கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்தினால் நடவடிக்கை – அமைச்சர் பொன்முடி எச்சரிக்கை

இன்று செய்தியாளர்களைச் சந்தித்த உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அளித்த பேட்டியில்….

அரசு உதவி பெறும் கல்லூரி மற்றும் தனியார் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறித்து முதல்வருடன் நானும், உயர் கல்வித்துறைச் செயலர்களும் கலந்து பேசினோம். கல்லூரி மாணவர்கள் சேர்க்கை என்பது ஜூலை 31 ஆம் தேதிக்குப் பின்தான் நடத்தப்பட வேண்டும். ஏனென்றால் சிபிஎஸ்இ தேர்வு மதிப்பெண்கள் ஜூலை 31ஆம் தேதிதான் வெளியாகிறது.

நம்முடைய கல்லூரிகளில் அது தனியாராக இருந்தாலும், அரசாக இருந்தாலும் சிபிஎஸ்இயில் தேர்வு பெற்று வருகின்ற மாணவர்களின் மதிப்பெண்களும் கணக்கெடுத்துக் கொள்ளப்பட வேண்டிய கட்டாயம் உள்ளது. அதேபோன்று மாநிலக் கல்வி வழியில் பயின்ற மாணவர்கள் அவர்களுக்கான பனிரெண்டாம்வகுப்பு மதிப்பெண் எப்படி கணக்கிடப்படும் என்று முதல்வர் நேற்று முன்தினம் வெளியிட்டார்.

அந்த அறிவிப்பின் அடிப்படையில் பனிரெண்டாம் வகுப்பு மதிப்பெண்களைக் கணக்கிடும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. விரைவில் அது முடிவடையும். ஆகவே பனிரெண்டாம் வகுப்பு தமிழக மாநில வழிக்கல்வியில் படித்த மாணவர்கள், சிபிஎஸ்இ வழியில் படித்த மாணவர்கள் மதிப்பெண் அனைத்தும் ஜூலை 31 ஆம் தேதிக்குள் இறுதிப்படுத்தப்பட்டுவிடும். அதற்குப் பிறகுதான் தனியார், அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

சில தனியார் கல்லூரிகளில் சேர்க்கை நடக்கிறது என்று தகவல் வருகிறது. அதையெல்லாம் செய்யக் கூடாது. சிபிஎஸ்இ மதிப்பெண், மாநிலக் கல்வி வழியில் பயின்ற மாணவர்களின் மதிப்பெண் வந்தபின்தான், ஆகஸ்டு 1 ஆம் தேதிக்குப் பின்தான் கல்லூரிகளில் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என்று முதல்வர் எங்களுக்கு உத்தரவாகத் தெரிவித்துள்ளார். ஆகவே ஆகஸ்ட் 1ஆம் தேதியிலிருந்துதான் சேர்க்கை தொடங்கும். அதையும் மீறி சேர்க்கை நடந்தால் அது தவறு. அரசு அதை அனுமதிக்காது, நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆனால், 9 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பாலிடெக்னிக்கில் சேர்க்கப்படும் மாணவர்கள் 2 நாட்களுக்கு முன்னதாக பாலிடெக்னிக் மாணவர்கள் சேரலாம் என்று அறிவிக்கப்பட்டதின் அடிப்படையில் சேர்க்கப்படுகிறார்கள். இதுதான் கல்லூரி சேர்க்கைக்கான முடிவு.

பொறியியல் கல்லூரிகளில் வழக்கமாக இருக்கும் அதே முறைதான் பின்பற்றப்படும், சிபிஎஸ்இ, மாநிலக் கல்வி மதிப்பெண்கள் அனைத்தும் ஒரே மதிப்பெண்தான். அதில் மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கைக்கு மாணவர்கள் அனுமதிக்கப்படுவார்கள். முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு ஏற்கெனவே உள்ள நடைமுறைதான் உள்ளது.

கூடுதல் மதிப்பெண் பெறத் தேர்வு எழுதுபவர்களுக்காக சேர்க்கை நிறுத்தப்படாது. அதற்கு வாய்ப்பில்லை. உயிர்தான் முக்கியம், மற்றதெல்லாம் பிறகுதான் என்பதால் காலதாமதம் ஆகிறது. மூன்றாம் அலை வருவதாகச் சொல்கிறார்கள். அதெல்லாம் வராமல் இருக்க வேண்டும் என்று எல்லோரும் ஆசைப்படுகிறோம். வழக்கமாக ஜூலையில் கல்லூரி ஆரம்பிக்கும், இம்முறை ஆகஸ்ட் மாதத்தில் ஆரம்பிக்கும் அவ்வளவுதான்.

இவ்வாறு அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

Leave a Response