ஒலிம்பிக்கில் பங்கேற்கும் 13 தமிழர்கள் – வாகை சூட வாழ்த்தும் சீமான்

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 8 வரை ஒலிம்பிக் போட்டிகள் நடக்கவிருக்கின்றன.அதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 13 பேர் பல்வேறு போட்டிகளில் பங்கேற்கவிருக்கிறார்கள்.

அவர்களுக்கு வாழ்த்துச் சொல்லி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

ஜப்பான் நாட்டின் தலைநகரமான டோக்கியோவில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கெடுக்க, துப்பாக்கி சுடுதல் பிரிவில் இளவேனில் வாலறிவன், பாய்மரப் படகுப்போட்டி பிரிவில் நேத்ரா குமணன், வருண் தாக்கர், கணபதி, மேடை வரிப்பந்து பிரிவில் சத்யன், சரத் கமல், வாள் சண்டை பிரிவில் பவானி தேவி, தடகளப்பிரிவில் ரேவதி, தனலட்சுமி, சுபா வெங்கடேசன், ஆரோக்கிய ராஜீவ், நாகநாதன் பாண்டி, மாற்றுத்திறனாளிகளுக்கான உயரம் தாண்டுதல் பிரிவில் தம்பி மாரியப்பன் தங்கவேலு ஆகிய தமிழ்நாட்டைச் சேர்ந்த பதிமூன்று தம்பி, தங்கைகள் தேர்ந்தேடுக்கப்பட்டிருக்கும் செய்தியறிந்து மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தேன்.

தங்களது சீரிய முயற்சியாலும், அளப்பெரும் திறமையாலும், கடின உழைப்பாலும் படிப்படியாக முன்னேறி விளையாட்டுத்துறையில் சாதனைகள் பல புரிந்து இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் அளவுக்கு உயர்ந்திருக்கும் தம்பி, தங்கைகள் அனைவரும் ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கங்களை வாரிக்குவித்து, தமிழ் மண்ணுக்குப் பேரும், புகழும் சேர்க்க வேண்டுமெனும் எனது விருப்பத்தையும், வெற்றிவாகை சூடி வர எனது உளம் நிறைந்த வாழ்த்துகளையும் தெரிவிக்கின்றேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response