தந்திரமாக சமக்கிருதத்தைத் திணிக்கிறது மோடி அரசு – எச்சரிக்கிறார் கி.வீரமணி

 

மூன்றாவது மொழி – விருப்பப்பட்டவர் படிக்கலாம் என்று தந்திரமாகச் சொல்லி சமஸ்கிருதத்தைத் திணிக்கும் முயற்சியில் மத்திய பிஜேபி அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை ஈடுபட்டு வருகிறது – இதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் – அந்தச் சதியை முறியடிக்க வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர்  கி. வீரமணி விடுத்துள்ள அறிக்கை  வருமாறு:

சமஸ்கிருதத்தை எப்படியும் திணித்து, இந்தியாவின் ஆட்சிமொழியாகவே – அது செத்த மொழி – மக்களால் பேசப்படாத மொழி என்ற யதார்த்த நிலை இருந்தபோதிலும் எப்படியும் நிறைவேற்றி விட வேண்டும் என்ற இந்துத்துவ அஜெண்டாவை நிலை நிறுத்த, மத்திய அரசின் கல்வித் துறை (மனிதவள மேம்பாட்டுத் துறை மூலம்) தொடர் முயற்சிகளை சளைக்காமல் – ஆனால் தந்திரமாகச் செய்து வருகின்றனர்.

பார்ப்பன கலாச்சார திணிப்பு!

பன் மதங்கள், பல மொழிகள், பல கலாச்சாரங்களைக் கொண்ட நமது இந்திய நாட்டின்,
எம்மதம் ஹிந்துமதம் (இந்துத்துவா).

எம்மொழி சமஸ்கிருதம்

எம்கலாச்சாரம் பார்ப்பனீய (சமஸ்கிருத) கலாச்சாரம்
இவைதான் இருக்க வேண்டும்.

மற்ற சிறுபான்மையோர் எம் மதத்தையும் கடவுளையும் ஏற்றால்தான் அவர்களுக்கு இங்கே இடம் உண்டு. இல்லையேல் அவர்கள் வேறு வழிதான் பார்க்க வேண்டும்’ என்று ஆர்.எஸ்.எஸ். தத்துவக் கர்த்தா கோல்வால்கர் கூறியுள்ளதை, மெல்ல மெல்லக்கூட இல்லாமல், அவசர அவசரமாக மத்திய ஆட்சி தம் வசம் என்ற வாய்ப்பினைப் பயன்படுத்தி செய்துவிட முயற்சிக்கின்றனர். (ஆதாரம் “ஞான கங்கை”, நமது தேசிய பாரம்பரியத் தன்மை நூல்கள் – ஆர்.எஸ்.கோல்வால்கர்)

யார்  இந்த கோபால்சாமி அய்யங்கார்?

இதற்கு இப்போது தேசியப் போர்வை போர்த்தப்பட்டு, முக்காட்டுடன் உலா வருகிறது! ஹிந்திகூட அல்ல நேரிடையாகவே சமஸ்கிருதம் மூன்றாவது மொழியாக, மும்மொழிக் கொள்கைப்படி கல்வி நிலையங்களில் சொல்லிக் கொடுக்கப்பட வேண்டும் என்று கோபால்சாமி அய்யங்கார் தலைமையில், அமைந்த கமிட்டி பரிந்துரை செய்துள்ளதாம்!

இந்த தமிழ்நாட்டுப் (நீடாமங்கலம்) பார்ப்பனர் வடமாநிலத்தில் தலைமை செயலாளர், பிறகு மத்திய உள்துறை செயலாளர், பிறகு ஓய்வுக்குப் பின்னரும் தேர்தல் தலைமைக் கமிஷனர் எல்லாப் பதவிகளையும் பார்த்து விட்டு, இப்போது திருப்பதியில் மத்திய அரசால் நடத்தப் பெறும் ‘ராஷ்டிரிய சமஸ்கிருத வித்தியா பீடத்தின் ‘வேந்தராக’ – இல்லை – ‘அத்தியட்சராக’  (Chancellor) உள்ள நிலையில், அவர் தலைமையிலான கமிட்டிதான் இப்படிப் பரிந்துரை செய்துள்ளது!

தந்திரம் – சூழ்ச்சி – இவையே அவாள் முறை

நண்டைச் சுட்டு நரியைக் காவல் வைத்த கதைபோலத் தான் இது!

இவர் தந்திரமானதொரு பதிலைக் கூறி எதிர்ப்புகளை சமாளிக்க முயலுகிறார்!
எப்போதும் தந்திரம், சூழ்ச்சி தானே அவாள் முறை.

“சமஸ்கிருதத்தைக் கட்டாயம் ஆக்க எங்கள் கமிட்டி பரிந்துரைக்கவில்லை. மூன்றாவது மொழியாகப் படிக்க வைக்க வேண்டும் என்றுதான் கூறியுள்ளோம்.

அரசியல் சட்டத்தின் 8ஆவது அட்டவணை மொழிகளில் எதனை வேண்டுமானாலும், தேர்வு செய்யலாம் என்று கூறியுள்ளார்! (‘ஹிந்து’ 27.2.2016).

மேலெழுந்த வாரியாகப் பார்க்கும் எவருக்கும் இது சரிதானே என்று தோன்றக் கூடும். ஆனால், இதைச் சற்று ஆழமாக, நுணுகி ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

மற்ற மொழிகள் கற்க வாய்ப்பு உண்டா?

மற்ற மொழிகளுக்கு மற்ற மாநிலங்களில் அல்லது மத்திய பள்ளி கல்வி நிறுவனங்களில் சொல்லிக் கொடுக்க ஆசிரியர்கள் உண்டா?

எம் மொழியான செம்மொழி தமிழை இந்தியாவின் எல்லா மாநில – மத்தியக் கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் களை நியமித்துச் சொல்லிக் கொடுக்கும் ஏற்பாடு உண்டா?

உருது பேசும் வட மாநிலங்களில் குறிப்பாக உ.பி. போன்றவைகளில்கூட, ஹிந்துஸ்தான் – உருது – அறவே புறக்கணிக்கப்பட்டு, அந்த இடத்தைத்தானே ஹிந்தி முன்பு பிடித்துக் கொண்டது?

இந்தக் குமுறல் அங்கே இன்னமும் உண்டே! அதுபோல வடகிழக்கு மாநிலங்களிலும் மேற்கு வங்கம், பஞ்சாப் போன்ற மாநிலங்களிலும் ஹிந்திக்கு எதிர்ப்பு என்பது நீறு பூத்த நெருப்பாக அவ்வப்போது எரிகிறதே! இந்த நிலையில், பொறியை அணைக்கத் தீவட்டியைப் பயன்படுத்தி பெட்ரோலை ஊற்றிய கதைபோல “செத்த மொழி” சமஸ்கிருதத்தை மறைமுகமாகத்திணிப்பது ஏன்?

ராஜாஜியே தோற்ற இடம் இது

‘உடம்பெல்லாம் மூளை’ என்று பார்ப்பனர்களால் வர்ணிக்கப்பட்ட திரு. இராஜகோபாலாச்சாரியார்  (ராஜாஜி)அவர்களால்கூட, ஹிந்தியைப் புகுத்த முடியாது, இறுதியில் அவரே பெரியார் வழிக்கு வந்து,  ‘Hindi Never; English Ever’ ’ என்ற முழக்கத்தைக் கொடுத்தாரே!

நாடு மறந்து விட்டதா? பார்ப்பன வல்லாண்மையின் வெளிப்பாடுதான் இந்த சமஸ்கிருத மொழித் திணிப்பு.
அதில் அறிவியல், பல நூல்கள் உள்ளனவாம்!

மற்ற மொழிகளில் இல்லையாம்! என்னே விசித்திர வாதம்!

எச்சரிக்கை! எச்சரிக்கை!!

கல்யாணம், கருமாதி, கோயில் பூஜை புனஸ்காரம் தவிர, புதிதாக தமிழ்நாட்டில் புகுந்துள்ள யாகங்களைத் தவிர,  இம்மொழிக்கும் இதனை வைத்துப் பிழைப்போருக்கும், எங்கேயும் வாய்ப்போ, புழக்கமோ இல்லாதபோது, இப்படி ஒரு புதுக்கரடி புகுவானேன்?

நயவஞ்சகமாகத் திணிக்கும் முயற்சியை முறியடிப்போம்.

எச்சரிக்கை! எச்சரிக்கை!!

கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்

29.2.2016
சென்னை

Leave a Response