பாராளுமன்றத் தேர்தலில் தோல்வி குறித்து அதிமுக மாவட்ட நிர்வாகிகளுடன், எடப்பாடி பழனிச்சாமி மற்றும் மூத்த நிர்வாகிகள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
நேற்று முன்தினம் திருப்பூர் மாவட்ட நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.அந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பண்ணன், கோபி காளிதாஸ் மற்றும் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேசி முடித்ததும், மாநில கொள்கைபரப்பு துணைச் செயலாளர் காளிதாஸ் எழுந்து பேச ஆரம்பித்தார். அவர் எடுத்தவுடன், முன்னாள் அமைச்சர்கள், ஆட்சியில் இருந்தபோது நன்றாகச் சம்பாதித்தார்கள். ஆட்சி போனவுடன் செலவு செய்வதை நிறுத்தி விட்டார்கள்.தேர்தலில் அவர்கள் செலவு செய்திருந்தால் பல தொகுதிகளில் வென்றிருக்கலாம். கோபிச்செட்டிபாளையம் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக 25 ஆயிரம் ஓட்டு குறைவாக வாங்கியுள்ளோம். இதற்குக் காரணம், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செலவு செய்யவில்லை. வேலையே செய்யவில்லை. சம்பாதிக்கும்போது இருந்த வேகம், ஆட்சியில் இல்லாதபோது இருப்பதில்லை. தேர்தல் தோல்விக்கு முன்னாள் அமைச்சர்கள் செலவு செய்யாததே காரணம் என்று குற்றம்சாட்டினார்.
சில நாட்களுக்கு முன் தென் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் குறித்து நிர்வாகி ஒருவர் குற்றச்சாட்டு கூறியபோது, மாவட்டச் செயலாளர் பற்றி எப்படி நேரடியாகப் புகார் செய்யலாம். இதைத் தனியாக வந்து கூறுங்கள். இதுபோன்று பொது வெளியில் கூறக்கூடாது என்று அவரை அதட்டி அமர வைத்தார் எடப்பாடி பழனிச்சாமி. ஆனால், இந்த முறை கோபி காளிதாஸ் பேசும்போது எடப்பாடி பழனிச்சாமி அமைதியாக இருந்து விட்டார்.
இதனால் அதிர்ச்சியில் உறைந்திருந்த செங்கோட்டையன், எழுந்து, காளிதாஸ் இதுபோன்று பேசக்கூடாது. இது ஒன்றும் தெருமுனைக் கூட்டம் இல்லை. பேசி கைதட்டல் வாங்குவதற்கு. கட்சியின் உயர்மட்டக் குழு கூட்டம். நான் வேலை செய்யவில்லை என்று எப்படிக் கூறலாம். உண்மையைப் பேச வேண்டும். அடிமட்டத்தில் இருந்து வேலை செய்துதான் இந்த இடத்திற்கு வந்துள்ளோம். அதனால் நாங்கள் வேலை செய்யவில்லை என்று எப்படிக் கூறலாம். பல தடைகளைத் தாண்டித்தான் நாங்கள் வேலை செய்கிறோம். போகிற போக்கில் எல்லாம் பேசக்கூடாது. நீங்கள் பேசுவது மிகப்பெரிய தவறு என்று செங்கோட்டையன் ஆவேசமாக மறுத்து பேசினார்.
பின்னர் சிறிது நேரம் கூட்டத்தில் இருந்த செங்கோட்டையன், கூட்டம் முடிவதற்கு முன்னதாக கோபத்துடன் யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் வேகமாக புறப்பட்டுச் சென்று விட்டார்.
அதன்பின்னர், தனது வீட்டில் நிர்வாகிகளுடன் தனியாக ஆலோசனையும் நடத்தினார். முன்னதாக செங்கோட்டையின் கூட்டத்தில் இருந்து வெளியேறியதால் பரபரப்பு எழுந்தது.
வழக்கமாக இரு தரப்பினர் மோதும் வகையில் பேசினால், எடப்பாடி அவர்களை அமைதிப்படுத்துவார். ஆனால் இந்த முறை அமைதியாக இருந்து விட்டார். அதற்குக் காரணம், திருப்பூர் மக்களவையில் அதிமுக வேட்பாளராக அருணாச்சலம் என்பவர் போட்டியிட்டார். இவர், கொங்கு பேரவையில் இருந்தவர். அவரை முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம், அமைச்சராக இருந்தபோதுதான் கட்சியில் சேர்த்தார். அவர் பஞ்சாயத்து வார்டு கவுன்சிலராக உள்ளார்.
எடப்பாடி பழனிச்சாமியின் மைத்துனர் இராமலிங்கத்தின் பங்காளி என்பதால், அவரது பரிந்துரையின் பேரில், மாவட்டச் செயலாளரான செங்கோட்டையனிடம் ஆலோசனை நடத்தாமல், வேட்பாளராக அருணாச்சலம் அறிவிக்கப்பட்டார். இதனால் கோபமடைந்த செங்கோட்டையன், உடல்நலக்குறைவு என்று கூறி, மருத்துவமனையில் போய்ப் படுத்துக் கொண்டார். வேட்பாளர் 3 நாட்களுக்குப் பிறகுதான் செங்கோட்டையனை சந்திக்க முடிந்தது.
அப்போதே செங்கோட்டையன் சரியாக வேலை செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. எடப்பாடி பழனிச்சாமி, செங்கோட்டையனை ஓரம்கட்ட, முன்னாள் அமைச்சர் கருப்பண்ணன்தான் காரணம் என்று கூறப்படுகிறது. கருப்பண்ணனின் பேச்சைக் கேட்டுத்தான் முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலத்தை எடப்பாடி பழனிச்சாமி ஓரங்கட்டினார். தற்போது செங்கோட்டையனையும் ஓரம்கட்டி வருகிறார் என்று குற்றம்சாட்டுகின்றனர் ஈரோடு மாவட்ட நிர்வாகிகள். இதனால் ஈரோடு அதிமுகவினர் என்ன நடக்குமோ? என்கிற பரபரப்புடன் இருக்கின்றனர்.