தமிழக நலனைக் கணக்கில் கொள்ளாமல் தரமற்ற அணு உலைகளை நிறுவுவதா? – சுப. உதயகுமார் போர்க்கோலம்

கூடங்குளத்தில், கூடுதல் அணு உலைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அணுஉலை எதிர்ப்பாளர் சுப.உதயகுமார் தலைமையில், வருகிற மார்ச் 14–ந்தேதி முதல் சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளது.

இது குறித்து அணுஉலை எதிர்ப்பாளரும், பச்சைத் தமிழகம் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான சுப.உதயகுமார் கூறியதாவது:

கூடங்குளம் பகுதியில் அணுஉலை அமைப்பதற்கு அந்தப் பகுதி மக்கள் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்த போதிலும், மத்திய, மாநில அரசுகள் எதையும் பொருட்படுத்தாமல் அணு உலைகளை நிறுவி உள்ளது.

உலகத்தரம் வாய்ந்த உன்னதமான அணுஉலை என முன்னாள் ஜனாதிபதியும், அறிவியல் விஞ்ஞானியுமான மறைந்த அப்துல்கலாம் சான்றளித்த முதல் அணுஉலை திறக்கப்பட்ட 1½ ஆண்டுகளில் இதுவரை 32 முறை தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மூடப்பட்டுள்ளது.

இதன் மூலம் இந்த அணுஉலைகள் தரமற்றது, அதன் உதிரி பாகங்கள் தரமற்றது என்பது தெளிவாகத் தெரிகிறது. இந்த அணுஉலைகளில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், தமிழகத்தில் மதுரை முதல், கேரள மாநிலம் கோட்டயம் வரையிலான மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும்.

முதல் 2 உலைகளும் சரிவர இயங்காத நிலையில் மேலும் 4 அணுஉலைகளுக்கு திட்டமிடுவது தமிழக மக்களை துளியளவும் மதிக்கவில்லை என்பதாகும். ஆனால், இதைப்பற்றி ஆளும் கட்சியோ, எதிர்க் கட்சியோ எந்தக் கேள்வியும் கேட்காமல் வாய்மூடி மவுனம் காப்பது, தமிழக மக்களை வஞ்சிப்பதாகும்.

எனவே, கூடங்குளத்தில் கூடுதல் அணுஉலைகள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அணுஉலையை எதிர்த்து போராடிய மக்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப்பெற வேண்டும் என்பதை வலியுறுத்தியும், வருகிற 14–ந்தேதி முதல் சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டம் அருகே எனது தலைமையில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Response