கறுப்பர் கூட்டம் கைது – மே 17 இயக்கம் கண்டனம்

கறுப்பர் கூட்டம் என்ற யூ டியூப் சேனல் ஒன்றில் கந்த சஷ்டி கவசம் குறித்து வெளியான பதிவு இந்து மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தியுள்ளதாக தமிழக பாஜக சார்பில் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதனையடுத்து, கறுப்பர் கூட்டம் யூ டியூப் சேனலைச் சேர்ந்த செந்தில்வாசன் நேற்று இரவு கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில், அந்த சேனலை சேர்ந்த சுரேந்திரன் என்பவர் புதுச்சேரியில் உள்ள அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். புதுச்சேரியில் சரண் அடைந்துள்ள சுரேந்திரனை சென்னை அழைத்து வர தமிழகக் காவல்துறையினர் புதுச்சேரி விரைந்துள்ளனர் என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில், கறுப்பர் கூட்டம் மீதான அரசின் நடவடிக்கை கருத்து சுதந்திரத்தை நசுக்கும் செயல் என்று மே 17 இயக்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

அவ்வியக்கம் வெளீயிட்ட செய்திக்குறிப்பில்….

கறுப்பர் கூட்டம் யூடுப் சேனல் மீது தமிழக பிஜேபினரின் புகாரை அடுத்து கடந்த 13ஆம் தேதி அதன் நிர்வாகிகள் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் (153, 153(A)(1)(a), 295(P), 505 (1)(b) and 505(2) மத்திய குற்றப்பிரிவு (சிசிபி) போலிசார் வழக்கு பதிவு செய்தனர்.

இதனை அடுத்து நேற்று 15.07.20 மாலை செந்தில் வாசன் என்பவரை கைது செய்திருக்கிறார்கள். அதாவது அவர்களின் யூடூப் சேனலில் மூன்று மாதங்களுக்கு முன் போடப்பட்ட நிகழ்ச்சிக்கு தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

அந்த நிகழ்ச்சியால் தமிழகத்தில் எந்த அசாம்பாவிதங்களும் யாரும் மனதும் கடந்த மூன்று மாதங்களாக புண்படாத நிலையில், தற்போது அதை பெரிதாக ஆக்கியதே பிஜேபியினர் தான். ஆகவே பிஜேபியினரை திருப்திப்படுத்துவதற்காகவே தற்போது கறுப்பர் கூட்டத்தின் மீதான நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறதா என்ற சந்தேகமும் எழுகிறது.

அவர்கள் வெளியிட்ட கானொளியால் மனம் புண்பட்டது என்றால் இந்த நாட்டில் பெரும்பான்மையாக இருக்கும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மக்களை பிராமணர்களின் மாநாட்டில் வைத்து நாய்கள் என்று பேசி அனைவரையும் புண்படுத்தியவர் மீது வழக்கு பதிந்ததோடு நிற்கிறதே அது ஏன்?

கொரோனா காலத்தில் இதை இஸ்லாமியர்கள் தான் பரப்புகிறார்கள் என்று எந்தவித ஆதாரமில்லாமல் நேரடியாக பேசி ஒட்டுமொத்த இஸ்லாமியர்களை இஸ்லாமியர் அல்லாத மக்களுக்கு எதிரியாக்கும் வேலையைத் திட்டமிட்டு செய்து, இஸ்லாமியர்களின் மனம் புண்படும் வகையில் தொடர் கானொளிகளை வெளியிட்ட பிஜேபியை சேர்ந்தவர்களையும், அவர்களுக்கு பின்னாளிலிருந்து வேலை செய்து கொண்டிருப்பவர்கள் மீது பல புகார்கள் தமிழகமெங்கும் இருந்தும் இன்று வரை ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது ஏன்? மேலும் சமீபத்தில் தமிழ்த்தொலைகாட்சி ஊடகவியலாளர்களின் மீது அவதூறு பரப்பி காணொளி வெளியிட்ட நபர் மீது என்ன வகையான நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

ஆக திட்டமிட்டு பொய்களை பரப்புவர்கள் மீது இன்றுவரை ஒரு நடவடிக்கையும் எடுக்காத நிலையில், பிஜேபி கொடுக்கும் புகாரை மட்டும் இரண்டு நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கவேண்டிய அழுத்தம் எங்கிருந்து வந்தது.

சட்டம் என்பது அனைவருக்கும் சமம் தானே ஆனால் அது குறிப்பிட்டவர்களை அல்லது குறிப்பிட்ட சித்தாந்தம் பேசுபவர்கள் மீது மட்டும் பாயும்.மற்றவர்களை பார்த்தால் பம்புமென்றால் அது எப்படி நீதியாகும்.

எனவே கருத்து சுதந்திரத்தை தடுக்கும் வழியில் கைது செய்யப்பட்ட கறுப்பர் கூட்ட நிர்வாகிகளை விடுதலை செய்ய வேண்டும். அவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை இரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு மே 17 இயக்கம் கூறியுள்ளது.

Leave a Response