செந்தில்பாலாஜி கைது – மு.க.ஸ்டாலின் பதட்டத்துக்கு என்ன காரணம் தெரியுமா?

தமிழ்நாட்டில் அமைச்சர் செந்தில்பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டது அவருக்கு நெஞ்சுவலி வந்து துடித்தது, அதைத் தொடர்ந்து அவரை மருத்துவமனைக்குச் சென்று பார்த்துவிட்டு வந்த மு.க.ஸ்டாலின், பாஜகவுக்குக் கடும் எச்சரிக்கை விடுத்து காணொலி வெளியிட்டது ஆகியன பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளன.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் காணொலிக்கு எதிர்வினையாக, ஒரு முதலமைச்சர் இப்படிப் பேசலாமா? என்றும் செந்தில்பாலாஜி முப்பதாயிரம் கோடி ஊழல் செய்திருக்கிறார். அந்தப்பணமெல்லாம் திமுக தலைமைக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது அந்தத் தகவலை செந்தில்பாலாஜி அமலாக்கத்துறையிடம் சொல்லிவிடக்கூடாது என்பதற்காகவே அவர் மருத்துவமனைக்கு ஓடோடிச் சென்று பார்த்தார் என்றும் விமர்சனங்கள் வருகின்றன.

அதுமட்டுமின்றி, கனிமொழி, ஆ.இராசா ஆகியோர் கைதின் போது கூட மு.க.ஸ்டாலின் இவ்வளவு பதறவில்லையே? என்றும் கேள்வி எழுப்பப்படுகிறது.

இவை எல்லாம் மேம்போக்கான விமர்சனங்களாகவே இருக்கின்றன.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோபத்துக்கும் பதட்டத்துக்கும் ஆழமான காரணம் இருக்கிறது.

அதை செந்தில்பாலாஜி தொடர்புள்ள இடங்களில் அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபட்டபோது வெளியிட்டுள்ள அவருடைய அறிக்கையில் சுட்டியுள்ளார்.

அதில்,

தலைமைச் செயலகத்தில் அமைச்சரது அறைக்குச் சென்று தேடுதல் நடத்த வேண்டிய தேவை என்ன ஏற்பட்டது என்று தெரியவில்லை. தலைமைச் செயலகத்திலும் ரெய்டு நடத்துவோம் என்று காட்டவோ அல்லது அதனைக் காட்டி மிரட்டவோ விரும்புகிறார்களா எனத் தெரியவில்லை. இவை எல்லாம் விசாரணை அமைப்பானது அரசியல் உள்நோக்கத்துடன் செயல்படுவதையே எடுத்துக் காட்டுகிறது.

இதுபோன்ற அமலாக்கத்துறை தாக்குதல்களைத் தலைமைச் செயலகத்தின் மீதே தொடுப்பது கூட்டாட்சித் தத்துவத்துக்கே களங்கம் ஏற்படுத்துவது ஆகும்.

ஒரு மாநில அரசின் மாண்பு காக்கும் தலைமைச் செயலகத்துக்குள் மத்திய காவல் படையை அழைத்து வந்து அதிகாரிகள் சோதனை நடத்துவதுதான் அரசியல்சட்ட மாண்பைக் காப்பதா?

கடந்த அதிமுக ஆட்சியில், 2016 ஆம் ஆண்டு அன்றைய தலைமைச் செயலாளராக இருந்த இராம்மோகன்ராவ் வீட்டிலும், தலைமைச் செயலகத்திலும் வருமான வரித்துறை ரெய்டு நடத்தியது. “தலைமைச் செயலகம் என்பது மாநில அரசின் மூளை போன்ற முக்கியப் பகுதி. கூட்டுறவு – கூட்டாட்சி பேசிக் கொண்டே அந்த தலைமைச் செயலகத்தில் மத்திய போலீஸ் படையை அனுப்பி, தலைமைச் செயலாளராக இருந்த இராமமோகன்ராவ் அலுவலகத்துக்குள்ளேயே ரெய்டு நடத்துமாறு வருமான வரித்துறையை இயக்கியது ஒன்றிய அரசு. இது மாநில சுயாட்சிக் கொள்கைக்கு எதிரானது” என்று அன்றைய ஆட்சியாளர்கள் கண்டிக்காமலும் கண்டுகொள்ளாமலும் இருந்தபோது, அதனைக் கண்டித்து நான் அறிக்கை வெளியிட்டேன்.

எனவே, யாருக்கு நடந்தது என்பதல்ல முக்கியம். எங்கு நடத்தப்பட்டது என்பதே முக்கியம். மிகத்தவறான முன்னுதாரணங்களைத் தொடர்ந்து பாஜக உருவாக்கி வருகிறது.

இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

இதிலிருந்து, செந்தில்பாலாஜி என்கிற ஒருவர் மீதான அக்கறையைத் தாண்டி தமிழ்நாட்டின் மாண்பின் மீது கைவைத்ததே மு.க.ஸ்டாலினின் கொந்தளிப்புக்கு முக்கியக் காரணம் என்பது புலனாகிறது.

அதிமுக ஆட்சிக்காலத்தில் இப்படி நடந்தபோதே எதிர்த்த அவர், தன்னுடைய ஆட்சியில் இப்படி நடக்கும்போது சும்மா இருப்பாரா? அதுதான் அவருடைய கோபத்துக்குக் காரணம்.

இதுமட்டுமன்று, அமைச்சர் செந்தில்பாலாஜியைப் பதவியிலிருந்து நீக்கவேண்டும் என்று மே 31 ஆம் தேதியே ஆளுநர் கடிதம் எழுதியிருக்கிறார். இப்போதும் அமைச்சரவை மாற்றத்தை ஏற்றுக்கொண்ட ஆளுநர், செந்தில்பாலாஜி அமைச்சராகத் தொடர்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அரசியல்சட்டத்துக்குப் புறம்பாகச் சொல்லியிருக்கிறார்.

இது தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் உரிமையை அப்பட்டமாக மறுதலிக்கும் செயல். இச்செயலை திமுக மீதும் மு.க.ஸ்டாலின் மீதும் செந்தில்பாலாஜி மீதும் உள்ள விருப்பு வெறுப்புகளின் அடிப்படையில் அணுகாமல் தமிழ்நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசை அவமதிக்கும் செயல் என்கிற பார்வையில் அணுகுவதே சரியான பார்வை.

ஆனால், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கோ முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கோ, புதியதமிழகம் தலைவர் கிருட்டிணசாமிக்கோ,தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கோ இந்த அரசியல் புரிதல் கொஞ்சமும் இருக்காது என்பதால் வாய்க்கு வந்ததைப் பேசுகிறார்கள்.

தம் சொந்த நலனுக்காக ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் உரிமையை விட்டுக் கொடுக்கத் தயாராகியிருக்கும் இவர்களை அடையாளம் கண்டு ஒதுக்கிவைப்பதோடு தமிழ்நாட்டின் உரிமையை விட்டுக் கொடுக்கமுடியாது என்று போர்க்குரல் உயர்த்தி நிற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்குப் பக்கபலமாக இருப்பதே ஒவ்வொரு தமிழ்க்குடிமகனின் கடமை என்பதை உணர்வோம்.

– சித்திரன்

Leave a Response