் தடுப்புச் சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பத் தடுப்புச் சட்டம், இணையம் அல்லது மின்னணு வடிவில் அருவருப்பான அல்லது காமுகத்தன்மையான தகவல்கள் வெளியிடுதல் (67) ஆகிய 9 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யதுள்ளனர்.
அதைப்படித்த பின்பு கைதுக்கு ஒப்புக்கொண்டார்.பின்னர் உதயநிதி ஸ்டாலினை கைது செய்து வாகனத்தில் ஏற்றிக்கொண்டு அவரது வீட்டில் இருந்து வெளியே வந்தனர்.
அப்போது சாலையில் போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் உதயநிதி ஸ்டாலினை கைது செய்ததைக் கண்டித்தும், தவெக அரசுக்கு எதிராகவும் முழக்கம் எழுப்பியபடி அவரை ஏற்றிச் செல்லும் வாகனத்தை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.உதயநிதியை அழைத்துச் சென்ற வாகனம் அவரது வீட்டில் இருந்து சன்ரைஸ் அவென்யூ பகுதியைக் கடந்து செல்ல முடியாதபடி திமுகவினர் சாலையில் படுத்தபடி வாகனத்தைச் செல்லவிடாமல் தடுத்தனர்.
அப்போது காவல் வாகனத்தில் இருந்தபடியே உதயநிதி ஸ்டாலின் அளித்த பேட்டியில்…
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என ஆர்ப்பாட்டத்தில் பேசினேன்.டம்மி முதல்வருக்கு ரீல்ஸ்வெறி முற்றிப்போய் உள்ளது.முதல்வர்,அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் ரீல்ஸ் வெறியில் உள்ளனர்.நான் பேசாத ஒன்றை பேசியதாக கட், காப்பி, பேஸ்ட் பண்ணி பொய் செய்தி பரப்புகின்றனர்.என்மீது பொய் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.கைது நடவடிக்கையை காமெடியாக பார்க்கிறேன்.இதற்கெல்லாம் பயப்படக்கூடிய ஆள் நான் கிடையாது.திமுகவின் கடைசிதொண்டன் கூட கைதுக்கு பயப்படுபவர்கள் கிடையாது.சட்டசபையில் எதிர்க்கட்சிகள் எழுப்பும் எந்த கேள்விகளுக்கும் பதில் கிடையாது. காவிரி விவகாரத்தில் தவெக அரசின் தோல்வியை திசைதிருப்ப என்மீது அவதூறு பரப்பி கைது செய்துள்ளனர். சட்டப்பேரவையில் நான் பங்கேற்பதை தடுக்கவே என்னை கைது செய்துள்ளனர். கைது நடவடிக்கையை சட்டப்படி எதிர்கொள்வேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
அதன்பின்,தொண்டர்களின் மறியலையும் மீறி உதயநிதி ஸ்டாலினை அழைத்து சென்றனர்.அவருடன் முன்னாள் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன்,சேகர்பாபு மற்றும் பரந்தாமன்,உதவியாளர் செந்தில்,வக்கீல் சரவணன் உள்ளிட்டோர் பயணித்தனர்.உதயநிதி ஸ்டாலினை மூடுந்து மூலம் தஞ்சைக்கு அழைத்துச் சென்றனர்.அப்போது பின்னால் முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் மகிழுந்தில் சென்றனர். இந்த சம்பவத்தால் நீலாங்கரை பகுதியில் 2 மணி நேரத்திற்கு மேல் பதற்றமும், போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. மேலும், தமிழகம் முழுவதும் பரபரப்பான சூழல் எழுந்துள்ளது. உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து தமிழகத்தில் திமுகவினர் ஆர்ப்பாட்டம், மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இன்று தவெக அரசின் முதல் நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடர் நடக்கவுள்ள நிலையில்,அதில் எதிர்க்கட்சித் தலைவர் இருக்கக்கூடாது என்பதற்காகவே இந்தக் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக,திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர் விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.சென்னையில் கைது செய்யப்பட்ட உதயநிதி ஸ்டாலின்,தஞ்சாவூர் கிழக்கு காவல்நிலையம் அழைத்துச் செல்லப்படுவதாக இருந்தது.ஆனால் ஆயிரக்கணக்கான மக்கள் கூடியதால்,திருச்சி எல்லையில் உள்ள செங்கிப்பட்டி காவல்நிலையம் அழைத்துச் சென்றனர்.இரவு 8.15 மணிக்கு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி விடுவிக்கப்பட்டார்.
அதைத் தொடர்ந்து வெளியில் வந்தவருக்கு,அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.அவர் மகிழுந்தில் ஏறி,சாலைவலமாகச் சென்றார்.பின்னர் திருச்சி வழியாக சென்னைக்கு விமானத்தில் வந்தார்.சென்னை விமான நிலையத்திலும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.


