பீகார் முதற்கட்டத் தேர்தல் இன்று – பாஜக சரிவின் முதற்கட்டமா?

பீகார் சட்டமன்றத் தேர்தல் மூன்று கட்டங்களாக நடக்கவிருக்கின்றன.3 கட்ட வாக்குப் பதிவில் முதற்கட்ட வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்குகிறது.

71 தொகுதிகளில் முதற்கட்டத் தேர்தல் நடக்கிறது. 2 கோடி பேர் வாக்களிக்கவிருக்கின்றனர். இந்தத் தேர்தலில் 114 பெண்கள் உள்பட 1,066 வேட்பாளர்கள் போட்டிடுகின்றனர். 71 தொகுதிகளுக்கு நடைபெறும் முதற்கட்ட வாக்குப் பதிவில் முதல்வர் நிதிஷ் குமாரின் அமைச்சரவையில் உள்ள 6 அமைச்சர்களின் அரசியல் எதிர்காலம் நிர்ணயம் செய்யப்படும்.

3 கட்ட வாக்குப் பதிவை முன்னிட்டு பாதுகாப்புப் பணிகளுக்காக மத்திய அரசு 30 ஆயிரம் மத்திய பாதுகாப்புப் படை வீரர்களைக் குவித்துள்ளது. மாவோயிஸ்டுகள் அதிகமுள்ள தொகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான பல்வேறு விதிமுறைகளும் வகுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டு உள்ளன. 7 இலட்சம் சேனிடைசர்கள், 46 இலட்சம் முகக்கவசங்கள், 6 இலட்சம் தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள், 23 இலட்சம் ஜோடி கையுறைகள் ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன.

இதுதவிர 80 வயது கடந்த மூத்த குடிமக்கள் அல்லது மாற்று திறனாளிகள் வாக்களிக்க வசதியாக தபால் ஓட்டு நடைமுறையும் உள்ளது. இதன்படி, 52 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்க இருக்கின்றனர் என தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.

ஆளும் நிதிஷ்குமார் கட்சியும் பாஜகவும் இணைந்து தேர்தலைச் சந்திக்கின்றன. இந்த முதற்கட்ட வாக்குப்பதிவு பாஜகவுக்கு சரிவின் முதற்கட்டமாக இருக்கும் என்கிறார்கள்.

Leave a Response