பாஜக பிடியிலிருந்து தப்ப ரஜினி தரப்பு கசியவிட்ட தகவல்

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என்று அவரது ரசிகர்கள் கடந்த 23 ஆண்டுகளுக்கு மேலாக வலியுறுத்தி வருகின்றனர்.

அதனால், 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ரசிகர்கள் சந்திப்பை ரஜினிகாந்த் நடத்தினார். அப்போது, தான் அரசியலுக்கு வருவேன் என்கிற அறிவிப்பை வெளியிட்டார்.

இந்த அறிவிப்பை வெளியிட்டு, 1½ ஆண்டுகள் கடந்த விட்ட போதிலும், ரஜினிகாந்த் கட்சி தொடங்காதது அவரது ரசிகர்கள் மத்தியில் சற்று ஏமாற்றத்தையும், வருத்தத்தையும் அளித்து வருகிறது.

அவ்வப்போது, மத்திய அரசுக்கு ஆதரவாக சில கருத்துகளை ரஜினிகாந்த் தெரிவித்து வந்ததால் அவர் கட்சி தொடங்கினாலும், பா.ஜ.க.வுடன் இணைந்தே செயல்படுவார் என்றும் அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது. சமீபத்தில் சென்னையில் உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்ட விழாவில் ரஜினிகாந்த் கலந்து கொண்டு மோடி அமித்ஷா ஆகியோரைப் பாராட்டியது அக்கருத்தை வலுப்படுத்தும் விதமாக அமைந்திருந்தது.

இந்தநிலையில் தமிழக பா.ஜ.க. தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதனால் காலியான தமிழக பா.ஜ.க. தலைவர் பதவிக்கு ரஜினிகாந்த் நியமிக்கப்பட இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் திடீர் பரபரப்பு உருவானது. டெல்லி பா.ஜ.க. மேலிடமும் இதற்கான முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டது. ரஜினிகாந்திடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

பா.ஜ.க.வுடன் நெருக்கம் காட்டி வந்தபோதும், பா.ஜ.க.வின் இந்த விருப்பத்தை ரஜினிகாந்த் ஏற்க தயக்கம் காட்டி வருகிறார். இது சம்பந்தமாக தன்னைச் சந்திக்க வருபவர்களிடம் பிடிகொடுக்காமல், நழுவி வருகிறார்.

தன்னைத் தொடர்பு கொண்ட பா.ஜ.க. மூத்த நிர்வாகிகளிடம், தான் இப்போது ‘தர்பார்’ படப்பிடிப்பில் தீவிரமாக இருப்பதாகவும், தன்னுடைய ரசிகர்களின் விருப்பத்தை ஏற்று தனிக்கட்சி தொடங்கவே விரும்புவதாகவும் தன்நிலையை அவர் தெளிவுபடுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

ரஜினிகாந்த் அடுத்த ஆண்டு (2020) தை மாததத்திற்கு பிறகு தனிக்கட்சியை அறிவிக்கத் திட்டமிட்டு இருக்கிறார். அவரது நடிப்பில் உருவாகி வரும் ‘தர்பார்’ பொங்கல் தினத்தில் வெளியாகிறது. அதனை தொடர்ந்து மேலும் சில படங்களில் நடிக்க இருந்தாலும், தர்பார் பட வெளியீட்டுக்குப் பிறகு முழு நேர அரசியலில் ரஜினிகாந்த் இறங்க உள்ளார் என்று சொல்கிறார்கள்.

2020 பொங்கலுக்குப் பிறகு தனிக்கட்சி அறிவிப்பு என்கிற செய்தி ரஜினி தரப்பினர் மூலமே கசியவிடப்பட்டிருக்கிறது. பாஜக வின் பிடியில் இருந்து தப்பவே இந்த தகவல் கசிவு என்று சொல்லப்படுகிறது.

Leave a Response