பாஜகவின் செயல் ஆரோக்கியமானதல்ல – கே.பி.முனுசாமி வெளிப்படை

தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் ஒன்றிய அரசின் திட்டப்பணிகளை ஒன்றிய அமைச்சர்கள் ஆய்வு மேற்கொள்வது ஆரேக்கியமானது அல்ல என்று எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி அருகே புதிதாக அமைக்கப்பட்டுள்ள நியாய விலைக்கடையின் திறப்பு விழா நடைபெற்றது.

அதில் பங்கேற்று கடையைத் திறந்து வைத்த கே.பி.முனுசாமி, பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது,

ஒன்றிய அரசும் மாநில அரசும் இணக்கமாகச் செயல்படுவதன் மூலமாகவே இறையாண்மையைக் காக்க முடியும்.

தமிழ்நாட்டில் கடந்த 50 ஆண்டு காலமாக தேசியக் கட்சிகள் அல்லாமல் திராவிடக்கட்சிகளே ஆட்சியில் உள்ள நிலையில் தற்போது மத்தியில் உள்ள பாஜக ஒன்றிய அரசின் திட்டங்களைத் தாங்கள் தான் கொண்டு வந்ததாகக் கூறி தமிழ்நாட்டில் ஆய்வு செய்து வருகின்றனர்.

இது ஆரோக்கியமான செயல் அல்ல, இதனால் ஒன்றிய அரசுக்கும் மாநில அரசுக்கும் மாறுபட்ட சிந்தனைகள் வரும் போது அதிகாரிகளிடையே குழப்பங்கள் ஏற்படும். அதனால் திட்டத்தில் குந்தகம் ஏற்படும்.

மத்தியில் காங்கிரசு ஆட்சி செய்த காலத்தில் இந்த நிலை இல்லை,தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சி மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக தங்களது செயல்பாட்டை மக்களுக்குச் சொல்வதற்காக இந்தத் துருப்புச் சீட்டைப் பயன்படுத்திவருகிறது

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Response