எடப்பாடி வெற்றி பெற்றார் ஓபிஎஸ்ஸும் வென்றார் அதிமுக தோற்றது – தொண்டர்கள் வருத்தம்

அதிமுகவில் ஒற்றைத்தலைமை தொடர்பான சிக்கலில், ஓபிஎஸ்- இபிஎஸ் என இரு தரப்பும் தனித்தனியாகப் பிரிந்துள்ளது. இதனால், இரண்டு தரப்பிலும் கடும் வார்த்தைப் போர்கள் நடந்து வருவதால் இந்த பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளது.

இந்நிலையில்.நேற்று நடந்த அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ள, எடப்பாடி பழனிச்சாமி தனது வீட்டில் இருந்து காலை 7 மணி அளவில் பிரசார வாகனத்தில் வானகரம் நோக்கிப் புறப்பட்டார். பொதுக்குழு அரங்கில் எடப்பாடி தரப்பினர் திரண்டு வந்த நிலையில், ஓபிஎஸ் திடீரென அதிமுக தலைமை அலுவலகத்துக்குச் செல்வதாக அறிவித்தார்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், அதிமுக பொதுக்குழு நடத்த சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தது. பொதுக்குழு நடைபெறும் வானகரம் பகுதி முழுவதும் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் குவிந்திருந்தனர். அதிமுக பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வத்தின் பொருளாளர் பதவி பறிக்கப்பட்டு, கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டு, கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டு அதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதேநேரத்தில், தான் தொடர்ந்து கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருப்பதாகக் கூறி, அதிமுக தலைமை அலுவலகத்துக்கு தனது ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் செல்லத் திட்டமிட்டிருந்தார். இதற்கான ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார். இதில் அதிமுக தலைமை அலுவலகத்தைக் கைப்பற்ற முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது.

இந்தத் தகவல் எடப்பாடி பழனிச்சாமிக்குத் தெரிந்ததால், தனது ஆதரவு மாவட்டச் செயலாளர்களை அனுப்பி வைத்தார். அதன்படி மாவட்டச் செயலாளர்கள் ஆதிராஜாராம், தி.நகர் சத்யா, வேளச்சேரி அசோக், கந்தன், இளைஞர் அணி மாநில இணைச் செயலாளர் டாக்டர் சுனில் ஆகியோரது தலைமையில் தொண்டர்கள் குவிக்கப்பட்டிருந்தனர்.

அதிமுக பொதுக்குழு தொடங்கிய நேரத்தில், ஓ.பன்னீர்செல்வம் தனது வீட்டில் இருந்து ஆதரவாளர்களுடன் கட்சி அலுவலகத்துக்குப் புறப்பட்டுச் சென்றார். அவருடன் நூற்றுக்கணக்கான தொண்டர்களும் புறப்பட்டனர். இராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலை சென்றடைந்ததும், ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களை, எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்கள் தடுத்தனர். தொடர்ந்து கல்வீசித் தாக்கினர். இதனால் பதிலுக்கு ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களும் கல் வீச்சில் ஈடுபட்டனர்.

இரு தரப்பிலும் தொடர்ந்து கல் வீச்சு சம்பவங்கள் நடந்தன. இதில் பலருக்கு மண்டை உடைந்து இரத்தம் கொட்டியது. அவ்வை சண்முகம் சாலை அருகே எடப்பாடி தரப்பினர் ஓபிஎஸ் வாகனம் மீது கல்வீசி தாக்கினர். இதனால் இருதரப்புக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் ஓபிஎஸ் ஆதரவாளர் ஒருவரின் மண்டை உடைக்கப்பட்டது. இதில் அந்த ஓபிஎஸ் ஆதரவாளர் ஓபிஎஸ் வேனில் சாய்ந்து விழுந்தார். அந்த இரத்தக் கரை ஓபிஎஸ் வேனில் அப்படியே படிந்தது. இதனால் சில நிமிடம் ஓபிஎஸ் பயணம் தடைபட்டது.

அதன்பின் அவரது வாகனத்துக்கு காவல்துறையினர் பாதுகாப்பு அளித்தனர். இதையடுத்து, ஓபிஎஸ் வாகனம் அதிமுக அலுவலகம் நோக்கிச் சென்றது. இன்னொரு பக்கம் அதிமுக அலுவலக வாசலில் எடப்பாடி – ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சாலையைப் பங்கு பிரித்துக் கொண்டு மாறி மாறி பயங்கர ஆயுதங்களுடன் மோதிக் கொண்டனர். இரு தரப்பினரும் மாறி மாறி கல்வீச்சில் ஈடுபட்டதால், ஓபிஎஸ் ஆதரவாளர் எம்.எம்.பாபு உள்பட 3 பேரின் மண்டை உடைக்கப்பட்டு இரத்தக் காயங்களுடன் கிடந்தனர். ஒருவருக்கு கத்திக் குத்தும் விழுந்தது. அவர்களை மீட்ட காவல்துறையினர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்தக் கலவரத்தில் அங்கு நிறுத்தப்பட்டிருந்த இரண்டு பேருந்துகள், கார் கண்ணாடிகள் அடித்து உடைக்கப்பட்டது. மேலும் ஒரு காரை அடித்து நொறுக்கினர். அலுவலகத்துக்கு முன் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் நாற்காலிகளைப் போட்டு அமர்ந்திருந்தனர். அவர்கள் ஓடும்போது கல்வீச்சில் இருந்து தப்பிக்க தலையில் நாற்காலியை வைத்தபடி ஓடினர்.

அதிமுக அலுவலகம் உள்ள பகுதி கலவர பூமியாக காணப்பட்டது. இதையடுத்து, முன்னேறிச் சென்ற ஓபிஎஸ், அதிமுக தலைமை அலுவலகம் வந்தடைந்தார். அவர் வந்த பின்பு காட்சிகள் அனைத்தும் தலைகீழாக மாறின. அதிமுக தலைமை அலுவலகத்தை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கைப்பற்றினர்.கதவுகள் உடைக்கப்பட்டன.

அங்கிருந்த எடப்பாடி பழனிச்சாமி படங்கள் கிழித்து எறியப்பட்டன. அவற்றைத் தீயிட்டுக் கொளுத்தினர். அவரது ஆதரவாளர்களும் விரட்டியடிக்கப்பட்டனர். அதிமுகவினருடன் ரவுடி சி.டி.மணியின் ஆதரவு ரவுடிகளும் கூடியிருந்தனர். காவல்துறையினர் அவர்களை விரட்டி அடித்தனர். அதில் டாக்டர் சுனில், லோகநாதன் ஆகியோருக்கும் தலையில் காயம் ஏற்பட்டது. அதேநேரத்தில் கட்சி அலுவலகம் முன்பு ஓபிஎஸ்சுக்கு ஆதரவாக கோஷங்களை அவரது ஆதரவாளர்கள் எழுப்பியபடியே இருந்தனர்.

ஆதரவாளர்கள் பூட்டுகளை உடைத்த நிலையில் ஓபிஎஸ் அலுவலகத்திற்குள் சென்றார். உள்ளே சென்ற ஓபிஎஸ் அலுவலகம் மேலே ஏறி பால்கனியில் நின்று ஜெயலலிதா போல தொண்டர்களைப் பார்த்து கையை அசைத்தார். பின்னர் அதிமுக தலைமை அலுவலகத்தில் தனது ஆதரவாளர்களுடன் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனையில் ஈடுபட்டார்.

அவருடன் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், ஜெ.சி.டி.பிரபாகர், மனோஜ்பாண்டியன், பெங்களூர் புகழேந்தி, சுப்புரத்தினம், கோவை செல்வராஜ் உள்ளிட்டோர் வந்திருந்தனர். அந்த நேரத்தில் தலைமை அலுவலகத்தில் இருந்த சாவிகள் மற்றும் முக்கிய ஆவணங்கள் ஓபிஎஸ் வாகனத்தில் ஏற்றப்பட்டன. ஓபிஎஸ் தரப்பு அதிமுக தலைமை அலுவலகத்தைக் கைப்பற்றிய நிலையில், கட்சி தலைமை அலுவலகத்தில் உள்ள இராயப்பேட்டை பகுதியே போர்க்களமாக காட்சி அளித்தது.

பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதால் பாதுகாப்பு கருதி இணை கமிஷனர் பிரபாகர், துணை கமிஷனர் மிட்டல், பகலவன் ஆகியோரது தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர். தொடர்ந்து ஓபிஎஸ் அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து வருவதால் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இராயப்பேட்டையில் குவிந்தனர். இதற்கிடையே கலவரத்தில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து கைது செய்து அழைத்துச் சென்றனர்.

இந்நிலையில், இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் அதிமுக தலைமை அலுவலகம் அமைந்துள்ள இராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலைக்கு 144 தடை உத்தரவு போடப்பட்டது.

இருந்தாலும், எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் இராயப்பேட்டை நெடுஞ்சாலை, அவ்வை சண்முகம் சாலை சந்திப்பு அருகே குவிந்ததால் தொடர்ந்து பதட்டம் ஏற்பட்டது. அவர்களை காவல்துறையினர் பேரிகார்டு அமைத்து தடுத்தனர். அதபோன்று மறுபுறம் இந்தியன் வங்கி அருகேயும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் திரண்டதால் அவர்களையு, தடுத்து நிறுத்தினர்.

அதேநேரத்தில் எடப்பாடி பழனிச்சாமியும், பொதுக்குழுவில் இருந்து நேராக கட்சியின் தலைமை அலுவலகம் வருவதாக அறிவித்தார். இதனால் அங்கு கூடுதல் பதட்டம் ஏற்பட்டது. இதனால், சட்டம் ஒழுங்கு பிரச்னையை கட்டுக்குள் கொண்டு வருவது குறித்தும், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்தும் இராயப்பேட்டை காவல் நிலையத்தில் காவல் இணை ஆணையர் பிரபாகரன், வருவாய்த்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் அதிமுக அலுவலகத்துக்கு சீல் வைப்பது என முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, மயிலாப்பூர் துணை கமிஷனர் திஷா மிட்டல் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் ஓ.பன்னீர்செல்வத்தைச் சந்தித்து சீல் வைக்கப்போவதாகத் தெரிவித்தனர். அவரை அங்கிருந்து வெளியேறும்படி கேட்டுக் கொண்டனர். அவர் அறையில் இருந்து வெளியில் வந்ததும், முதலில் பொதுச் செயலாளர் அறை மற்றும், கூட்ட அரங்கிற்கு சீல் வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, அதிமுக தலைமை அலுவலகத்தின் நுழைவு வாயிலுக்கு சீல் வைக்கப்பட்டது. முன்னதாக ஓ.பன்னீர்செல்வத்துடன் வந்தவர்கள், கடப்பாறையால் உடைத்ததால், சீல் வைக்க தாமதமானது. பின்னர் அதிகாரிகள் சீல் வைத்தனர்.

அதிகாரிகள் சீல் வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, கட்சி அலுவலகத்துக்குள் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் மறியலில் ஈடுபட்டார். பின்னர் அவர் காரில் புறப்பட்டுச் சென்றார்.

அதன்பின்னர், அதிமுக அலுவலகத்தில் இருந்து அதிமுகவினர் முற்றிலும் வெளியேற்றப்பட்டு, கேட்டுக்கும் சீல் வைக்கப்பட்டது. அந்த தெருவுக்குள், அதிமுகவினர் யாரும் செல்ல அனுமதிக்கவில்லை. அந்த தெருவில் வசிப்பவர்களை மட்டுமே அனுமதி அளித்தனர். இதனால் கட்சி அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் தொடர்ந்து பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டுள்ளது. சுமார் 4 மணி நேரம் கட்சி அலுவலகம் தொடர்பாக மோதல் நடந்ததால், அந்தப் பகுதியே போர்க்களமாக காட்சி அளித்தது.

அதேநேரம் பொதுக்குழுவில், இடைக்காலப் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார்.ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களைக் கட்சியில் இருந்து முற்றிலுமாக நீக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.அதனால் அதிமுக தலைமைப் போட்டியில் எடப்பாடி பழனிச்சாமி வெற்றி பெற்றதாக அவரது ஆதரவாளர்கள் சொல்கின்றனர்.

தலைமைக்கழக அலுவலகத்தைக் கைப்பற்றி அங்கிருந்த ஆவணங்களை எடுத்துச் சென்றதன் மூலம் ஓபிஎஸ் வெற்றி பெற்றதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

பல நூறு கோடிகள் செலவு செய்து எடப்பாடி வெற்றி பெற்றார். சில நூறு தொண்டர்களுடன் வந்து தலைமை அலுவலகத்தைக் கைப்பற்றி ஓபிஎஸ்ஸும் வெற்றி பெற்றார். ஆனால், எம்.ஜி.ஆர் உருவாக்கிய அதிமுக தோற்றுவிட்டது என தொண்டர்கள் வருத்தப்படுகின்றனர்.

Leave a Response