காவிரியைக் காக்க மே 7 ஆம் தேதி கறுப்புக்கொடிப் போராட்டம் – உரிமை மீட்புக்குழு அழைப்பு

காவிரி உரிமையைப் பறிக்கும் இந்திய அரசைக் கண்டித்து வீட்டு வாயிலில் கண்டனப் பதாகையுடன் கறுப்புக் கொடி ஏந்திப் போராடுவதென காவிரி உரிமை மீட்புக் குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

காவிரி உரிமை மீட்புக் குழுவின் செயற்குழு குழுக் கூட்டம் இன்று (01.05.2020) காலை காணொலி வழியில் நடைபெற்றது. கூட்டத்தை காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் ஒருங்கிணைத்தார்.

சட்டமன்ற உறுப்பினரும், மனிதநேய சனநாயகக் கட்சித் தலைவருமான மு.தமிமுன் அன்சாரி, காவிரி உரிமை மீட்புக் குழு பொருளாளர் த.மணிமொழியன், தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன், தமிழர் தேசிய முன்னணி பொதுச்செயலாளர் மருத்துவர் இலரா.பாரதிச்செல்வன், இந்திய சனநாயகக் கட்சி மாவட்டச் செயலாளர் சிமியோன் சேவியர்ராசு, தமிழ்த்தேசியப் பாதுகாப்புக் கழகத் தலைவர் வழக்கறிஞர் த.சு.கார்த்திகேயன், தமிழர் தேசிய முன்னணி திருவாரூர் மாவட்டச் செயலாளர் ச.கலைச்செல்வன், தமிழக உழவர் முன்னணித் தலைவர் சி.ஆறுமுகம்,மன்னையின் மைந்தர்கள் இராசசேகரன், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் க.அருணபாரதி, பழ.இராசேந்திரன், க.விடுதலைச்சுடர், தை.செயபால், பொதுக்குழு உறுப்பினர் மூ.த.கவித்துவன்,பி.முருகையன், தொழில் முனைவோர் வெள்ளாம்பெரம்பூர் இரமேசு, தனசேகரன்,பார்த்திபன், திருவாரூர் சூனா செந்தில் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தின்போது, அண்மையில் நடுவண் அரசு காவிரி மேலாண்மை ஆணையத்தை அதன் நீராற்றல் (ஜல்சக்தி) துறைக்குக்கீழ் ஒரு பிரிவுபோல் சேர்த்துள்ளதால் ஏற்படும் ஆபத்துகளையும், இழப்புகளையும் ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் விளக்கினார். அதன்பிறகு ஒவ்வொருவரும் கருத்துகள் சொன்னார்கள். நிறைவில், பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தீர்மானம் – 1

இந்திய அரசே! காவிரி மேலாண்மை ஆணையத்தை நடுவண் நீராற்றல்துறையில் சேர்த்ததைத் திரும்பப் பெறு!

இந்திய அரசின் அமைச்சரவைக் குழு 27.04.2020 அன்று வெளியிட்ட அரசிதழில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை இந்திய அரசின் நீராற்றல் (ஜல்சக்தி) துறையின் கீழமை அலுவலகமாக மாற்றி நிர்வாகப் பணி விதிகள் செய்திருப்பதாக அறிவித்திருந்தது. இதற்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் தந்ததாகவும், அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

நீராற்றல் துறையின் அன்றாட நிர்வாகப் பணி விதிகளில் பல மாற்றங்களை அமைச்சரவைக் குழு அறிவித்துள்ளது. குறிப்பாக, அரசமைப்புச் சட்டத்தில் மாநில அதிகாரப்பட்டிலில் உள்ள ஆறுகளின் தண்ணீர் பாதுகாப்பு, வளர்ச்சித் திட்டங்கள், நீர் மேலாண்மை, மாசுக் கட்டுப்பாடு ஆகிய அதிகாரங்கள் இனிமேல் நடுவண் நீராற்றல் துறையின் கீழ் வருகின்றன என்று மேற்படி பணி விதிகளில் புதிதாக 7A என்ற பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது.

அடுத்து, 33A, B, C, D, E என்று ஐந்து பிரிவுகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. இதில் 33E பிரிவு காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை மேற்படி நீராற்றல் துறையின் கீழ் உள்ள அலுவலகமாக மாற்றியுள்ளது.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மாநில அதிகாரமாக வழங்கப்பட்டுள்ள ஆற்று நீர் உரிமையில் மாநிலங்களுக்கிடையே சிக்கல்கள் ஏற்பட்டால், அதைத் தீர்த்து வைக்க உச்ச நீதிமன்றத்துக்கு இணையான தண்ணீர்த் தீர்ப்பாயம் நிறுவ வழிவகுக்கும் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் உறுப்பு 262-இன் அதிகாரம் நீராற்றல் துறையின் அலுவல் பணி விதிகளில் ஏற்கெனவே மேற்படி பணி விதிகளில் 32ஆம் எண்ணில் பதிவு செய்யப்பட்டிருந்தது. இப்புதிய திருத்தம் அந்தப் பதிவு 32-ஐ நீக்கிவிட்டது.

அரசமைப்புச் சட்ட உறுப்பு 262 பணி விதிகளில் தொடர்ந்தால், மாநில உரிமைகளைப் பறித்துப் புதிதாக செய்யப்பட்ட திருத்தங்களுக்கு முரண்பாடு ஏற்படும் என்பதற்காக – தந்திரமாக பதிவு 32-ஐ ஆட்சியாளர்கள் நீக்கியுள்ளார்கள்.

உச்ச நீதிமன்றம் 2018 பிப்ரவரி 16 அன்று அளித்த தீர்ப்பின்படி காவரி மேலாண்மை ஆணையம், தன்னதிகாரமுள்ள தற்சார்பு அமைப்பாகும். அது, இந்திய அரசின் துறைகளுக்குக் கட்டுப் பட்டதல்ல! அது முழுநேரத் தலைவர் மற்றும் அதிகாரிகளுடன் தனி அலுவலகத்தில் செயல்பட வேண்டும்.

காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றில் பணிபுரியும் முழுநேர அதிகாரிகளுக்கும், பணியாளர்களுக்கும் உரிய சம்பளம் மற்றும் அலுவலகச் செலவுகளுக்கு தமிழ்நாடு 40%, கர்நாடகம் 40%, கேரளம் 15%, புதுச்சேரி 5% என்ற விகிதத்தில் நிதி வழங்க வேண்டும். ஆனால், நரேந்திர மோடி ஆட்சி காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு முழுநேரத் தனி அதிகாரிகள் அமர்த்தாமல், நடுவண் நீர் ஆணையத் தலைவரின் கூடுதல் பணியாக இன்றுவரைக் குறுக்கிவிட்டது.

இந்த அதிகாரப் பறிப்பை நிரந்தரப்படுத்தவும், விதிமுறைகளுக்கு உட்படுத்தவும் மோடி அரசு சூழ்ச்சியாக மேற்கண்ட அலுவலகப் பணி விதிகளில் திருத்தம் செய்துள்ளது. இந்த உரிமைப் பறிப்பைக் கண்டித்து காவிரி உரிமை மீட்புக் குழுவில் உறுப்பு வகிக்கும் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பொதுச்செயலாளர் முதலில் (28.04.2020 இரவு) அறிக்கை வெளியிட்டார். மறுநாள், பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும், உழவர் அமைப்புகளின் தலைவர்களும் இந்தத் திருத்தத்தைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டார்கள்.

இவற்றிற்கு மறுப்புக் கூறுவதுபோல், தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறை விளக்க அறிக்கை ஒன்று 29.04.2020 மாலையில் வெளியிட்டது. அதில், தமிழ்நாடு அதிகாரிகள் நடுவண் நீராற்றல் துறையிடம் மேற்படி திருத்தங்கள் பற்றி விளக்கம் கேட்டதாகவும், அதற்கு நீராற்றல் துறை அதிகாரிகள் ஏற்கெனவே உள்ள உரிமை எதுவும் பறிக்கப்படமாட்டாது என்று விளக்கம் கூறியதாகவும் கூறப்பட்டுள்ளது.

நாம் மேலே கூறிய புதிய விதிகள் சேர்ப்பு மற்றும் பழைய விதி நீக்கம் ஆகியவை பற்றி எந்தக் கருத்தும் தமிழ்நாடு அரசு அறிக்கை கூறவில்லை. காவிரி ஆணையத்தின் தன்னதிகார உரிமையைப் பறிக்கும் வஞ்சகச் செயலை தமிழ்நாடு அரசு ஞாயப்படுத்தி தமிழ்நாட்டுக்கு இரண்டகம் செய்துள்ளது.

மேற்படி திருத்தங்கள் கைவிடப்படவில்லை என்றால், இந்திய நீராற்றல்துறை கர்நாடகம் மேக்கேதாட்டில் அணை கட்ட உடனடியாக அனுமதி கொடுத்து விடும். மேக்கேதாட்டு அணை கட்டப்பட்டால் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட மேட்டூர் அணைக்கு வராது.

அடுத்ததாக, ஏற்கெனவே காங்கிரசு ஆட்சியும், இப்போது பா.ச.க. ஆட்சியும் தயாரித்த “தேசியத் தண்ணீர்க் கொள்கை”, மாநில ஆறுகளை நடுவண் அரசு தனியார் வசம் குத்தகைக்குவிட்டு, வேளாண் பாசனத்திற்கும், குடிநீருக்கும் மீட்டர் வைத்து, கட்டணம் வசூலிக்கும் திட்டம் வைத்துள்ளது.

இப்பொழுது செய்யப்பட்ட திருத்தத்தின்படி, மிக எளிதாக காவிரி உள்பட பல்வேறு ஆறுகளை பன்னாட்டுக் குழுமங்களிடம் மோடி அரசு ஒப்படைத்துவிடும்! எனவே, மேற்படி திருத்தங்கள் செயல்பட்டால், உழவர்கள் வாழ்க்கை மட்டுமின்றி, அனைத்து மக்களின் வாழ்க்கையும் கேள்விக்குறியாகிவிடும்! பன்னாட்டுக் குழுமங்கள் வேட்டைக்கு மக்கள் பலியாகிவிடுவார்கள்!

எனவே, நீராற்றல் துறைக்கென திருத்தம் செய்யப்பட்ட புதிய பணி விதிகளின் பதிவு 7A, 33A, B, C, D, E முதலியவற்றை முற்றிலுமாக நீக்கிவிட வேண்டும். இப்பொழுது நீக்கப்பட்டுள்ள பதிவு 32-ஐ சேர்க்க வேண்டும்.

கொரோனாக் கொள்ளை நோய் ஊரடங்கைப் பயன்படுத்தி, மோடி அரசு மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிப்பதும், குறிப்பாக தமிழர்களின் உயிர்நாடியான காவிரி உரிமையைப் பறிக்கும் வகையில் காவிரி மேலாண்மை ஆணையத்தை பொம்மை அமைப்பாக மாற்றுவதும் சூழ்ச்சிகள் நிறைந்த சர்வாதிகாரச் செயலாகும்! எப்பொழுதும் தமிழர்களுக்கு எதிரான இனப்பகை அரசியலை நடத்தும் பா.ச.க. ஆட்சி, இப்பொழுதுள்ள சூழ்நிலையைப் பயன்படுத்திக் கூடுதலாக தமிழர்களின் வாழ்வுரிமைகளைப் பறிக்கிறது. இவற்றை எதிர்கொண்டு, தமிழர்கள் ஒருங்கிணைந்து போராடி உரிமைகளைத் தக்க வைக்காவிட்டால், சொந்த மண்ணிலேயே நாம் ஏதிலியர்களாக அலைய நேரிடும்.

நாளையிலிருந்து (02.05.2020) வரும் 07.05.2020 வரை, மேற்கண்ட அநீதிக்கு எதிராகவும், காவிரி மேலாண்மை ஆணையத்தை தன்னதிகாரமுள்ள, தனிப்பொறுப்புள்ள தலைமை அதிகாரிகளும் தனி அலுவலகமும் கொண்டு செயல்படும் அமைப்பாக மாற்றிடக் கோரியும் சமூக வலைத்தளங்களில் அனைவரும் பரப்புரை செய்ய வேண்டும்! பரப்புரை முழக்கங்கள் விரைவில் அனுப்பப்படும்.

தீர்மானம் – 2

கறுப்புக் கொடி – கண்டனப் பதாகை

வரும் 2020 மே 7 – வியாழன் அன்று மாலை 5 மணியிலிருந்து 5.30 மணிக்குள், கரூர், திருச்சி, அரியலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் அனைத்து மக்களும் – ஆண்கள் – பெண்கள் – மாணவர்கள் – அவரவர் வீட்டு வாயிலில் குறிப்பிட்ட சமூக இடைவெளிவிட்டு கையில் கண்டனம் மற்றும் கோரிக்கைப் பதாகைகளையும், கறுப்புக் கொடிகளையும் ஏந்தி, அரசுக்கு நம்முடைய கோரிக்கையைத் தெரிவிக்குமாறு காவிரி உரிமை மீட்புக் குழு அன்புடன் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் – 3

உரிமை உரைக்கும் குழு

மேற்கண்ட செய்திகளை சுருக்கமாக, அதேவேளை தெளிவாக தங்களின் சொற்களில் மற்றவர்களுக்குத் தெரிவிக்கக்கூடிய ஐம்பது உறுப்பினர்களைக் கொண்ட “உரிமை உரைக்கும் குழு” அமைப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இக்குழு உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் ஒரு நாளைக்கு குறைந்தது, புதிதாக 10 பேரிடம் மேற்படி உரிமை மீட்புச் செய்திகளைத் தெரிவிக்க வேண்டும். இந்தக் குழுவில் ஆர்வமுள்ள அனைவரும் இணைந்து இதனை வலுப்படுத்துமாறு காவிரி உரிமை மீட்புக் குழு கேட்டுக் கொள்கிறது. (குழுவில் இணைய – 99439 30417, 85258 00820, 90954 11411 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளுங்கள்)

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

Leave a Response