மனைவியைக் காப்பாற்ற 120 கி.மீ மிதிவண்டிப் பயணம் – தொழிலாளிக்குக் குவியும் பாராட்டுகள்

கும்பகோணத்தை அடுத்த மகாராஜபுரம் மணல்மேடு ஆற்றங்கரைத் தெருவைச் சேர்ந்தவர் அறிவழகன்(61). கூலித் தொழிலாளியான இவரது 2 ஆவதுமனைவி மஞ்சுளா(39). இவர்களுக்கு விஷ்ணு(12) என்ற மனவளர்ச்சி குன்றிய மகன் உள்ளார், அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 7 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

மஞ்சுளாவுக்கு, கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இடது கன்னத்தில் புற்றுநோய்க் கட்டி ஒன்று உருவாகியுள்ளது. தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அறிவழகன் அழைத்துச் சென்று காண்பித்துள்ளார்.

நோய் முற்றிய நிலையில், மஞ்சுளாவுக்கு கீமோதெரபி சிகிச்சை கொடுக்க வேண்டும் என்ற நிலை உருவானதால், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு மாதந்தோறும் மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் சென்று வருகிறார் அறிவழகன்.

மார்ச் 31 ஆம் தேதி பரிசோதனைக்கு ஜிப்மருக்கு செல்ல வேண்டும். ஆனால், ஊரடங்கு உத்தரவால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுவிட்ட நிலையில், என்ன செய்வது எனத் தெரியாமல் யோசனையில் இருந்தார் அறிவழகன். ஊரடங்கு உத்தரவு முடிந்தபிறகு செல்லலாம் என்றாலும், மனைவி புற்றுநோய் வலியால் துடிப்பதைப் பொறுத்துக் கொள்ளும் அளவுக்கு மனமில்லை. இதையடுத்து, மனைவியை எப்படியாவது ஜிப்மருக்கு அழைத்துச் செல்வது என முடிவெடுத்தார்.

இதையடுத்து, கட்டுச்சோறு கட்டி எடுத்துக்கொண்டு மார்ச் 29 ஆம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு மனைவியை தனது பழைய மிதிவண்டியில் ஏற்றிக்கொண்டு புதுச்சேரியை நோக்கிப் புறப்பட்டார் அறிவழகன். அணைக்கரை, வடலூர், கடலூர் வழியாக 120 கிலோமீட்டர் தொலைவைக் கடந்து அன்று இரவு 10.30 மணிக்கு புதுச்சேரி ஜிப்மர் மருத்துமனையைச் சென்றடைந்தார்.

கொரோனா தொற்று காரணமாக வெளிப்புற சிகிச்சைப் பிரிவுகள் அனைத்தையும் நிறுத்தி வைத்திருக்கும் ஜிப்மர் மருத்துவமனையில், அவசர சிகிச்சைப் பிரிவு மட்டுமே செயல்படுகிறது.

இதனால்,மருத்துவமனை வளாகத்தில் தங்கியிருந்து விட்டு மார்ச் 31 ஆம் தேதி காலை மருத்துவர்களைச் சந்தித்து மிதிவண்டியில் ஏற்றி அழைத்துவந்ததைக் கூறினார் அறிவழகன்.

அதிர்ந்து போன மருத்துவர்கள் உடனே மஞ்சுளாவை மருத்துவமனையில் அனுமதித்து, அவருக்குத் தேவையான சிகிச்சைகளை அளித்தனர்.இருவரையும் மருத்துவமனை வளாகத்திலேயே தங்க வைத்த மருத்துவர்கள், உணவு மற்றும் மருந்துகள் போன்றவற்றை தங்கள் செலவில் வாங்கிக் கொடுத்தனர். 2 நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு இருவரையும், அவசர ஊர்தியில் ஏற்றி சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.

மனைவியை மிதிவண்டியில் புதுச்சேரிக்கு அழைத்துச் சென்றது குறித்து ஊடகங்களிடம் அறிவழகன் கூறியதாவது….

என் முதல் மனைவி சுசிலா, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மாரடைப்பால் இறந்துவிட்டார். என் மூத்த மகன் ரவி, சென்னையில் கட்டிட வேலை செய்துவருகிறார். நான் எங்கு சென்றாலும், சைக்கிளில்தான் செல்வேன். மஞ்சுளாவை 2-வது திருமணம் செய்துகொண்டேன். அவர்மீது எனக்கு அளவு கடந்த பாசம்.

அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வலியால் துடித்ததை என்னால் பொறுத்துக்கொள்ள முடியாமல், தாங்க முடியாமல்தான் சைக்கிளில் ஏற்றி அழைத்துச் சென்றேன்.

புதுச்சேரி எவ்வளவு தூரம் என்பது கூட எனக்குத் தெரியாது. என் சைக்கிளை நம்பி புறப்பட்டுவிட்டேன். சில இடங்களில் போலீசார் தடுத்தனர். அவர்களிடம் விவரத்தை எடுத்துக் கூறினேன். ஒருசில போலீசார் டீ கொடுத்து பத்திரமாக செல்லுமாறு கூறினார்கள்.

மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து, ஒரு மாதத்துக்குத் தேவையான மாத்திரைகளையும் கொடுத்தார்கள். தொடர்ந்து சிகிச்சை பெற்றால்தான் காப்பாற்ற முடியும். மஞ்சுளாதான் எனக்கு எல்லோமே, நிச்சயம் புற்றுநோயிலிருந்து காப்பாற்றி விடுவேன் என்கிறார்.

அவர் 120 கிலோமீட்டர் மிதிவண்டியில் பயணம் செய்த செய்தி வெளீயானதும் பலரும் அவரைப் பாராட்டி வருகிறார்கள்.

Leave a Response