ஆட்சி அமைக்குமுன்பே அடுக்கடுக்கான நிபந்தனைகள் – மோடி கலக்கம்

18 ஆவது மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணி 292 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதில் பாஜக 240 இடங்களைக் கைப்பற்றியுள்ளது.ஒன்றியத்தில் ஆட்சி அமைக்க 272 உறுப்பினர்களின் ஆதரவு தேவை.பாஜகவுக்கு தனிபெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால், கூட்டணி பலத்துடன் பாஜக ஆட்சி அமைக்கிறது. இதற்காக, தனது கூட்டணியில் இடம்பெற்றுள்ள தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜனசக்தி, மஜத உள்ளிட்ட கட்சிகளிடம் பாஜக ஆதரவு கேட்டது.

தெலுங்கு தேசம் 16 இடங்களிலும், ஐக்கிய ஜனதா தளம் 12 இடங்களிலும், சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி (எல்ஜேபி) 5 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. மேலும், மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சி 7 இடங்களிலும், அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரசு ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன. இந்தக் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவைத்தான் பாஜக கோரியது.

இந்நிலையில், தேசிய சனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் பிரதமர் மோடியின் இல்லத்தில் நேற்று மாலை நடைபெற்றது. அக்கூட்டத்தில் சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார், மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் அஜித் பவார், லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் சிராக் பாஸ்வான், மஜத தலைவர் எச்.டி. குமாரசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தின்போது, பிரதமர் மோடி தலைமையில் மத்தியில் மீண்டும் பாஜக அரசு அமைய, சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் உள்ளிட்டோர் ஆதரவுக் கடிதத்தை பிரதமர் மோடியிடம் வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. தேசிய சனநாயகக் கூட்டணித் தலைவராக மோடி தேர்வு செய்யப்படுவதாகவும் இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனால், தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபும், ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமாரும் முக்கியமானவர்கள் ஆகிவிட்டார்கள். ஏற்கனவே இவ்விரு தலைவர்கள் அரசியலில் பல ஆண்டுகால அனுபவசாலிகள். எனவே, தங்களுக்குக் கிடைத்த இந்த சந்தர்ப்பத்தை வீணாக்க அவர்கள் விரும்பவில்லை.

பாஜக அரசுக்கு ஆதரவளிக்க இப்போதே பல்வேறு நிபந்தனைகள் விடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. குறிப்பாக, இருகட்சிகளுமே மக்களவை சபாநாயகர் பதவி தங்களுக்கு வேண்டும் என்ற விருப்பத்தை பாஜகவிடம் தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது.

2009 இல் வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் தெலுங்கு தேசத்தின் பாலயோகி மக்களவை சபாநாயகராக இருந்தார். அதே போல, இம்முறையும் சபாநாயகர் பதவி தர வேண்டுமென சந்திரபாபு கூறி உள்ளார். இதற்குக் காரணம், தற்போது மக்களவையில் எந்தக் கட்சிக்குமே பெரும்பான்மை இல்லை. கூட்டணி ஆட்சியே நடைபெற உள்ளது. இத்தகைய சூழலில் சபாநாயகர் பதவி முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்பதால் சபாநாயகர் பதவி கேட்கிறார்கள்.

இதைத் தவிர இரயில்வே உள்ளிட்ட முக்கிய அமைச்சர் பதவிகளை தங்களுக்குத் தர வேண்டுமென இரு கட்சிகளும் கேட்டுள்ளனவாம்.

ஏற்கனவே 3 ஒன்றிய அமைச்சர் பதவி தர நிதிஷ் குமாருக்கு உறுதி அளிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 3 போதாது 4 அமைச்சர் பதவி, ஒரு இணை அமைச்சர் பதவி கேட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், ஆந்திரா, பீகார் இரு மாநிலங்களுமே பல ஆண்டுகளாக சிறப்பு அந்தஸ்து கேட்டு வருகின்றன. எனவே தங்களின் மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டுமென நிதிஷும், சந்திரபாபுவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதுமட்டுமின்றி, ஆந்திராவில் புதிய தலைநகர் அமராவதி அமைக்க கூடுதல் நிதி தர வேண்டுமென சந்திரபாபு கேட்டுள்ளார். நிதிஷ், அவர் தரப்புக்கு மாநிலத்தில் ஏழைகளுக்கான திட்டத்தைச் செயல்படுத்த ஒன்றிய அரசின் பங்களிப்பாக கூடுதல் நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும், முன்கூட்டியே சட்டப்பேரவைத் தேர்தலை நடத்த வேண்டுமென பாஜகவிடம் கேட்டுள்ளார்.

இப்படி அடுக்கடுக்கான நிபந்தனைகளால் ஆட்சி அமைக்கும் முன்பே பாஜக மேலிடம் கதி கலங்கி இருப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Response