மருத்துவர் இராமதாசுவின் அதிரடி முடிவின் பின்னணி என்ன? – உலவும் இரகசிய தகவல்

விழுப்புரம் மாவட்டம், வானூர் அருகே பட்டானூரில், பாமகவின் புத்தாண்டு சிறப்புப் பொதுக்குழு கூட்டம் 2023 டிசம்பர் 28 ஆம் தேதி நடந்தது. அக்கட்சியின் தலைவர் அன்புமணி இராமதாசு தலைமையில் நடந்த அந்தக் கூட்டத்தில் பேசிய பாமக நிறுவனர் இராமதாசு, தன் மூத்த மகள் வழிப் பேரன் முகுந்தன் பரசுராமனை மாநில இளைஞர் சங்கத் தலைவராக அறிவித்து, “அன்புமணிக்கு உதவியாக இருக்க வேண்டும்” என்றார்.

அதற்கு அன்புமணி உடனே அந்த மேடையிலேயே எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது,இராமதாசு, “நான் சொல்வதைத்தான் கேட்க வேண்டும். இது நான் ஆரம்பித்த கட்சி. நான் என்ன சொல்கிறேனோ அதைத்தான் அனைவரும் கேட்க வேண்டும். அப்படி விருப்பம் இல்லாதவர்கள் விலகிக்கொள்ளுங்கள். என் பேச்சைக் கேட்காதவர்கள் கட்சியிலிருந்து விலகிக் கொள்ளலாம்,” என்றார்.

அப்போதிருந்தே இராமதாசுக்கும், அன்புமணிக்கும் மோதல் போக்கு தொடர்ந்தது. அன்புமணி எதிர்ப்பால் பேரன் முகுந்தன் பரசுராமனை பாமக இளைஞர் சங்கத் தலைவராக நியமிக்கப்பட முடியாமல் போனது.

அதன்பின், அன்புமணி தைலாபுரம் செல்வதைத் தவிர்த்து வந்தார். ஒரு சில நிர்வாகிகள் மட்டும் இராமதாசைச் சந்தித்து வந்தனர். பாமகவில் 90 விழுக்காட்டினர் அன்புமணி பக்கம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

இதனால், அவரது செல்வாக்கை குறைக்க வேண்டும். தலைவர் பதவியில் இருப்பதால் தான் ஆட்டம் போடுகிறார். பதவியைப் பறித்தால் தான் பேச்சைக் கேட்பார் என்கிற முடிவுக்கு இராமதாசு வந்திருக்கிறார்.

அதன்படி, தைலாபுரத்தில் பாமக நிறுவனர் இராமதாசு நேற்று (ஏப்ரல் 10,2025) செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர்….

பாமக தலைவராக இன்று முதல் நான் (இராமதாசு) பொறுப்பு ஏற்று இருக்கிறேன், நிறுவனரும் நான்தான். அன்புமணி செயல் தலைவராக இருப்பார். ஜி.கே.மணி கவுரவ தலைவராக தொடர்வார். செயற்குழு, பொதுக்குழு கூடி முக்கிய முடிவு அறிவிக்கப்படும். 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு இளைஞர்களை வழி நடத்தவே பாமகவின் தலைவராகும் முடிவை எடுத்தேன். நான் தலைவரானதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. அனைத்தையும் உங்களிடம் பகிர்ந்து கொள்ள முடியாது. கூட்டணி குறித்த விசயங்களை கட்சியின் நிர்வாகிகளை அழைத்து[ பேசி எடுப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்தத் திடீர் மாற்றத்திற்கான காரணம் குறித்து சிறுகச் சிறுக தெரிவிப்பேன் என்று செய்தியாளர்களிடம் இராமதாசு கூறினார்.

அதன்பின் அன்புமணியை கட்சித் தலைவர் பதவியில் இருந்து நீக்கியது தொடர்பாக இராமதாசு வெளியிட்ட அறிக்கையில்…

ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான பாட்டாளி சொந்தங்களும், பொது மக்களும், எந்தவொரு முன்அனுமதியும் இல்லாமல் என்னைச் சந்தித்துச் செல்கின்றனர், அவர்கள் என்னிடத்தில் கேட்பதெல்லாம் 1989 இன் தொடக்கத்தில் ஐயாவின் செயல்பாடுகள் எப்படி இருந்தது என்பது எங்களுக்குத் தெரியாது. கட்சி மற்றும் சங்கத்தின் புதிய தலைமுறையினர் எனது தலைமையின்கீழ் சிறிதுகாலம் பணியாற்ற வேண்டுமென்று அன்புக் கட்டளையிட்டனர். அதனைத் தடுக்க மனமில்லாமலும் அவர்கள் ஆசையை நிறைவேற்றிட வேண்டியும், 2026 இல் வரும் சட்டமன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டும் பல்வேறு செயல் திட்டங்களை வகுத்துள்ளேன். அதனைச் செயல்படுத்த வேண்டி கட்சி அமைப்பில் சில மாற்றங்களைச் செய்துள்ளேன் என்று கூறியுள்ளார்.

இராமதாசின் இந்த அதிரடி முடிவுக்குக் காரணம் என்ன? என்பது குறித்து அக்கட்சியினரிடையே உலவும் தகவல்….

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது அதிமுகவுடன் கூட்டணி வைக்க இராமதாசு முடிவு எடுத்தார். இதற்கான பேச்சுவார்த்தை முடிந்து அனைத்து விவகாரங்களும் முடிந்தது.ஆனால், அன்புமணி பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம் என்று கூறி பாஜக அணிக்குத் தாவினார். அந்தத் தேர்தலில் படுதோல்வியைச் சந்திக்க நேரிட்டது. அப்போது இராமதாசு அதிமுகவுடன் கூட்டணி வைத்து இருந்தால் 3 அல்லது 4 இடங்களில் வெற்றி பெற்று இருக்கலாம் என்று சொல்லிக் கடிந்து கொண்டிருக்கிறார்.

இதனால், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று இராமதாசு முடிவு எடுத்தார். வரக்கூடிய தேர்தலில் தோற்றால் தொண்டர்கள் சோர்வடைந்து போவார்கள். எனவே, அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று இராமதாசு சொல்லி வருகிறார்.

அதற்கு அன்புமணி கடும் எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுடன் தான் பாமக கூட்டணி வைக்க வேண்டும். அதிமுக, பாஜக கூட்டணிக்கு வந்தால் பிரச்னை இல்லை என்றும் கூறியிருக்கிறார்.

இதனால் மீண்டும் அப்பா, மகன் மோதல் மீண்டும் ஏற்பட்டுள்ளது. இதனால்தான், இராமதாசு இந்த முடிவை எடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

வெளிப்படையாகச் சொல்லப்படும் காரணம் இது என்றாலும் உயர்மட்டத்தில் இரகசியமாகப் பேசப்படும் தகவல் என்னவெனில்? தேர்தல் கூட்டணி நேரத்தில் புழங்கவிருக்கும் பெரும் தொகையை முழுமையாக எடுத்துக் கொள்ள அன்புமணி விரும்புகிறார் என்றும் அதில் குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களுக்கும் பங்கு கொடுக்க வேண்டும் என்பது இராமதாசின் எண்ணம். அதை அன்புமணி ஏற்காததால் தாமே பொறுப்பேற்று அனைவருக்கும் உரிய பங்கைக் கொடுத்துவிட அவர் திட்டமிட்டிருக்கிறார் என்பதுதான்.

காரணம் எதுவெனினும் அப்பா, மகன் மோதலால் பாமக தொண்டர்கள் குழப்பத்தில் உள்ளனர். அன்புமணி அடுத்து என்ன செய்யப்போகிறார் என்ற பரபரப்பும் எழுந்துள்ளது.

பாமக பொதுக்குழுவில் இராமதாசுக்கும், அன்புமணிக்கும் மோதல் எழுந்த போது, இருவரையும் குடும்பத்தினர் சமாதானப்படுத்தினர். அதேபோல, நேற்று மாலையில் இராமதாசின் மகள்கள் கவிதா, காந்தி ஆகியோர் தைலாபுரம் சென்றனர். இராமதாசை சந்தித்துப் பேசினர். அவரைச் சமாதானப்படுத்தினர். இதனால் பதவிப் பறிப்பு திரும்பப் வாங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. வழக்கமாக இராமதாசு அறிவிப்பதும், குடும்பத்தினர் பேசி சமாதானப்படுத்தியதும்,திரும்பப் பெறுவதும் வாடிக்கை. அதேபோலத்தான் இப்போதும் நடக்கும் என்கின்றனர் பாமக தொண்டர்கள்.

சமாதானப் பேச்சுகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.விரைவில் சுமுக நிலை உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Response