அப்துல்கலாம், தொண்டறத்தின் தூய உருவம்–கி.வீரமணி இரங்கல்

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி இரங்கல் அறிக்கை

அந்தோ ஏ.பி.ஜே.அப்துல்கலாம் என்ற தொண்டுமலை சாய்ந்ததே!
நம் நாட்டின் மேனாள் குடிஅரசுத் தலைவரும், ஒப்பற்ற தொண்டறத்தின் மாமலையும், இளைஞர்கள்- மாணவர்கள் இடையே எழுச்சியை ஏற்படுத்திய நாயகனுமாகிய மாண்புமிகு ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அவர்கள் இன்று (27.7.2015) திங்கள் இரவு ஷில்லாங்கில், ஒரு பொதுநிகழ்ச்சியில் உரையாற்றிக்கொண்டிருந்தபோது, மேடையில் மயங்கி விழுந்து திடீர் மாரடைப்புக் காரணமாக மருத்துவமனையில் தீவிர சிகிக்சை அளித்த நிலையில், பலனின்றி காலமானார் என்ற வேதனைமிக்க துயரச்செய்தி நம் நெஞ்சைத் துளைத்தது! (அவரது வயது 84)
எப்படிப்பட்ட மாமனிதர் கலாம் அவர்கள்! அந்தோ! நாட்டில் அறிவியல் தொழில்நுட்பம் பெரும் அளவில் வளர்ந்து, தன்னிறைவு அடைய வேண்டும் என்று கருதியதோடு, கிராமங்களுக்கும் நகர்ப்புற வசதிகள் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்பதற்கான “PURA” (Providing Urban Amenities to Rural Areas) என்ற செயல்திட்டத்தை அறிவித்த அறிவியல் மேதை.
தந்தை பெரியார் அதை 60 ஆண்டுகளுக்கு முன்பே அறிவித்தார் என்பதை அறிந்ததும் தஞ்சை வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் 69 கிராமங்களைத் தத்து எடுத்து செயல்படுத்துகிறது என்றவுடன், பெரியார் புரா என்று பெயர் சூட்டியதோடு, நமது பல்கலைக்கழகத்திற்கு 6 முறை வந்து சாதனைகளைக் கண்டுவியந்து ஊக்கப்படுத்திய வித்தகர் அவர்!
பெரிய பதவியிலிருந்து ஓய்வு பெற்றும்கூட ஒதுங்காமல் கல்லூரிகளுக்கு வந்து இளைஞர்கள்- மாணவர்களது கல்வி, வாழ்க்கை முன்னேற்றத்திற்கென்று கடைசி மூச்சுள்ள வரை வாழ்ந்தவர் என்ற பெருமைக்குரியவர் ஆவார்!
திருமணம் செய்துகொள்ளாத அவர் நாட்டு நலத்தையே தனது வாழ்க்கையின் இலக்காகக் கொண்டு வாழ்ந்து காட்டிய தொண்டறத்தின் தூய உருவம்! உழைப்பின் உருவம் அவர்! அவரது மறைவு எமக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு ஆகும்.
அவர் சுடர்விட்டு எரியும் கல்வி ஒளிவிளக்கின் திரியாக என்றும் ஒளி தரும் உருவமாய் நம் நெஞ்சில் நிறைந்துவிட்டவர்.
இன்னொரு கலாம் இனி எப்போது இந்நாட்டுக்குக் கிடைக்கப் போகிறார்? என்று மக்கள் தம் கண்ணீர்ப் பூக்கள் மூலம் நாம் அவருக்கு நமது வீரவணக்கத்தைச் செலுத்துகிறோம்.

திருச்சி
27.7.2015 தலைவர்,
திராவிடர் கழகம்

Leave a Response