திமுக வழக்கு போட்டதும் பின்வாங்கியது தமிழக அரசு

நேற்று (ஏப்ரல் 12) தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், அரசியல் கட்சிப் பிரமுகர்கள் மற்றும் பிற அமைப்புகளைச் சார்ந்த அனைவரும், ஊரடங்கு அமலில் உள்ள இத்தருணத்தில் பொருட்களை நேரடியாக மக்களுக்கு வழங்கி, வைரஸ் தொற்றுக்கு வழிவகுப்பதைத் தவிர்க்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இதற்கு அனைத்துத் தரப்பினரும் முழு ஒத்துழைப்பும் நல்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த அறிவுரைகளை மீறி யாரேனும் செயல்பட்டால், அரசின் ஊரடங்கு உத்தரவை மீறியதாகக் கருதி, அவர்கள் மீது உரிய சட்டப்படியான நடவடிக்கையை எடுக்க மாவட்ட ஆட்சியர்களும், காவல்துறை அலுவலர்களும் அறிவுறுத்தப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

பொதுமக்களுக்கு தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்டவை உணவு வழங்க அரசு விதித்த தடைக்கு எதிராக தி.மு.க. சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில், தமிழக அரசு அளித்துள்ள விளக்கத்தில், சூழ்நிலைக்கு ஏற்ப தன்னார்வலர்கள் உரிய வழிமுறைகளைப் பின்பற்றும்படி அறிவுறுத்தப்பட்டது. தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் என யாருக்கும் தடை விதிக்கவில்லை.

கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கையாகவே ஊரடங்கால் பாதிக்கப்பட்டோருக்கு தன்னார்வலர்கள் நேரடியாக உதவ கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. பேரிடருக்கு உதவுவது போன்று தன்னார்வலர்கள் நேரடியாக உதவச் சென்றால் அது கொரோனா பரவலுக்கு வழிவகுத்து விடும் என தெரிவித்து உள்ளது.

ஏழை மக்களுக்கு உதவி செய்வதற்கு அரசு தடை விதித்தது போல் சித்தரிக்கப்படுகிறது. அரசு எந்தவித அரசியலும் செய்யவில்லை என்றும் விளக்கம் அளித்து உள்ளது.

உதவிகளை நேரடியாகச் செய்தால் ஊரடங்கை மீறியதாக வழக்கு என்று மிரட்டிய தமிழக அரசு, திமுக வழக்கு தொடர்ந்ததும் பின்வாங்கியிருக்கிறது என்று சொல்கிறார்கள்.

Leave a Response