இணையதள சூதாட்டத் தடைச் சட்டம் மாநில அரசு கொண்டுவரலாம் ஆனால்.. – ஒன்றிய அமைச்சர் பதிலால் குழப்பம்

தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட இணையதள ரம்மி தடை மற்றும் இணையதள விளையாட்டுகள் முறைப்படுத்தும் சட்ட முன்வடிவை 139 நாட்களுக்குப் பிறகு மார்ச் 8,2023 அன்று தமிழக அரசுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பிவைத்தார்.

அந்தச் சட்டமுன்வடிவை திருப்பி அனுப்பியது தொடர்பாக ஆா்.என்.ரவி அளித்த விளக்கத்தில், இணையதள சூதாட்டத்துக்கு தடைவிதிக்கும் சட்டம் கொண்டுவர தமிழக சட்டசபைக்கு அதிகாரம் இல்லை என்று குறிப்பிட்டு உள்ளார். சட்டத்தை இயற்ற தமிழக அரசுக்கு முகாந்திரம் இல்லை என்றும் அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில், இன்று, இணையதள சூதாட்டங்களைத் தங்கள் வரம்பிற்குள் கொண்டுவர தேவையான சட்டங்களை மாநில அரசு இயற்ற அதிகாரம் உள்ளது என்று மக்களவையில் ஒன்றிய அரசு விளக்கம் அளித்துள்ளது.

நாடாளுமன்ற நிதிநிலைஅறிக்கை கூட்டத்தொடரில் இணையதள பந்தயம் மற்றும் சூதாட்டம் தொடர்பாக தமிழகத்தைச் சேர்ந்த திமுக உறுப்பினர் பார்த்திபன் கேள்வி எழுப்பினார்.

அதற்கு ஒன்றிய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாகூர், பந்தயம் மற்றும் சூதாட்டம் இரண்டும் இந்திய அரசியலமைப்பின் 7 ஆவது அட்டவணையின் கீழ் வருகிறது.

இணையதளச் சூதாட்டங்களைத் தடுக்கத் தேவையான சட்டங்களை இயற்ற மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. மேலும்,இணையதளச் சூதாட்டங்களை சமாளிக்கவும் அதனை மாநில அரசின் அதிகார வரம்புக்குள் கொண்டுவர தேவையான சட்டங்களை மாநில அரசு இயற்றி உள்ளன எனவும் எழுத்துப்பூர்வ விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இணையதள விளையாட்டுகளில் திறன் அடிப்படை விளையாட்டு, சூதாட்ட அடிப்படை விளையாட்டு என்பதை உச்சநீதிமன்றம் வகைப்படுத்தி இருப்பதாகவும் எழுத்துப்பூர்வ விளக்கத்தில் மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாகூர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியலமைப்புச்சட்டத்தில் இணையதளச் சூதாட்டங்களைத் தடுக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் இருந்தாலும் அச்சூதாட்டங்களை திறன் அடிப்படை விளையாட்டு என்கிற வகையில் உச்சநீதிமன்றம் வகைப்படுத்தியிருப்பதே தமிழ்நாடு ஆளுநரின் அடாவடிக்கு துணையாக இருந்தது. அதையே இன்று ஒன்றிய அமைச்சரும் உறுதிப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Response