கேரளாவில் தமிழ்க்குடும்பங்களுக்கு வழங்கிய நிலத்தை அபகரித்த கம்யூனிஸ்ட் எம்.பி

மூணாறில் தமிழ்க் குடும்பங்களுக்கு கேரள அரசு வழங்கிய 8 ஏக்கர் நிலத்தை அபகரித்ததாக கூறப்பட்ட புகாரில் இடுக்கி கம்யூனிஸ்ட் எம்.பி. ஜோய்ஸ் ஜார்ஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது தேவிகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கேரளாவில் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களுக்காக அரசு இலவசமாக நிலம் வழங்கி வருகிறது. இதன்படி இடுக்கி மாவட்டம் மூணாறிலுள்ள கொட்டாக்காம்பூரில் வசிக்கும் தமிழ்க் குடும்பங்களைச் சேர்ந்த துரைராஜ், இவரது மனைவி, பெருமாள், இவரது மனைவி குமரக்கல் ஆகியோருக்கு அப்பகுதியில் 8 ஏக்கர் நிலத்தை கேரள அரசு ஒதுக்கியது.

ஆனால், இந்த நிலத்தை மூணாறை சேர்ந்த ஜார்ஜ், இவரது மகன்கள் ஜோய்ஸ் ஜார்ஜ், ஜார்ஜி ஜார்ஜ் மற்றும்  சூரஜ் ஆகியோர் பினாமி பெயர்களில் தங்களுக்கு சொந்தமாக்கிக் கொண்டதாக புகார் கூறப்பட்டது.

ஜோய்ஸ் ஜார்ஜ் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இடதுமுன்னணி ஆதரவுடன் போட்டியிட்டு எம்.பி. ஆனவர்.இந்நிலையில் மோசடி புகார் தொடர்பாக கடந்த வருடம் மூணாறில் 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
மேலும், எம்.பி. ஜோய்ஸ் ஜார்ஜ் குடும்பத்தினர் மீது வழக்கு பதிவு செய்யக்கோரி தொடுபுழாவைச் சேர்ந்த பிஜு என்பவர் தேவிகுளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் ஜோய்ஸ் ஜார்ஜ் எம்.பி., அவரது தந்தை ஜார்ஜ் உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இது தவிர இவர்கள் மீது மேலும் ஒருவர் புகார் கொடுக்கப்பட்டதை தொடர்ந்து கூடுதலாக ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இதுவரை நில மோசடி தொடர்பாக மூணாறில் 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Leave a Response