25 ஆண்டுகளாக சிறைப்பட்டிருக்கும் பேரறிவாளனுக்காக முதல்முறையாக பரோல் கோரி விண்ணப்பிக்கப்பட்டிருக்கிறது. 25 ஆண்டு காலத்தில் பரோல் கேட்டு ஒரு நாளும் விண்ணப்பித்தது கிடையாது. இதனால் அவரை பரோலில் விடவேண்டும் என்கிற கோரிக்கை வலுத்து வருகிறது.

தமிழக முதல்வரின் பிறந்த நாளை முன்னிட்டு, பேரறிவாளனை பரோலில் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என திரைப்பட இயக்குநர்கள் தெரிவித்தனர்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளனை செவ்வாய்க்கிழமை தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் அமீர், எஸ்.பி.ஜனநாதன், கரு.பழனியப்பன் ஆகியோர் சந்தித்துப் பேசினர். அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நீண்டகாலமாக சிறையில் உள்ள பேரறிவாளன் இதுவரையில் பரோலில் செல்ல அனுமதி கேட்டு விண்ணப்பிக்கவில்லை. தற்போது அவரது தந்தையின் உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பதால் பரோலில் செல்ல அனுமதி கோரியுள்ளார்.
தமிழக முதல்வரின் பிறந்த நாளை முன்னிட்டு அவரை பரோலில் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுதொடர்பாக நடிகர் சங்கம் மூலம் முதல்வருக்கு கடிதம் அனுப்பப்படும் என்றனர்.


