பேரறிவாளன் விடுதலை தொடர்பாக எழுதப்பட்டுள்ள முக்கிய கடிதம்

இராசீவ் காந்தி வழக்கில் நீண்டநாள் சிறையிலுள்ள அ.ஞா. பேரறிவாளன் முன்விடுதலைக்கு தமிழ்நாடு ஆளுநரை நேரில் சந்தித்து தமிழ்நாடு முதலமைச்சர் வலியுறுத்த வேண்டுமென தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து, தமிழ்நாடு முதலமைச்சருக்கு அவர் எழுதியுள்ள கடிதம் வருமாறு……

அரசமைப்புச் சட்ட உறுப்பு 161-இன் கீழ் கருணை அடிப்படையில் தன்னை முன்விடுதலை செய்யக் கோரி ஆளுநருக்கு 31.12.2015 அன்று தான் அளித்த மனுவின் மீது தமிழ்நாடு ஆளுநர் எந்த முடிவும் எடுக்காததை சுட்டிக்காட்டி, உச்ச நீதிமன்றத்தில் அ.ஞா. பேரறிவாளன் தொடுத்த வழக்கில் கடந்த 03.11.2020 அன்று உச்ச நீதிமன்றம் ஆளுநரை இடித்துரைத்து வழங்கியிருக்கும் அறிவுறுத்தல் மிகமுக்கியமானது.

இராசீவ்காந்தி கொலையில் பன்னாட்டு சதிகள் குறித்து விசாரித்து வரும் பல்நோக்கு கண்காணிப்பு விசாரணை முகமையின் (MDMA) இறுதி அறிக்கை கிடைத்த பிறகுதான், பேரறிவாளன் முன்விடுதலை மீது முடிவெடுக்கப்படும் என ஆளுநர் அலுவலகம் தெரிவித்திருப்பது பொருத்தமற்றது – தொடர்பில்லாதது என்று நீதிபதிகள் நாகேசுவரராவ், ஏமந்தகுப்தா, அஜய் ரஸ்தோகி ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு தெளிவுபடக் கூறிவிட்டது.

பேரறிவாளன் வழக்கில் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ள இந்தக் கருத்து, இராசீவ்காந்தி கொலை வழக்கில் நீண்டநாள் சிறையில் வாடும் பிறருக்கும் பொருந்தக் கூடியதே!

எனவே, பேரறிவாளன் முன்விடுதலை குறித்து, தமிழ்நாடு அரசு ஆளுநருக்கு அழுத்தம் கொடுத்தால், தங்கள் தலைமையிலான அமைச்சரவையின் 09.09.2018 பரிந்துரைப்படியான ஏழு தமிழர் விடுதலைக்கு வழி ஏற்படுத்தும்.
எனவே, தமிழ்நாடு முதலமைச்சராகிய தாங்கள் ஆளுநரை சந்தித்து, முதல் கட்டமாக பேரறிவாளன் முன்விடுதலையை வலியுறுத்த வேண்டுமென்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

இதற்கான சட்டவழிப்பட்ட நீதியான காரணங்களை சுருக்கமாகத் தங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்.

கால் நூற்றாண்டையும் கடந்து நீண்டநாள் சிறையாளியாக வாடிவரும் அ.ஞா. பேரறிவாளன் அரசமைப்புச் சட்ட உறுப்பு 161-இன்படி தனக்கு முன்விடுதலை வழங்குமாறு 31.12.2015 நாளிட்ட தனது மனுவின் மூலம் தமிழ்நாடு ஆளுநரை வேண்டிக் கொண்டார்.

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர் விடுதலைக்கு அன்றைய முதலமைச்சர் செயலலிதா அவர்கள், குற்றவியல் சட்ட விதி 432இன் கீழ் முடிவு செய்தபோது, இந்திய அரசு அதில் குறுக்கிட்டு நீண்ட நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர வேண்டிய நிலை ஏற்பட்டது. அதன் இறுதியில் 02.12.2015 அன்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தத்து தலைமையிலான அரசமைப்பு ஆயம் தீர்ப்பளித்தது. நீதிபதி கலிபுல்லா பெரும்பான்மைத் தீர்ப்பை முன்வைத்தார். முன்விடுதலை தொடர்பான மாநில அரசின் அதிகாரங்கள் பலவற்றை அத்தீர்ப்பு பறிப்பதாக இருந்தாலும், அரசமைப்பு உறுப்பு 161இன்படி உள்ள மாநில அரசின் தண்டனைக் குறைப்பு அதிகாரம் கட்டற்றது, எந்தக் குறுக்கீட்டுக்கும் அப்பாற்பட்டது, எந்த நேரத்திலும் செயல்படக் கூடியது என்று உறுதிபடக் கூறியது.

இந்தப் பின்னணியில், உறுப்பு 161இன்படியான தனது மனுவின் மீது ஆளுநர் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், உச்ச நீதிமன்றத்தை பேரறிவாளன் அணுகினார். அதன்மீது உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி இரஞ்சன் கோகாய் அமர்வு அரசமைப்புச் சட்ட உறுப்பு 161இன்படியான ஆளுநரின் – அதாவது மாநில அரசின் கட்டற்ற அதிகாரத்தை எடுத்துக்கூறி பேரறிவாளன் முன்விடுதலை மனுவின் மீது விரைந்து முடிவெடுக்குமாறு 06.09.2018 அன்று ஆணையிட்டது. இதனைத் தொடர்ந்து, தங்கள் தலைமையிலான தமிழ்நாடு அமைச்சரவை பேரறிவாளன் மட்டுமின்றி, நளினி, முருகன், சாந்தன், செயக்குமார், இராபர்ட் பயஸ், இரவிச்சந்திரன் ஆகியோரையும் விடுதலை செய்ய வேண்டுமென்று 09.09.2018 அன்று வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவெடுத்து ஆளுநருக்கு பரிந்துரை அனுப்பினீர்கள்.

இரண்டாண்டுகள் கடந்த பின்னும் ஆளுநர் அதன்மீது எந்த முடிவும் எடுக்காத நிலையில், பேரறிவாளன் உச்ச நீதிமன்றத்தை அணுகினார். அதன்மீது 21.01.2020 அன்று உச்ச நீதிமன்றம் தமிழ்நாடு அரசுக்கு அறிவுறுத்தல் வழங்கியது. அதில், “அரசமைப்புச் சட்ட உறுப்பு 161இன் கீழ் பேரறிவாளன் அளித்த மனுவின் மீது 06.09.2018 நாளிட்ட உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின் அடிப்படையில் ஏதேனும் முடிவெடுக்கப்பட்டிருக்கிறதா எனத் தெரிவிக்க வேண்டும்” என ஆணையிட்டது.

அதன்மீது அடுத்த விசாரணை நாளில் 11.02.2020 அன்று தனது பதிலுரையை தமிழ்நாடு அரசு தாக்கல் செய்தது. 09.09.2018 அன்று தமிழ்நாடு அமைச்சரவை அளித்த பரிந்துரையையும் அதன் மீது ஆளுநருக்கு அனுப்பப்பட்ட நினைவூட்டல் கடிதங்களையும் எடுத்துக்காட்டிய தமிழ்நாடு அரசு வழக்குரைஞர், இதற்கு மேல் ஆளுநரை இந்தக் கால வரம்பிற்குள் கையெழுத்திடுமாறு மாநில அரசால் வற்புறுத்த முடியாது என்று விளக்கமளித்தார்.

இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் இதனை பேரறிவாளன் வழக்கறிஞர்கள் எடுத்துக் கூறினர். உச்ச நீதிமன்றம் வலியுறுத்திக் கேட்டதற்குப் பிறகு, “இராசீவ்காந்தி கொலை வழக்கில் பன்னாட்டுச் சதிகள் குறித்து விசாரித்துவரும் பல்நோக்கு விசாரணை முகமையின் இறுதி அறிக்கை வந்த பிறகுதான் இதன் மீது ஆளுநர் முடிவெடுப்பார்” என்று தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்துதான் 03.11.2020 அன்று உச்ச நீதிமன்றம் சட்டநிலையைத் தெளிவுபடுத்திக் கூறியது. அத்தோடு, பொருத்தமான காரணமில்லாமல் முன்விடுதலையின் மீது ஆளுநர் காலதாமதம் ஏற்படுத்துவது குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தியது.

பேரறிவாளன் முன்விடுதலை குறித்து, சட்ட நிலைமைகளையும் நீதிமன்றத் தீர்ப்புகளையும் எடுத்துக்காட்டி, தமிழ்நாடு அரசு ஆளுநரை வலியுறுத்தலாம் என்றும் அறிவுறுத்தியது.

முடிவெடுப்பதில் தேவையற்ற காலதாமதம் ஏற்பட்டால், அரசமைப்புச் சட்ட உறுப்பு 142 வழங்கும் சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி, பேரறிவாளன் விடுதலைக்கு ஆணையிட முடியும் என்றாலும், இந்தக் கட்டத்தில் அவ்வாறு தலையிட விரும்பவில்லை என்றும் தனது மனநிலையை தெளிவுபடுத்தியது.

இதற்கு ஆதரவாக தமிழ்நாடு உள்துறை செயலாளர் (சிறைத்துறை) – எதிர் – நிலோபர் நிஷா (CRIMINAL APPEAL NO(S). 144 OF 2020, (@ SPECIAL LEAVE PETITION (CRL) NO(S). 626 OF 2020), (@ SPECIAL LEAVE PETITION (CRL) D. NO. 18046 OF 2019) வழக்கில் 23.01.2020 அன்று அளிக்கப்பட்ட தீர்ப்பையும், சாபே எதிர் உத்திரப்பிரதேச மாநில அரசு (Special Leave Petition (CRL.) NO. 7369 of 2019) வழக்கில் 30.09.2020 அன்று உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையும் பேரறிவாளன் தரப்பு எடுத்துக்காட்டியதை ஏற்றுக் கொண்டது.

முன்விடுதலை குறித்து கடைசியாக வந்து தீர்ப்பான சதீஷ் என்ற சாபே – எதிர் – உத்திரப்பிரதேச மாநில அரசு வழக்கில் முன்விடுதலைக்கு உச்ச நீதிமன்றம் கூறிய காரணங்கள் இங்கு கவனத்தில் எடுத்துக் கொள்ளத்தக்கவை.

இருபதாண்டுகளையும் கடந்த நீண்டகால சிறைவாசம் என்பதோடு, முதன் முறையாக குற்றம் செய்தவர் என்பதும், சிறையில் இருக்கும்போது தனது கல்வித் தகுதியை உயர்த்திக் கொண்டவர் என்பதும் முன்விடுதலைக்கு முக்கியத் தகுதிகளாகக் கொள்ளப்பட்டன.

பேரறிவாளனுக்கு உச்ச நீதிமன்றம் கூறிய முன்விடுதலைக்கான தகுதிகளையும் தேவைகளையும் தாண்டி, அதிகமாகவே உள்ளன.

· அ.ஞா. பேரறிவாளன் முதல் முறையாக குற்றம் செய்தவராக அறியப்பட்டிருக்கிறார்.

· அவரது முப்பதாண்டு கால சிறை வாழ்வில் தமிழ்நாட்டின் பல்வேறு சிறைகளில் இருந்தாலும் எல்லா சிறைகளிலும் சிறை அதிகாரிகளின் நன்மதிப்பைப் பெற்று, நன்னடத்தைச் சான்று பெற்றவராகத் திகழ்கிறார்.

· தனது 19 வயதில் சிறைக்குச் சென்றவர் அதன் பிறகு தனது சிறை வாழ்க்கையின் ஊடாக பல துறைகளில் ஏறத்தாழ 12க்கும் மேற்பட்ட பட்டங்களையும், பட்டயங்களையும் சான்றிதழ் படிப்புகளையும் முடித்திருக்கிறார்.

· சக சிறையாளிகளுக்கு உதவி செய்தும் கல்வி புகட்டியும் அவர்களை நன்னெறிப் படுத்தியும், எடுத்துக்காட்டான சிறையாளியாகத் திகழ்ந்திருக்கிறார்.

· இராசீவ்காந்தி கொலை வழக்கில் இவர் மரண தண்டனை பெற்றதற்கு ஒரே அடிப்படை – தடா சட்டப் பிரிவு 15இன் கீழ் அவர் அளித்த ஒப்புதல் வாக்குமூலம் மட்டுமே ஆகும். இந்த ஒப்புதல் வாக்குமூலத்தைப் பெற்ற – விசாரணையின்போது மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக இருந்து, டி.ஜி.பி. பதவி வரை உயர்வு பெற்று ஓய்வு பெற்ற – காவல்துறை அதிகாரி திரு. வி. தியாகராசன் ஐ.பி.எஸ்., அவர்கள், பேரறிவாளனின் மரண தண்டனைக்குக் காரணமான ஒப்புதல் வாக்குமூலத்தைப் பெற்றதில் தான் மிகப்பெரிய தவறு செய்து விட்டதாக உச்ச நீதிமன்றத்திலேயே 26.10.2017இல் உறுதியுரை (பிரமாணப் பத்திரம்) அளித்திருக்கிறார்.

பேரறிவாளன் அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தை சொல்லுக்குச் சொல் பதிய வேண்டிய சட்டக் கடமையிலிருந்து தவறி விட்டதாகவும், குறிப்பாக – இராசீவ்காந்தி கொலைக்குப் பயன்படுத்தப்பட்டதாகச் சொல்லப்படும் 9 வோல்ட் பேட்டரியை தான் தான் வாங்கி வந்ததாகவும், ஆனால் அது எதற்கு வாங்கப்படுகிறது என்று எனக்குத் தெரியாது என்றும் பேரறிவாளன் கூறியதை, தான் பதிவு செய்யாமல் விட்டதால் அந்த ஒரே வாக்கு மூலத்தின் காரணமாக இந்த வழக்கில் அவர் மரண தண்டனை பெற்றார் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

· இராசீவ்காந்தி கொலையில் ஈடுபட்ட மனித வெடிகுண்டு பயன்படுத்திய ஐ.இ.டி. பேட்டரி எங்கே வாங்கப்பட்டது, எந்தத் தன்மையானது என்பது குறித்து அறுதியிட்டு முடிவான முடிவுக்கு வர முடியவில்லை என்று பன்நோக்கு விசாரணை முகமை இடைக்கால அறிக்கையில் கூறியிருக்கிறது. இச்சிக்கல் குறித்த ஜெயின் ஆணைய அறிக்கையும் அவ்வாறே கூறியிருக்கிறது.

· பேரறிவாளன் மரண தண்டனையை உறுதிசெய்து தீர்ப்பளித்த உச்ச நீதிமன்ற அமர்வுக்குத் தலைமை தாங்கிய நீதிபதி கே.டி. தாமஸ், தனது பணி ஓய்வுக்குப் பிறகு இந்த வழக்கில் அளிக்கப்பட்ட உச்ச நீதிமன்றத் தீர்ப்பு சட்டப்படி தவறானது (Bad in Law) என இந்தியன் எக்ஸ்பிரஸ், ஏசியன் ஏஜ் உள்ளிட்ட ஏடுகளுக்கும், பல்வேறு தொலைக் காட்சிகளுக்கும் அளித்த பேட்டிகளில் பலமுறை கூறிவிட்டார்.

· இராசீவ்காந்தி கொலை சதித்திட்டம் தணு, சிவராசன், சுபா ஆகிய மூன்று பேரைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது என்பதை ஏற்றுக் கொண்ட பிறகு, தனது தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு கொலைச் சதிக்காக 3 பேருக்கு மரண தண்டனையும், 4 பேருக்கு வாழ்நாள் சிறையும் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்ததுதான் தவறானது என நீதிபதி கே.டி. தாமஸ் கூறுகிறார்.

· அ.ஞா. பேரறிவாளன் தனது நீண்ட சிறைவாசத்தின் காரணமாக பல்வேறு நோய்களுக்கு ஆட்பட்டிருக்கிறார். குருதி அழுத்தம், சிறுநீரகக் கோளாறு, கீல்வாதம், தூக்கமின்மை போன்ற பல்வேறு நோய்களால் பேரறிவாளன் துன்புற்று வருவதை தமிழ்நாடு சிறைத்துறை நீதிமன்றங்களில் அளித்த மருத்துவ அறிக்கையிலேயே உறுதி செய்திருக்கிறது. அவர் வெளியில் சிகிச்சைப் பெற வேண்டிய அவசர – அவசியத்தில் இருக்கிறார்.

· பேரறிவாளன் அவரது பெற்றோருக்கு ஒரே ஆண் மகனாவார். அவரது இரண்டு சகோதரிகளும் திருமணமாகி அவரவர் இல்லங்களில் இருக்கிறார்கள். இந்த நிலையில், தனித்து வாழும் மூத்த வயதுடைய அவரது பெற்றோர்களை கவனிப்பதற்கு பேரறிவாளனைத் தவிர வேறு யாரும் கிடையாது.

· பேரறிவாளன் தாயார் அற்புதம் அம்மாள், பேரறிவாளனின் விடுதலைக்காகவே கடந்த முப்பதாண்டுகளாக அலைந்து அலைந்து சோர்ந்து, தனது 72ஆவது வயதில் குருதி அழுத்தம், தூக்கமின்மை, தீராத மூட்டுவலி உள்ளிட்ட பல நோய்களுக்கு ஆளாகி அவதிப்படுகிறார்.

· பேரறிவாளன் தந்தையார் ஞானசேகரன் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். மாணவர்களை ஒழுக்கநெறியோடு கட்டுப்பாடாக வளர்த்தெடுத்ததில் கல்வித் துறையால் பலமுறை பாராட்டப்பட்டவர். சிறந்த கவிஞர். அவர் 78 வயதில் மூப்பின் காரணமாக வரக்கூடிய பல்வேறு நோய்களுக்கு ஆளாகி, தற்போது இடுப்பு எலும்பு முறிவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். அவருக்கு பேரறிவாளனின் துணை இப்போது அதிகமாகவே தேவைப்படுகிறது.

இவ்வாறான ஞாயமான காரணங்களை எடுத்துக்கூறி உச்ச நீதிமன்றத்தின் கருத்தையும் வலியுறுத்தி, ஆளுநரை நேரில் சந்தித்து தாங்கள் பேரறிவாளன் விடுதலையை வற்புறுத்த வேண்டியது அவசரப் பணி என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

வரும் 23.11.2020 அன்று, உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு வருகிற நிலையில், அதற்கு முன்பாகவே ஆளுநரை வலியுறுத்துவது பேரறிவாளன் விடுதலைக்கு வாய்ப்பளிக்கும் என நம்புகிறேன். அவ்வாறு சந்தித்துவிட்டு, அதன்நிலையை 23.11.2020 அன்று உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவித்தால், ஒருவேளை இதில் காலதாமதமானாலும் உச்ச நீதிமன்றத்தின் வழியாக தீர்வு ஏற்பட வாய்ப்பளிக்கும்.

பேரறிவாளன் முன்விடுதலையை வெற்றிகரமாக முடித்துவிட்டால், அது இவ்வழக்கில் உள்ள பிற ஆறு தமிழர்களின் முன்விடுதலைக்கும் வழி திறந்துவிடும்! அமைச்சரவையின் பரிந்துரையை செயலுக்குக் கொண்டு வருவதற்கும் உற்ற வழியாகத் திகழும்!

இதில் தாங்கள் சிறப்பாக செயல்பட்டால் அது தங்களுக்கு – தமிழ்நாட்டுத் தமிழரிடையே மட்டுமின்றி, உலகம் முழுவதும் பரவிவாழும் தமிழரிடையே பெருமையையும், நற்பெயரையும் பெற்றுத் தரும் என்பது திண்ணம்!

எனவே, தாங்கள் தமிழ்நாடு ஆளுநர் அவர்களை உடனடியாகச் சந்தித்து பேரறிவாளன் விடுதலைக்கு தீவிர முயற்சி மேற்கொள்ள வேண்டுமென தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

அதற்கிடையில், தமிழ்நாடு தண்டனைகள் தற்காலிக நிறுத்த விதிகளின் (Tamilnadu Suspension of Sentence Rules – 1982) விதி 40 அளிக்கும் சிறப்பதிகாரத்தைப் பயன்படுத்தி, பேரறிவாளனுக்கு நீண்டகால சிறை விடுப்பு அளித்து ஆணையிடுமாறும், பிற அறுவருக்கும் இவ்வாறான ஆணையிடுமாறும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response