விஷ்ணுவிஷாலின் தைரியம் – இயக்குநர் புகழ்ச்சி

மார்ச் 29 ஆம் தேதி வெளியான படம் “ஹாட் ஸ்பாட்”.அப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, விஷ்ணு  விஷால் ஸ்டூடியோஸ் சார்பில் நடிகர் விஷ்ணு விஷால் வழங்க,கேஜேபி டாக்கீஸ், செவன் வாரியர்ஸ் ஆகிய நிறுவனங்கள் தயாரிப்பில்,கே.வி.துரையின் கிரியேடிவ் புரொடக்சன் மேற்பார்வையில் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில்,ஹாட்ஸ்பாட் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது. 

இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முன்னணி நட்சத்திர நடிகர் விஷ்ணு விஷால், இயக்குநர் விக்னேஷ் கார்த்திக்,கேஜேபி டாக்கீஸ் சார்பில் பாலமணிமார்பன்,செவன் வாரியர்ஸ் சுரேஷ் குமார் ஆகியோர் இணைந்து வெளியிட்டனர். 

ஆகஸ்ட் 9 அன்று நடந்த இவ்விழாவினில் “ஹாட் ஸ்பாட் 2 ” படத்தின் பிரத்யேக விளம்பரப்படம் திரையிடப்பட்டது. 

இந்நிகழ்வினில் செவன் வாரியர்ஸ் சார்பில் சுரேஷ் குமார் பேசியதாவது……

மீடியா நண்பர்கள் தந்த ஆதரவு தான் இந்த இரண்டாம் பாகம் உருவாகக் காரணம். விஷ்ணு விஷால் ஸ்டூடியோவிற்கு நன்றி. வி என்றாலே வெற்றி தான் விக்னேஷ் கார்க்திக் உடன் இப்போது விஷ்ணு விஷாலும் எங்களுடன் இணைந்துள்ளார்.உங்கள் ஆதரவைத் தாருங்கள் என்றார்.

கேஜேபி டாக்கீஸ் சார்பில் பாலமணிமார்பன் பேசியதாவது….

ஹாட் ஸ்பாட் வெற்றிக்கு நீங்கள் தான் காரணம்,இப்போது இரண்டாம் பாக அறிவிப்பை விழாவாகக் கொண்டாடுகிறோம்.முதல் பாகத்தை இவ்வளவு விமரிசையாக வெளியிடவில்லை.இப்படத்தின் வெற்றிக்கு நீங்கள் தந்த ஆதரவே காரணம் நீங்கள் தான் இப்படத்திற்கு நல்ல மார்க்கெட்டிங் செய்து தந்தீர்கள்.

ஹாட் ஸ்பாட் படத்தின் வெற்றி விழாவில் நண்பர் சுரேஷ் குமார் இரண்டாம் பாகத்தை அறிவித்து விட்டார். இயக்குநரிடம் பேசும்போது உடனே ஆரம்பிக்கலாம் என்றார். துரை அவர்கள் மிகப்பெரிய ஆதரவாக இருந்தார். அவர் தான் விஷ்ணு விஷால் சார் படத்தை வழங்க ஆவலாக இருப்பதாகச் சொன்னார். அது எங்களுக்கு மிகப்பெரிய ஊக்கமாக இருந்தது. ஹாட் ஸ்பாட் படத்தின் இரண்டாம் பாகத்திற்கும் உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி என்றார். 

இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் பேசியதாவது…..

ஹாட் ஸ்பாட் படத்தின் விமர்சனங்களைத் தாண்டி,நீங்கள் தந்த ஆதரவு தான் வெற்றிக்குக் காரணமாக இருந்தது. ஓடிடியிலும் நன்றாகப் போய்க்கொண்டிருக்கிறது. இப்போது இரண்டாம் பாகத்தை,விஷ்ணு விஷால் சார் வழங்குவது மகிழ்ச்சி. இப்படி ஒரு கதையை வழங்க நிறையத் தைரியம் வேண்டும்.அவர் மிகப்பெரிய மனதுடன் எங்களை ஊக்குவிக்கிறார். இந்த புரோமோ ஷூட்டில் கூட மிக எளிமையாக இருந்தார்.முதல் பாகத்தைப் போலவே, இந்த இரண்டாம் பாகமும் உங்களை மகிழ்விக்கும்.

இப்படத்தில் நடிக்கவுள்ள நடிகர், நடிகைகள், மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியிடுவோம்.உங்கள் ஆதரவைத் தொடர்ந்து வழங்க கேட்டுக்கொள்கிறேன் நன்றி என்றார். 

நடிகர் விஷ்ணு விஷால் பேசியதாவது….

ஹாட் ஸ்பாட் 2 நான் இல்லாமல் சாத்தியமில்லை என்று எனக்கு முன்னாடி பேசியவர்கள் கூறுகிறார்கள்… ஆனால் அப்படியில்லை,நல்ல படம் கண்டிப்பாக எப்படியாவது வந்தே தீரும்.நல்ல படைப்புகள் கண்டிப்பாக வெற்றி பெறும்.ஹாட் ஸ்பாட் டிரெய்லர் பார்த்துவிட்டு எனக்குப் பயங்கர கோபம்,கலைக்கு போன் செய்து திட்டினேன். சினிமா எப்போதும் சமூகத்தில் பாதிப்பைத் தரும் என நம்புபவன் நான்,அதனால் எனக்குக் கோபம் வந்தது. எல்லோரும் போல் நானும் இருந்தேன்,ஆனால் படம் வந்த பிறகு வந்த பாசிடிவ் விமர்சனங்கள் ஆச்சரியமாக இருந்தது. ஹாட் ஸ்பாட் ஓடிடியில் தான் பார்த்தேன் ஒவ்வொரு கதையும் எனக்கு அவ்வளவு பிடித்தது.எனக்கே என் மகனை எப்படி வளர்க்க வேண்டும் எனப் புரிய வைத்தது.அப்போதே விக்னேஷை அழைத்துப் பாராட்டினேன். இரண்டாம் பாகத்தின் கதையை என்னிடம் சொன்னார்.எனக்கு மிகவும் பிடித்தது.எனக்குக் கடைசிக் கதை ரொம்ப பிடித்துள்ளது.பார்க்கும் போது உங்களுக்கும் பிடிக்கும்.இந்த 15 வருட அனுபவத்தில் நல்ல கதைகள் தேர்ந்தெடுக்கும் திறமை வந்துள்ளது.ஒரு தயாரிப்பாளராக மாறியுள்ளேன்.அதன் முதல் படி ஹாட் ஸ்பாட் 2 உட்பட இன்னும் பல நல்ல படங்கள் தயாரித்து வருகிறோம்.விஷ்ணு விஷால் ஸ்டூடியோ மூலம் நல்ல படங்களைத் தயாரித்து வழங்குவேன்.

விஷ்ணு விஷால் தயாரிப்பு நிறுவனம் மற்றும் கேவி.துரையின் டி கம்பெனி நிறுவனம் உடன் இணைந்து பல படங்கள் தயாரித்து வழங்கவுள்ளேன்.விரைவில் அறிவிப்பு வெளியாகும்.உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Response