விஜய் கட்சியினரின் அபாயகரமான நடவடிக்கை – பிரஸ்கிளப் கடும் கண்டனம்

சென்னை பத்திரிகையாளர் மன்றம் நேற்றிரவு வெளியிட்டுள்ள அறிக்கையில்….

ஊடகங்களையும் ஊடகவியலாளர்களையும் குறிவைத்து கீழ்த்தரமாகப் பதிவிட்டுவரும் தமிழக வெற்றிக் கழகத்தினரை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாகக் கண்டிக்கிறது.

பதிவுகள் நீக்கப்படுவதுடன்,இந்த அறுவெறுக்கத்தக்க நடவடிக்கையை உடனே நிறுத்தாவிட்டால் சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கிறோம்.

தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்தவர்கள் சமூகவலைதளங்களில் பல முன்னணி செய்தித் தொலைக்காட்சிகளின் பெயர்களிலும்,மேலும் பல கற்பனையான ஊடகநிறுவனங்களின் பெயர்களிலும் பக்கங்களைத் தொடங்கியுள்ளனர். அந்த குறிப்பிட்ட சமூகவலைதளப் பக்கங்களில் பல முன்னணி பத்திரிகையாளர்கள் குறித்து உண்மைக்குப் புறம்பான மற்றும் நாகூசும் வகையிலான தகவல்களைத் திட்டமிட்டு பரப்பி வருகின்றனர்.

அதேபோல்,தமிழ்நாட்டின் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் குறித்தும்,உண்மைக்குப் புறம்பான தகவல்களையும்,கீழ்த்தரமான விமர்சனங்களையும் திட்டமிட்டு பதிவிட்டு வருகின்றனர்.

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில்,கட்சி வேறுபாடின்றி இதுபோல் போலியான பக்கங்களை உருவாக்கி ஒரு கட்சியைச் சேர்ந்தவர்கள் மற்றொரு கட்சியை விமர்சிப்பது வழக்கமான ஒன்றாக மாறியுள்ளது.ஆனால், ஒரு குறிப்பிட்ட கட்சியைச் சேர்ந்த பலர்,திட்டமிட்டு பல ஊடகங்களின் பெயரிலேயே போலியான பக்கங்களை உருவாக்கி,ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகங்களுக்கு எதிராக இதுபோல் கீழ்த்தரமான தாக்குதலை நடத்துவது தமிழகம் இதுவரை கண்டிராத மிகவும் மோசமான மற்றும் அபாயகரமான நடவடிக்கையாகும்.

ஊடகங்கள் மீதும்,ஊடகவியலாளர்கள் மீதும் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்தவர்கள் நடத்தியுள்ள இந்த இணையவழித்தாக்குதல்,ஊடகங்களையும், ஊடகவியலாளர்களையும் வெளிப்படையாக மிரட்டுவதற்குச் சமமாகும். இது அப்பட்டமான கருத்துச் சுதந்திர ஒடுக்குமுறை மற்றும் மனித உரிமை மீறலுமாகும்.மேலும், உண்மைக்குப் புறம்பான இதுபோன்ற செய்திகளை வெளியிடுவது தமிழக மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தி அமைதியை சீர்குலைத்து சட்டம் ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தும் நடவடிக்கையாகும்.

ஆகவே,இந்த கீழ்த்தரமான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்தவர்களை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாகக் கண்டிக்கிறது.

ஊடகங்களையும்,ஊடகவியலாளர்களையும் மிரட்டும் வகையிலும்,திட்டமிட்டு பொதுவெளியில் அவமானப்படுத்த வேண்டும் என்ற குற்றநோக்கத்துடனும் செயல்பட்டுள்ள தமிழக வெற்றிக் கழகத்தினர் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்துகிறது.

இதுபோன்ற கீழ்த்தரமான நடவடிக்கையில் ஈடுபட்ட தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்தவர்கள் மீது அக்கட்சியின் தலைவர் திரு.விஜய் அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்துகிறது.

சுரேஷ் வேதநாயகம்
தலைவர்

மு.அசீப்
பொதுச்செயலாளர்

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response