புலி போல தனியாக நிற்கிறேன் – சீமான் சிறப்புப் பேட்டி

‘காசு அதிகம் கொடுக்கும் கட்சியுடன்தான் கூட்டணி என்பது விபசாரத்துக்கு சமம்,” என, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார். அவர் தினமலர் இதழுக்கு அளித்த சிறப்பு பேட்டி:

கடந்த தி.மு.க., ஆட்சி; தற்போதைய அ.தி.மு.க., ஆட்சி. எப்படி பார்க்கிறீர்கள்?

ஆட்சி புரிவதில் ஆள் மாற்றமே தவிர, ஆட்சி முறையில் எந்த மாற்றமும் இல்லை. இரு ஆட்சிகளிலும் கொலை, கொள்ளை, லஞ்சம், பஞ்சம் உண்டு. காமராஜர் ஆட்சி போல, துாய்மையான ஆட்சி நடக்கவில்லை. அதனால் தான் நாங்கள் மாற்றம் கொண்டு வர வேண்டும் என, நினைக்கிறோம். இரண்டு கட்சிகளுக்கும் என்ன வித்தியாசம் என்றால். தி.மு.க., – அ.தி.மு.க, என்பதில், ‘அ’ என்ற எழுத்து மட்டும் தான்.

இலங்கையில், தமிழ் இனம் அழியும்போது கருணாநிதி துாங்கிக் கொண்டிருந்தார்; சென்னையில், நீரில் மக்கள் அழியும் போது, ஜெயலலிதா துாங்கிக் கொண்டிருந்தார்.தமிழகத்தில் ஏகப்பட்ட முதல்வர்வேட்பாளர்கள் இருக்க, யாருக்கு அதிக வாய்ப்புள்ளது?

முதல்வர் யார் என்பதை, மக்கள் தான் முடிவு செய்கின்றனர். மாற்றத்தை மக்கள் எதிர்பார்க்கின்றனர். இம்முறை, நன்மை செய்பவர்களை தேர்ந்தெடுப்பர். நானும்தானே களத்தில் இருக்கிறேன்.

ஒரே நாளில் வேட்பாளர்களை அறிவித்து, பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நீங்கள், குறைந்த பட்சம் 20 தொகுதிகளிலாவது, ‘டெபாசிட்’ பெற முடியுமா?

தமிழகம், கேரளா, புதுச்சேரி என அனைத்து இடங்களிலும், ஒரே பாய்ச்சலாகத் தான் பாய்கிறோம். கட்சி தெரியாத இடம் இருக்க கூடாது என்பது தான் எங்கள் இலக்கு. அதற்கு பின், என்ன நடந்தாலும் லாபம் தான்.

உங்கள் கட்சிக்கு புலி சின்னத்தை கேட்டீர்கள்; இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்தை தந்ததால் ஏமாற்றம் அடைந்து விட்டீர்களா?

நாங்கள் புலி, காளை மாடு, பனை மரம், கலப்பை, வண்டி சக்கம் போன்ற சின்னங்களை கேட்டோம். ஆனால், நகவெட்டி, மண் பானை, படகு, இரட்டை மெழுகுவர்த்தி, குடம் போன்ற சின்னங்களை தந்தனர். தன்னை அழித்து, மற்றவர்களுக்கு வெளிச்சம் தரக்கூடிய இரட்டை மெழுகுவர்த்தியை தேர்வு செய்தோம். அ.தி.மு.க.,வும், தி.மு.க.,வும் இருட்டு. இந்த இரண்டு இருட்டையும் இரு மெழுகுவர்த்திகளை கொண்டு அகற்றுவோம்.

பா.ம.க., ஆட்சிக்கு வந்தால், முதல் கையெழுத்தாக, மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என, சொல்லியுள்ளனர். மதுவிலக்கு பிரச்னையில் உங்கள் கட்சியின் நிலைப்பாடு என்ன?

கையெழுத்தினால் மதுவை ஒழித்து விட முடியாது. செயற்கை மது, செயற்கை விவசாயம் நீக்க வேண்டும். பனம் பால், தென்னம் பால் என, மூலிகை சாறு வழங்கும் கடைகளை, ஊருக்கு எல்லையில் துவக்குவோம். இதேபோல, இயற்கை விவசாயத்தை கொண்டு வருவோம். அரசே, விவசாயத்தை நடத்தும். எந்த நிலத்தில், எந்த பயிர் விளைகிறதோ, அதை பயிரிடுவோம். அங்கு, அனைவருக்கும் வேலைவாய்ப்பு அளிப்போம்.

அ.தி.மு.க., – தி.மு.க., ஆகிய கட்சிகளுக்கு எதிரான கட்சிகள், இந்த தேர்தலிலும் ஒன்றிணையவில்லை. தனித்து போட்டியால், மீண்டும் அந்த கட்சிகளுக்கு தானே லாபம்?

தி.மு.க., – அ.தி.மு.க.,விற்கு எதிராக பிற கட்சிகள் அனைத்தும், சிதறி கிடப்பதாக நினைக்கவில்லை. மக்கள் நல கூட்டணி பா.ம.க., ஆகியவை, ஏற்கனவே இந்த கட்சிகளுடன் கூட்டணி வைத்துவிட்டு, இந்த தேர்தலில்தான் தனித்து போட்டியிட உள்ளனர்.

‘திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லை’ என, கூறி வந்த ராமதாஸ், கடந்த லோக்சபா தேர்தலில், தே.மு.தி.க.,வுடன் கூட்டணி வைத்தார். நாங்கள் தான் ஆரம்பம் முதல் இறுதி வரை எதிர்க்க உள்ளோம். அடிப்படையில் நானும் கம்யூனிஸ்ட் என சொல்லும் நீங்கள், கம்யூனிஸ்டுடன் இணைந்து, தேர்தலை சந்திக்க வேண்டியதுதானே?தற்போது தமிழகத்தில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிக்கு, மாநிலத்திற்கு ஒரு கொள்கை. அந்த கம்யூனிஸ்ட் நான் அல்ல.

நீங்கள் தனித்து போட்டியிடுவதற்கு காரணம் என்ன?

பா.ம.க., நிறுவனர் தனித்து போட்டி என்று, இன்று எடுத்த முடிவை , 15 ஆண்டுகளுக்கு முன்பே எடுத்திருந்தால், இன்று முதல்வர் ஆகியிருப்பார். இதேபோல, மக்கள் நல கூட்டணி தலைவர்கள் காலம் தாழ்ந்து தான் முடிவை எடுத்து உள்ளனர்.

அந்த வகையில் பார்க்கும் போது, நான் ஆரம்பத்தில் இருந்தே தனித்து போட்டி என முடிவு எடுத்திருப்பது சரி தான். முதன்மையான கட்சி என நிருபிக்கவே, தனித்து போட்டியிடுகிறோம்.

தி.மு.க., கூட்டணிக்கு, விஜயகாந்த் செல்வது, கிட்டத்திட்ட உறுதியாகி விட்டது. இந்த கூட்டணி தேர்தலில் வெல்லுமா?

தி.மு.க., கூட்டணியில், விஜயகாந்த் இணைந்தாலும், அந்த கூட்டணிக்கு தோல்விதான் ஏற்படும். தி.மு.க.,வை கடுமையாக சாடிவிட்டு, தற்போது அக்கட்சியுடனேயே கூட்டணி என்றால், அக்கட்சியினர் நல்லவர்களாக மாறி விட்டனரா?

காங்கிரஸ் கட்சிக்கு எதிராக உருவாகியது தான் தி.மு.க., ஆனால் இன்று, அந்த கட்சியுடனேயே, தி.மு.க., கூட்டணி அமைத்துள்ளது. இப்படி, எந்த கொள்கையுடனும் அமையும் கூட்டணிக்கு மக்கள் ஆதரவளிக்க மாட்டார்கள்.

திருச்சிக்கு தலைநகரை மாற்ற வேண்டும் என வலியுறுத்துவது ஏன்?

தலைநகரை திருச்சிக்கு கொண்டு செல்வதன் மூலம், சென்னையில் அடிப்படை வசதிகளுக்கும், வசிப்பதற்கும், போக்குவரத்துக்கும் ஏற்பட்டுள்ள நெருக்கடியை குறைக்க முடியும். இதனால்தான், தலைநகரை மாற்ற வேண்டும் என, கோரிக்கை விடுக்கிறேன்.

ஒரு லட்சம் கோடி ரூபாயாக இருந்த, தமிழக அரசின் கடன் சுமை, இன்று, இரண்டு லட்சம் கோடி ரூபாயை தாண்டி விட்டதே?

அனைத்து திட்டங்களுக்கான செலவு போக, உபரியாக இருப்பவைகளை வேண்டுமானால் இலவசமாக அளிக்கலாம். ஆனால், இங்கு கடன் வாங்கி, இலவச பொருட்கள் வழங்குகின்றனர். கடன் சுமை விவரங்கள் குறித்து, தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

ராஜிவ் கொலையாளிகள் ஏழு பேர் விடுதலையில், தமிழக அரசு கடிதம் மூலம், மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்கிறதா?

ராஜிவ் கொலையாளிகள் ஏழு பேர் விடுதலையில், தமிழக அர,சு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருப்பது நியாயமே. இது, தேர்தல் லாபத்திற்காக என சிலர் கூறினாலும், அதுகூட ஏற்றுக் கொள்ள கூடியதுதான்.

தேர்தல் லாபத்திற்காகவாவது, இந்த அரசு கடிதம் எழுதப்படுகிறது. ஆனால். தி.மு.க., ஆட்சியில் அதைகூட செய்யவில்லை.

அந்த வகையில், தி.மு.க.,வை விட, அ.தி.மு.க., எவ்வளவோ மேல்.

இதைத்தான், அ.தி.மு.க.,விற்கு ஆதரவாக, நான் பேசுவதாக சொல்கின்றனர். சொல்கிறவர்கள், கண்டிப்பாக, தி.மு.க.,வை சேர்ந்தவர்களாகத்தான் இருப்பர்.

வரும் சட்டசபை தேர்தலில், தங்களது இலக்கு என்ன?

புலி போல, தனியாக நிற்கிறேன். இந்த தேர்தலில், எவ்வளவு ஓட்டு பெறுகிறோம் என்பது முக்கியம் அல்ல.

சுத்தமான குடிநீர், தடையில்லா மின்சாரம், சரியான சாலைகள், சமமான மருத்துவம் இவற்றை, மக்கள் முன் முன்னிறுத்தி தான், தேர்தலை சந்திக்க உள்ளோம்.

திடீரென பழநிக்கு காவடி எடுக்கிறீர்கள்; பெரியாரிசம் பேசுகிறீர்கள். உங்களது அடையாளம் தான் என்ன?

பழநிக்கு காவடி எடுப்பது, என் இனம் சார்ந்த முதியோரான முருகன் போன்றோருக்கு மரியாதை செலுத்துவது தான். இனம் முதியோர், குல முதியோருக்கு மரியாதை செலுத்த வேண்டியது, நமது கடமை. அதைத்தான் செய்தேன்.

தமிழகத்தை தமிழன் ஆள வேண்டும் என்றால், பிற இனத்தவருக்கு வாய்ப்பில்லையா?

தமிழகத்தை தமிழன் ஒருவன் ஆள வேண்டும். இதனால், பிற இனத்தவருக்கு, எதிரி அல்ல. தமிழனின் தலைமையில், பிற இனத்தவரும் இணைந்து செயல்படலாம்.

கடந்த லோக்சபா தேர்தலில், ‘விஜயகாந்த் மாட்டு தரகர் போல பேரம் பேசுகிறார்’ என, தமிழருவி மணியன் விமர்சித்தார். அந்த கருத்தில், உங்களுக்கு உடன்பாடு உண்டா?

இதை அரசியல் பேரம் என்று சொல்வதை விட, அரசியல் விபசாரம் என்று தான் சொல்ல வேண்டும். காசு அதிகம் கொடுக்கும் கட்சியுடன் கூட்டணி என்பதை, அப்படித் தானே சொல்ல முடியும்.

இவ்வாறு அவர் பேட்டியளித்தார்

Leave a Response