ஜெ ஆட்சியில் சீரழியும் அண்ணா நூலகம், குமுறும் மாணவர்கள்

உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, அண்ணா நூற்றாண்டு நூலகத்தை ஆய்வு செய்ய வந்த வழக்கறிஞர்களிடம் மாணவர்கள் சரமாரியாக புகார்  கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. 8 மாடி கட்டிடத்திற்கு 2 லிப்ட்களே செயல்படுகிறது, இருளில் தரையில் அமர்ந்து படிக்கும் நிலையும், கடந்த 4 ஆண்டுகளாக  எந்தவித புது புத்தகங்களும் வாங்கி வைக்கப்படவில்லை என்றும் மாணவர்கள் குமுறலை வெளிப்படுத்தினர். திமுக ஆட்சியில் சென்னை கோட்டூர்புரத்தில்  அண்ணா நூற்றாண்டு நூலகம் கட்டப்பட்டது. இதனை தொடர்ந்து, அதிமுக ஆட்சியின்போது, அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் உள்ள கூட்ட  அரங்கு திருமண நிகழ்ச்சிக்கு வாடகைக்கு விடப்பட்டது. இதை எதிர்த்து, மனோன்மணி என்பவர் வழக்கு தொடர்ந்து தடை உத்தரவு பெற்றார்.

இந்நிலையில், அண்ணா நூற்றாண்டு நூலகத்துக்கு உலக தரமான புத்தகங்கள் வாங்க வேண்டும், இணையதள வசதிகள், சுத்தமான கழிவறை வசதிகள்  உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டுமென உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், இந்த உத்தரவை செயல்படுத்த,  இதுவரை அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி பேராசிரியர் மனோன்மணி மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.  இதையடுத்து, நேற்று முன்தினம் வழக்கை விசாரித்த நீதிபதிகள், நூலகத்தை ஆய்வு செய்ய உத்தரவிட்டனர். வக்கீல்கள் பி.டி.ஆஷா, எம்.சுந்தர் ஆகியோர்  கொண்ட குழு நூலகத்தை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். உடன் மனுதாரர்கள் மற்றும் அவர்கள் தரப்பில் ஒரு வக்கீல் செல்லலாம்  என்று உத்தரவிட்டு வழக்கை அடுத்த மாதம் 28ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

இதைதொடர்ந்து, கோர்ட் உத்தரவுப்படி வக்கீல்கள் பி.டி.ஆஷா, எம்.சுந்தர் மற்றும் மனுதாரரின் வழக்கறிஞர் நீலகண்டன் ஆகியோர் கொண்ட குழு அண்ணா  நூற்றாண்டு நூலகத்தை நேற்று காலை முதல் மாலை வரை அங்குலம், அங்குலமாக ஆய்வு செய்தது. மேலும், விளக்குகள் எரிகிறதா, கழிவறைகள்  சுத்தமாக உள்ளதா, குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைக்கிறதா என அங்கிருந்த நூலக பொறுப்பாளர்களிடம் பல்வேறு கேள்விகள் கேட்டு விளக்கம் பெற்றனர்.  இந்த ஆய்வு மேற்கொண்டதற்கான அறிக்கையினை வக்கீல்கள் கோர்ட்டில் சமர்ப்பிப்பார்கள்.

இந்நிலையில், அண்ணா நூற்றாண்டு வளாகத்தில் ஆய்வில் ஈடுபட்டிருந்த குழுவினரிடம், அங்கு புத்தகங்கள் படிப்பதற்காகவும், குறிப்பு எடுப்பதற்காகவும்  வந்திருந்த மாணவர்கள் சூழ்ந்து கொண்டு அண்ணா நூற்றாண்டு நூலகத்தை பற்றி சரமாரியாக புகார்கள் தெரிவித்தனர். அப்போது, ‘உங்களின்  கருத்துக்களை கேட்கிறோம், முதலில் ஆய்வை முடித்துவிடுகிறோம்’ என்று வழக்கறிஞர் குழுவினர் கூறினர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து, மாணவர்கள் கணேஷ் மற்றும் தணிகாசலம் ஆகியோர் கூறியதாவது: இந்த நூலகம் 8 மாடிகளை கொண்டது. ஆனால் 2 லிப்ட் மட்டும்தான்  செயல்படுகிறது. மற்ற லிப்ட்கள் செயல்படுவதில்லை. இதனால் நடந்துதான் 7 மாடிகள் செல்ல வேண்டியுள்ளது. அதேபோல, பெரும்பாலான அறைகளில்  மின்விளக்குகள் எரிவதில்லை. மின்சாரமும் இருக்காது. இருட்டில் அமர்ந்து புத்தகம் படிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஜெனரேட்டரும் வேலை செய்வதில்லை. இந்த கட்டிடத்திற்கு ஜன்னல் கிடையாது, ஏசி இருந்தால் மட்டுமே உள்ளே அமர முடியும். அந்த வகையில் கட்டிடம்  அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், அநேக அறைகளில் ஏசி வேலை செய்வதில்லை. வியர்வையை துடைத்தபடிதான் குறிப்புகள் எடுக்க வேண்டியுள்ளது.  மேலும், பல இருக்கைகள் உடைந்துள்ளன. புது இருக்கைகள் மாற்றாததால் தரையில் உட்கார்ந்து படிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.   இவ்வாறு அவர்கள்  கூறினர்.

மாணவி ஜோதிலட்சுமி கூறியதாவது:  நான் போட்டி ேதர்வு எழுத குறிப்புகள் எடுப்பதற்காக இங்கு வருவேன். ஆனால், இங்குள்ள புத்தகங்கள் எதுவும்  அப்டேட்டாக இல்லை. அதாவது, 2011ம் ஆண்டுக்கு பிறகு எந்தவித புது புத்தகங்களும் நூலகத்தில் வாங்கி இருப்பு வைக்கப்படவில்லை. ஆசியாவின்  மிகப்பெரிய நூலகத்தின் நிலை இப்படி இருக்கிறது. தரைதளத்தில் உள்ள கழிவறையை தவிர வேறு எந்த கழிவறையையும் பராமரிப்பது கிடையாது. உள்ளே  போக முடியாதபடி மிகவும் அசுத்தமாக இருக்கும். இதனால், 7வது மாடியில் புத்தகம் படிக்கும் ஒருவர் கழிவறை செல்ல தரைதளத்திற்கு வரவேண்டிய  சூழ்நிலை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

பெயர் வெளியிட விரும்பாத ஒரு பெண் துப்புரவு தொழிலாளி கூறுகையில்,  இதுவரை இப்படி நாங்கள் தொடர்ச்சியாக வேலை பார்த்தது இல்லை. நேற்று  இரவு எங்களை அழைத்து காலையில் வந்துவிட வேண்டும், தரையில் யார் நடந்து சென்றாலும் தூசு ஒட்டாத அளவிற்கு தொடர்ச்சியாக மாப் கொண்டு  சுத்தம் செய்த வண்ணம் இருக்க வேண்டும் என உத்தரவிட்டனர் என்றார்.

ஊழியர்கள் வேதனை

அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் கூறுகையில், ஆய்வுக்காக வந்த வழக்கறிஞர்கள் எங்களிடம் எதுவும் கேட்கவில்லை.  எங்களிடம் கேட்டிருந்தால், வழக்கறிஞர்களின் வருகையையொட்டி இந்த நூலகம் இரவோடு இரவாக எப்படி தற்காலிகமாக புதுப்பிக்கப்பட்டது, எங்கெங்கு  குறைகள் மறைக்கப்பட்டுள்ளது என்பதை தெளிவாக கூறியிருப்போம் என்று வேதனையுடன் தெரிவித்தனர்.

மொட்டை மாடியின் அவலநிலை

நூலகத்தின் மொட்டை மாடியில் கழிவுநீர் தேங்கி காணப்படுகிறது. தண்ணீர் மற்றும் கழிவுநீர் பல மாதகாலமாக தேங்கி நிற்பதால் அப்பகுதி சுவர்களில்  அரிப்பு ஏற்பட்டு பல பகுதிகள் சிதிலமடைந்து காணப்படுகிறது. இதனால் மாடி சுவர்கள் இடியும் அபாயநிலையில் உள்ளன.

பயனில்லாத எஸ்கலேட்டர் லிப்ட்

நூலகத்தில் இரண்டு லிப்ட்களை தவிர மற்ற லிப்ட்கள் செயல்பாட்டில் இல்லை. அதேபோல, எஸ்கலேட்டரும் செயல் படாமல் உள்ளது. இன்று ஆய்வு  குழுவினர் வருவதை முன்னிட்டு எஸ்கலேட்டரை சரிசெய்யும் பணி வேகமாக நடந்தது. எனினும் அதனை ஆய்வு குழுவினர் வருவதற்கு முன்னால்  சரிசெய்ய முடியவில்லை. இதனால் புத்தகங்களை குறிப்பு எடுக்க வரும் மாணவர்கள் 7 மாடிகளையும் ஏறி இறங்க வேண்டிய நிலை உள்ளது.

 

Leave a Response