சிறுமி ஜெயஸ்ரீயை எரித்துக் கொன்றது ஏன்? – கொலையாளிகள் வாக்குமூலம்

விழுப்புரம் அருகே உள்ள சிறு மதுரை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயபால் மகள் ஜெயஸ்ரீ (15). அதே ஊரில் உள்ள அரசுப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்தார். இவரின் பெற்றோர் நேற்று முன்தினம் பக்கத்து ஊருக்குச் சென்றிருந்த நிலையில் ஜெயஸ்ரீ மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.

இந்நிலையில் இவர்களின் வீட்டில் இருந்து அதிக அளவில் புகை வெளியேறியதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் அங்கு சென்றபோது, உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்த நிலையில் ஜெயஸ்ரீ வலியால் அலறியுள்ளார். உடனே, அவரை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

தகவலறிந்து மருத்துவமனைக்கு வந்த விழுப்புரம் நீதிபதியிடம் மாணவி ஜெயஸ்ரீ வாக்குமூலம் அளித்தார். அதே கிராமத்தைச் சேர்ந்த கணபதி மகன் முருகன் (51), கந்தசாமி மகன் யாசகம் என்கிற கலியபெருமாள் (60) ஆகியோர் வீட்டுக்குள் புகுந்து தன் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து விட்டு தப்பிச் சென்றுவிட்டதாக அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த ஜெயஸ்ரீ நேற்று காலை உயிரிழந்தார். அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் அதிமுக முன்னாள் கவுன்சிலரின் கணவர் முருகன், அதிமுக கிளைச் செயலாளர் யாசகம் என்கிற கலியபெருமாள் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்விரோதம் காரணமாக ஜெயபாலைத் தாக்க வந்தவர்கள் ஜெயபால் வீட்டில் இல்லாததால் அவரது மகளைத் தாக்கி, பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

ஜெயஸ்ரீ உயிரிழந்ததால் கொலை முயற்சி வழக்காகப் பதிவு செய்யப்பட்ட வழக்கு கொலை வழக்காக திருவெண்ணெய் நல்லூர் காவல்துறையினர் மாற்றினர்.கொலை வழக்கில் தொடர்புடைய இருவரும் அதிமுக பிரமுகர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கைது செய்யப்பட்டவர்களிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையின்போது,

பொருளாதார ரீதியாகப் பின் தங்கிய ஜெயபால் குடும்பத்தினர் எங்களை மதிக்கவில்லை. இதனால் கடந்த 8 ஆண்டுகளாக அக்குடும்பத்தினருடன் தகராறு இருந்து வந்தது.

சமீபகாலமாக ஜெயபால் குடும்பத்தினர் பொருளாதார ரீதியாக முன்னேறி வருகின்றனர். மேலும், ஜெயஸ்ரீ எங்களைப் பொது இடத்தில் தொடர்ந்து மரியாதைக் குறைவாக அவமானப்படுத்தி வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பும் அச்சிறுமி மரியாதைக் குறைவாகப் பேசினார்.

இதுகுறித்து ஜெயபால் நேற்று முன்தினம் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கச் சென்றார். ஜெயபாலை அச்சுறுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் ஜெயஸ்ரீ மீது பெட்ரோல் ஊற்றித் தீ வைத்தோம்

இவ்வாறு அவர்கள் வாக்குமூலம் கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது.

Leave a Response