ஓபிஎஸ்ஸின் இரகசியத் திட்டம் – எடப்பாடி முறியடித்தார்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை எடப்பாடி அதிமுக புறக்கணித்துள்ளது.இந்நிலையில், அக்கட்சியைச் சேர்ந்த அதிமுக மாநகர மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி துணைச் செயலாளர் செந்தில்முருகன் சுயேச்சையாகக் களமிறங்கியுள்ளார்.

ஈரோடு அக்ரஹார வீதியைச் சேர்ந்தவர் செந்தில் முருகன். இவர், 2023 ஆம் ஆண்டு ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஓபிஎஸ் அணியின் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். ஆனால், சின்னம் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையால் அவர் தனது வேட்பு மனுவைத் திரும்பப் பெற்றார்.

அடுத்து சில தினங்களில் இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.

தொடர்ந்து அதிமுகவில் பயணித்து வரும் செந்தில் முருகன், தற்போது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக தலைமை புறக்கணிப்பதாக எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ள நிலையில், இந்த இடைத்தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட மனு தாக்கல் செய்திருந்தார். அவரது வேட்பு மனுவும் ஏற்கப்பட்டது.

இந்நிலையில், திண்டுக்கல்லில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது,ஈரோடு இடைத்தேர்தலை நாங்கள் புறக்கணிக்கவில்லை. வாக்களிப்போம். ஆனால் யாருக்கு என்பதில் இரகசியம் காக்கப்படும். அதிமுக எம்ஜிஆர் ஆரம்பித்த கட்சி. ஜெயலலிதாவால் பெரும் இயக்கமாக உருவாக்கப்பட்டது. பிரிந்த அனைவரும் ஒன்றுபட்டால் மட்டுமே, வரும் தேர்தலில் வெல்ல முடியும் என்பதை அனைவரும் உணர வேண்டும் என்றார்.

நாங்கள் புறக்கணிக்கவில்லை என்று ஓபிஎஸ் சொன்னது அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இச்சூழலில், இபிஎஸ் ஓர் அறிக்கையை வெளியிட்டார்.

அந்த அறிக்கையில்,கட்சியின் கொள்கை குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும்; கட்சியின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்துகொண்டதாலும்; கட்சியின் கண்ணியத்திற்கு மாக ஏற்படும் வகையில் கட்டுப்பாட்டை மீறி, தலைமை எடுத்த முடிவிற்கு மாறாக, ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்டு, கட்சிக்குக் களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், செந்தில் முருகன் இன்று முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கட்சித் தொண்டர்கள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் வேட்பாளர் செந்தில்முருகனை வைத்து அரசியல் செய்ய ஓபிஎஸ் முயன்றார் என்றும் இந்த அறிவிப்பின் மூலம் அதை எடப்பாடி முறியடித்துவிட்டார் என்றும் அக்கட்சியினர் பேசிக்கொள்கிறார்கள்.

Leave a Response