மதுரை திருமங்கலத்தில் அநியாயமாக உயிரிழந்த ஈழத்தமிழர் – அதிகாரிகள் திருந்துவார்களா?

“பாவியார் போற இடம் பள்ளமும் திட்டியும்” என்பது போல் ஈழ தமிழர்கள் தஞ்சம் புகுந்து வாழும் தமிழகத்தில் மீண்டும் ஒரு ஈழ அகதி பலியாகி இருக்கின்றார்.

மதுரை மாவட்டத்தில் திருமங்கலத்தில் கூட்டியார் குண்டு பகுதியில் உள்ள இலங்கை அகதிகள் முகாம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டு இருக்கும் 500 க்கும் மேற்பட்ட ஈழ அகதி குடும்பங்களில் ஒன்றை சேர்ந்த ஈழ அகதி ரவிச்சந்திரன் அவர்களை அம்முகாமுக்கு சென்ற வருவாய்த்துறை அதிகாரி ராஜேந்திரன் அவமதித்து தகாத வார்த்தைகளில் சாடியதில் அவர் தற்கொலை செய்துள்ளார் என்ற செய்தி அதிர்ச்சியை தருகிறது.

அகதிகளை கணக்கெடுக்கும் பணிக்காக சென்ற வருவாய்த்துறை அதிகாரி ராஜேந்திரன் என்பவர் முகாமிற்குள் சோதனையிட்டபோது தாமதமாக உள்ளே வந்த ரவிச்சந்திரனின் பெயரை பட்டியலில் இருந்து நீக்கி இருக்கின்றார்.

மருத்துவமனையில் தன் மகனை சிகிச்சைக்கு சேர்க்க சென்றதால் தாமதம் என ரவி விளக்கிக் கூறியும் அதிகாரி பொருட்படுத்தாமல் அகங்காரமாக மறுக்க “இப்படி செய்தால் நாங்கள் எப்படி வாழ்வது?” என வேதனையோடு கேட்டதற்கு “இதோ கரண்டு மரத்தில் ஏறி சாவு” என கூறியதோடு மனம் உடையும் வகையில் கண்டபடி அவமானபடுத்தி பேசியும் உள்ளார்.

இதனால் தன்மானம் சீண்டப்பட்டு மனம் வெந்த நிலையில் ரவிச்சந்திரன் பக்கத்திலிருந்த மின்கம்பி மரத்தில் ஏறி உயர் அழுத்த மின் கம்பியை பிடித்து கருகி செத்துள்ளார்.

இந்த கொடிய நிகழ்வுக்கு காரணமான அதிகாரி மேலும் உடலை கைப்பற்றி நடந்ததை விபத்து என மறைக்கும் நோக்கில் குவிக்கப்பட்ட காவல்துறை ஆகியோரை அகதிகள் உணர்வு பொங்க எதிர்த்து குரல் எழுப்பி உள்ளார்கள்.

அகதிகள் எதிர்ப்பை பொலிசார் தடியடி நடத்தி, கண்ணீர் புகைக்குண்டு வீசி, இறந்த ரவியின் உடலை கைப்பற்றி மறைத்துவிட முயற்சித்து இருக்கின்றார்கள்.

அநியாயமாக ஒரு உயிரை பறி கொடுத்ததோடு இந்த சிக்கல் முடியப் போவதில்லை. இந்த அகதி முகாமில் நீதி கேட்டு இப்பொழுது வேதனை சுமந்து போராடும் அகதிகளை எப்படி என்னென்ன கொடுமைகள் செய்து வதைக்கப் போகின்றார்களோ என வேதனை எழுகின்றது.

மாவட்ட கண்காணிப்பாளர் விஜேந்திர பிதாரி தலைமையில் 300க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர் என அறியப்படுகின்றது.

அகதிகளை அடைக்கலம் கொடுத்து காக்கும் தமிழக அரசின் இலட்சணம் இது தானா?

அகதிகள் மன குமுறலை கொட்டி கதறினால் அதை அடக்க காவல் துறையா?

மாவட்ட ஆட்சியர் வர வேண்டும் என்று கூறி, ரவிச்சந்திரன் உடலை எடுக்க மறுத்து, ஈழ அகதிகள் நடத்தும் போராட்டத்தை அடக்க காவல் துறையை குவித்து அடக்குமுறையை கையாளுவது எந்த வகையில் நீதி?

மாறாக மாவட்ட ஆட்சியர் அங்கு நடந்ததை விசாரிக்கச் செல்லாதது ஏன்?

ஒரு உயிரை பறிகொடுத்து தவிக்கும் அந்த ஈழ அகதிகளை ஆற்றுப்படுத்தி தேற்றுவதை விடுத்து அடக்குமுறையை கையாண்டு கண்ணீரை அடக்க நினைத்து காவல் துறையை குவித்து வன்முறையை கையில் எடுப்பதை வன்மையாக கண்டிக்க வேண்டும்.

சொந்த மண்ணிலும் வாழ முடியாமல் வந்த மண் அன்னை தமிழகம் நிச்சயம் எம்மை வாழ வைக்கும் என நம்பி வந்து அங்கு இது போன்ற அநீதிகளுக்கு பலியாகும் ஈழ தமிழர்கள் வாழ்வின் துன்பியல் முடிவுகள் இது போல் ஏராளமாக உள்ளன.

அகதி முகாம், சிறப்பு முகாம் என ஈழத் தமிழர்களை மனிதர்களாக நடத்தாமல் மந்தைகளாக நடத்தி வதைக்கும் தமிழக மண்ணில் எங்கள் மக்கள் இன்னமும் எத்தனை நாள் செத்தொழியப் போகிறார்களோ?

ஈழ ஆதரவு தமிழக உணர்வாளர்கள் இவற்றை பார்த்துக் கொண்டு இருக்காமல் சிறப்பு முகாம்களை மூடுவதிலும் அகதிகள் விடயத்தில் மனிதாபிமானத்தோடும் செயல்ப்பட தமிழக அரசை வலியுறுத்த வேண்டும்.

Leave a Response