தென்மொழி ஏட்டுக்கு தூயதமிழ் ஊடக விருது – தமிழ்நாடு அரசு அறிவிப்பு

பாவலரேறு பெருஞ்சித்திரனார் தொடங்கிய் தென்மொழி தூய தமிழ் ஏட்டுக்கு 2022 ஆம் ஆண்டுக்கான தூயதமிழ் ஊடக விருது அறிவித்திருக்கிறது தமிழ்நாடு அரசு.

இதுகுறித்து பாவலரேறுவின் இளையமகனும் தமிழ்த்தேசியச் செயற்பாட்டாளருமான பொழிலன் எழுதியுள்ள பதிவு…

தன் அறுபத்து நான்காம் அகவையில்’தென்மொழி’ தமிழக அரசின் தூய தமிழ் ஊடக விருதைப் பெற்றிருக்கிறது.
கடந்த 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தூய தமிழ் ஊடக விருது என்கிற நடைமுறையில் மூன்றாவது ஆண்டிற்குரிய விருதாகத் தமிழ்நாடு அரசு தென்மொழி-க்கு அளித்திருக்கிறது
.
முதல் விருதாகவே அளித்திருக்க வேண்டிய நிலை இருப்பினும், கால அரசியல் சூழல் கடந்து (2022) மூன்றாவது ஆண்டுக்குரிய விருதை அளித்துத் தமிழ்நாடு அரசு பெருமைப்பட்டிருக்கிறது.

தென்மொழி ஓர் இதழன்று; இயக்கம் – என்று தன் கண்ணொளியாய் மூச்சுயிர்ப்பாய்ச் சாகும் வரை தொண்டென 1959 முதல் 1995 வரை ஆற்றி வந்த பாவலரேறு ஐயா பெருஞ்சித்திரனார் அவர்களின் பேருழைப்புக்கும் உள்ள உணர்ச்சிக்கும் அணிவிக்கப்பெற்ற புகழ் மாலை.

தென்மொழி ஓர் இதழாக மட்டுமின்றி, போர்ப் பயிற்சியின் பாசறையாக எண்ணற்ற உள்ளங்களை வளர்த்தது.
தன் ‘ஞானசாகரம்’ இதழை ‘அறிவுக்கடல்’ – என மாற்றித் தூய தமிழில் நடத்தி வந்த தனித்தமிழ் இயக்கத்தின் தலைமகன் மறைமலை அடிகளாரின் இதழினும் தென்மொழி மக்கள் தளத்தில் வினையாற்றியிருக்கிறது. அரசுடன் நேருக்கு நேர் நின்று போராடியிருக்கிறது. ஆரியப் பார்ப்பனியத்துடன் எதிர் நின்று பகை வென்றிருக்கிறது.

மொழி ஞாயிறு தேவநேயப்பாவாணர் அவர்களால் முன்மொழியப்பெற்ற தென்மொழி பெயருக்கு, உயிர் கொடுத்து எவரிடமும் கெஞ்சாமல், எவருக்கும் அஞ்சாமல், மொழியையும் நாட்டையும் ஆண்டாக வேண்டும் எனும் இலக்கு நோக்கித் துஞ்சாமல் தென்மொழி வழித் தமிழர்களின் தோள் தட்டி எழுப்பியவர் பாவலரேறு ஐயா பெருஞ்சித்திரனார்.

தொடக்கத்தில் அவருக்குத் தோளோடு தோள் கொடுத்தவர்களாகச் செம்பியன் எனும் செ.பன்னீர்ச்செல்வம்,
ம.இலெ.தங்கப்பா, சாத்தையா எனும் தமிழ்க்குடிமகன் என்போரைச் சொல்லியாக வேண்டும்.

தொடர்ந்து தென்மொழியோடு கலந்து உழைத்த நூற்றுக்கும் மேலான அறிவார்ந்த தமிழ் உள்ளத்தினர் அனைவரையும் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டிய நேரம் இது.

பாவலரேறு ஐயா அவர்களுக்கு வாழ்க்கைத் துணைவியாக இணைந்திருந்த தாமரை அம்மா அவர்கள் தென்மொழிக்கும் தாயாக அதை ஊட்டி வளர்த்தவர்கள்.

தென்மொழியில் தூய தமிழில் எழுதித் தமிழ் நலம் பேணிய பன்னுற்றுக் கணக்கினரும் பட்டியலிடப்பட்டு அறியப்பட வேண்டியவர்கள்.. வரலாற்றில் அறிவிக்கப்பட வேண்டியவர்கள்..

கடந்த 50, 60 ஆண்டுகளில் தென்மொழியின் தாக்கம் இல்லாத தமிழ் உணர்வு சார்ந்த அரசியல் தலைவர்களோ, அறிஞர் பெருமக்களோ, பாவலர்களோ, உரையாளர்களோ, எழுத்தாளர்களோ இல்லை என்று அறுதியிட்டுச் சொல்ல முடியும்.

அனைவருமே தென்மொழியின் நாற்றங்காலில் விளைந்து வளர்ந்து மரமாகி கனிந்திருப்பவர்களே.

தொடக்கத்தில் கடலூர் என்கிற சிற்றூரில் மிதிபொறியில்(டிரெடில்) எழுத்துக்கோர்த்து அச்சிட்டுத் தென்மொழி உரம் கொண்டோர் குடும்பத்தாராக இருந்து இதழை உருவாக்கிப் பரப்பத் தொடங்கிய கால முயற்சிகளிலிருந்தே தென்மொழி வந்து கொண்டிருக்கிறது. அந்த இதழின் பக்கங்களில் பாவலரேறு அவர்களின் அறிவுச் சுரப்பு மட்டுமன்றி மிதிப்பொறியை மிதித்து, எழுத்துகள் கோர்த்து, மடித்து இதழ் உருவாக்கி, கட்டுகள் கட்டி அனுப்பிய உழைப்பு வியர்வைத் துளிகளும் உள்ளடங்கி இருக்கின்றன.அவருடன் இணைந்து தொண்டாற்றிய நூற்றுக்கணக்கினரின் உழைப்பும் தென்மொழியின் பக்கங்களில் நிறைந்திருக்கின்றன.

தென்மொழி என்பது ஓர் ஊழிக் காலம்.. அது பேசாத செய்திகள் இல்லை.. நேர்மை அரசியல் அறிந்து கொள்ளும் கூர்மை வாளாக அது சுழன்றது.. தமிழ் அறிந்து கொள்ள அமிழ்தம் என அறிவு தந்தது.. தமிழ்நாட்டு உரிமைப் போருக்குப் பெருமைக்குரிய படையை அணி சேர்த்தது.. தமிழுக்கு, தமிழ் இனத்துக்கு, தமிழ்நாட்டு உரிமைகளுக்கு அது வழிகாட்டி.

தென்மொழியின் முழு அறிவு அறிந்தோ வினையாற்றல் திறமறிந்தோ தமிழ்நாடு அரசு இந்த விருதை அளித்திருக்கிறது என்று நாம் முழுமையாக எண்ணி விட இயலாது என்றாலும் ஓர் இன உணர்வு, ஆட்சியாளர்களுக்குத் தென்மொழிக்கு விருது தர வேண்டும் என ஏற்பட்டதற்கு நாம் மகிழ்ச்சி தெரிவித்துக் கொள்ள வேண்டும்.

பாவலரேறு ஐயா அவர்களின் மறைவுக்குப் பின்னர் தென்மொழியை முழுமையாய்த் தம் தோள்களில் ஏற்று இன்றும் தொடர்ந்து இடைவிடாது இதழைக் கொண்டு வந்து கொண்டிருக்கிற பெருமை நம் அன்பு அண்ணன் முனைவர் மா பூங்குன்றன் அவர்களுக்கு உண்டு.

திருக்குறள்மணி புலவர் இறைக்குருவனார் அவர்கள் 1995 முதல் 2012 வரை முழுமையாகத் தென்மொழியோடு தோய்ந்து அட்டைப்பாடலும் ஆசிரியவுரையும் எழுதியதோடு ஆசிரியப் பெருந்தகையாக உழைத்துத் தாங்கி உயர்த்தி நிறுத்தியவர்..அக் காலங்களுக்கு முன்பாகவும் தொடக்கக் காலந் தொட்டும் இடையிடையே பாவலரேறு ஐயா அவர்களுக்குத் தோள் கொடுத்துத் தொண்டாற்றியவர்.

தென்மொழி உரவோர்கள் உறவுகள் என அனைவரும் தென்மொழி உழைப்பில் தோய்ந்தவர்களும் ஈடுபட்டவர்களும் ஆவர்.

தென்மொழி என அடைமொழி அணிந்து கொண்டவர்கள் நூற்றுக்கணக்கினர்.அவ்வாறு தென்மொழி அணியில் ஈடுபட்டவர்களுள் ஒருவரான பாவலர் ப.எழில்வாணன் அவர்களுக்கும் இந்த ஆண்டு தமிழ்நாடு அரசு தூய தமிழ்ப் பாவலர் விருதை அறிவித்திருப்பது இன்னும் கூடுதலான மகிழ்வுக்குரியது.

‘தென்மொழி எனக்காகவன்று.. தென்மொழிக்காக நான்’ என்ற பாவலரேறு அவர்களின் கருத்தின் படியே தென்மொழிக்காகத் தமிழ் உணர்வினர்கள் தங்களை, தங்கள் உணர்வுகளை ஆட்படுத்தியிருக்கின்றனர்.
என் மொழியை என் இனத்தை என் நிலத்தை மாற்றானிடம் இட்டு விட்டுச் சோம்பி விட உள்ளம் இசையாது.. சாகும் வரை தொண்டனவே ஆற்றி வருவேன் வாழ்வு தீர்ந்துவிடின் வேற்றுடலம் மாற்றி வருவேன் .. என்று இயங்கத் தொடங்கித் தம் அன்பர்கள் உணர்வுடலங்களுக்குள் எல்லாம் செயலாற்றிக்கொண்டுவரும்; ‘நான் தோற்பேன்.. தென்மொழி வெல்லும்’ என்று வீறுரைத்த பாவலரேறு ஐயா பெருஞ்சித்திரனார் அவர்களின் வழி நடையில் தென்மொழி தமிழ் மொழி இன நாட்டு விழிப்புக்கு வழிகாட்டுகிறது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார் புகழ் ஓங்கட்டும்!
தென்மொழி வாழ்க!
– பொழிலன்

இவ்வாறு அவர் எழுதியுள்ளார்.

தென்மொழிக்குத் தமிழ்நாடு அரசின் தூய தமிழ் ஊடக விருது வழங்கும் விழா (எதிர்வரும் துலை 22 நவம்பர் எட்டாம் நாள் – காலை 10 மணிக்கு) சென்னை – திருவல்லிக்கேணி கலைவாணர் அரங்கில் நடைபெற இருக்கிறது..

Leave a Response