முகக்கவசம் அணிவதில் முதல் தளர்வு – பெங்களூரு மாநகராட்சி அறிவிப்பு

பெங்களூருவில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக பொதுமக்கள் கண்டிப்பாக முகக் கவசம் அணிய வேண்டும் என்று மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

முகக் கவசம் அணியாதவர்களிடம் இருந்து அபராதம் வசூலிக்க மாநகராட்சி சார்பில் மார்ஷல்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்த மார்ஷல்கள் நகரின் அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று முகக் கவசம் அணியாதவர்களிடம் இருந்து ரூ.200 அபராதம் வசூலித்து வருகிறார்கள்.

சில நேரங்களில் மார்ஷல்களுடன் சேர்ந்து காவல்துறையினரும் அபராதம் விதிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், முகக் கவசம் அணியவதில் இருந்து வாகன ஓட்டிகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று மாநகராட்சிக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் வாகன ஓட்டிகள் முகக் கவசம் அணிவதில் சில தளர்வுகளை மாநகராட்சி அறிவித்துள்ளது. அதன்படி, இருசக்கர வாகனங்கள், கார் உள்ளிட்ட வாகனங்களில் ஒருவர் மட்டும் சென்றால் முகக் கவசம் அணியத் தேவையில்லை. அவர்கள் முகக் கவசம் அணியாமல் வாகனங்களை ஓட்டிச் செல்லலாம். அதே நேரத்தில் இருசக்கர வாகனத்தின் பின்னால் யாராவது அமர்ந்திருந்தால், 2 பேரும் கண்டிப்பாக முகக் கவசம் அணிய வேண்டும்.

அதுபோல, காரில் ஓட்டுநருடன், பிற பயணிகள் இருந்தால் அனைவரும் கண்டிப்பாக முகக் கவசம் அணிய வேண்டும் என்றும், இல்லையெனில் அபராதம் வசூலிக்கப்படும் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது. மாநகராட்சியின் இந்த அறிவிப்புக்கு வாகன ஓட்டிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

கொரோனாவுக்குப் பின்னர் இந்தியாவில் முதன்முறையாக பெங்களூருவில் முகக்கவசத்துக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Response